Friday 11 October 2013

சைவ சமயம் அறிவியல் மையம் தகவல்



சைவம் :
காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துகள் காணப்படுகின்றன.
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடியதாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ (புறம்) ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன்’ (கலித்தொகை), ‘முக்கண்ணன் ‘(கலித்தொகை), ‘கறைமிடற்று அண்ணல்’, ‘முதுமுதல்வன்’, ‘ஆலமர் கடவுள்’ (புறம்), ‘மணிமிடற்று அண்ணல்’ (பரிபாடல்), ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்’ (ஐங்குறு நூறு)போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.
தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ எனச் சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்என்று வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகின்றார்.மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்என்று சர். ஜான் மார்ஷல் என்னும் அகழ்வாராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். மேலும் மொஹெஞ்சதரோ ஹரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறதுஎன்றும் ஜான் மார்ஷல் குறிப்பிடுகின்றார்.
சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார். காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லைஎன்று இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.
மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகளிலிருந்து, சைவம் மிகத் தொன்மையான சமயம் என்பதும், பழந்தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் என்பதும் புலப்படுகின்றன. (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/m
இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் பதின்நான்கு நூல்கள் தோன்றின.
1. சிவஞான போதம்
2. சிவஞான சித்தியார்
3. இருபா இருபது
4. திருவுந்தியார்
5. திருக்களிற்றுப்படியார்
6. உண்மை விளக்கம்
7. சிவப்பிரகாசம்
8. வினா வெண்பா
9. திருவருட் பயன்
10. போற்றிப் பஃறொடை
11. நெஞ்சுவிடுதூது
12. கொடிக்கவி
13. உண்மை நெறி விளக்கம்
14. சங்கற்ப நிராகரணம்.
இவை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தொகுப்பைத் தோத்திரங்கள் என அழைப்பர். இந்தச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவ சமயத்தின் இரு விழிகள்.
முதல் ஏழு திருமுறைகள் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ; இவை தேவாரம் என அழைக்கப்படுகின்றன.
எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் மாணிக்கவாசகர் பாடியவை. ஒன்பதாம் திருமுறையில் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா அடங்கும் ; இங்கும் ஒரு திருப்பல்லாண்டு உண்டு ; அதனைப் பாடியவர் , சேந்தனார். பத்தாம் திருமுறை இருபது நூல்களை உள்ளடக்கியது. இதில் மிகப் புகழ் பெற்ற திருமூலர் எழுதிய திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் உள்ள அதே நூல்தான்) போன்றவை உள்ளன. பதினோராம் திருமுறையில் மொத்தம் பத்தொன்பது நூல்கள் உண்டு. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.
சைவ சமயப் பெருமைகள் :
சைவத்துக்கெனப் பல பெருமைகள் உண்டு. சமயங்களில் மூத்தது என்பது முதல் பெருமை. திறமான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு ஏற்ப, வெளி நாட்டு அறிஞர்கள் கூற்றுகள் சிலவற்றைக் காண்போம்
- ஜி .யு .போப் , ” இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை என்கிறார்.
- முனைவர் கபில சுவபில் : மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே!
- H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.
நம் நாட்டு ஞானிகளும் சைவத்தைப் பெருமையாகப் பேசுகின்றனர் :
தாயுமானவர் :
சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே
சைவம் சிவனுடன் சம்பந்தமாவது (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார்.
சைவத்தின் மேற்சம யம்வே
றிலையதிற் சார்சிவமாந்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார
முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
றாளெம்மு யிர்த்துணையே !
- சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.
2) சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமேயாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர் சிவஞான சித்தியார்
தென்னானுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” - என்பது மாணிக்கவாசகர் தம் மணிவாசகம்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று உலகிற்கு உணர்த்திய சமயம் சைவம் ஒன்றே .
ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே :
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ ! - திருவாசகம் உரைக்கும் உண்மை!
விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும் என்பது அப்பர் திருவாக்கு.
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்கஎன்றார் காரைக்கால் அம்மையார்.
(‘திருவிளையாடல்படத்தில் இக்கருத்தமைந்த பாடலை ஔவையார் பாடுவதாக ஏ.பி நாகராசன் அமைத்துவிட்ட காரணத்தால் இதனைப் பாடியவர் ஔவையாரே என்று இன்றளவும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்னர். இது போலவே, ‘ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்எனச் சொன்னவர் அறிஞர் அண்ணாதுரை என்றுதம்பிகள்நம்பிக்கொண்டு உள்ளனர்.)
சைவ சித்தாந்தம் :
மனிதப் பிறவி எடுக்கும் உயிர்கள், (பசு எனச் சைவ சித்தாந்தத்தில் அழைப்பர்)
பதியாகிய இறைவனோடு இணைய முடியாமல் பாசம் என்ற தளை தடுக்கிறது. இந்தப் பசு, பதி, பாசம் என்ற முக்கோணச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.
இதனை விளக்குவனவே 12 -ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள என்பர்.
சைவச் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலர் அருளிய திருமந்திரம்., திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய திருவருட் பாடல்கள், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். முதலியவற்றைப் பன்னிரு திருமுறை என்பார்கள். இவற்றைத் தோத்திரப் பாடல்கள் என்றும் கூறுவது உண்டு. இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான் சைவ சமயம்.
3 ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே.
ஓரிறைக் கோட்பாட்டை உரைக்கும் முக்கிய சமயங்கள் : யூத மதம், கிறித்துவச் சமயம், இசுலாமிய மதம். அருவ வணக்கத்தை ஆதரிப்பவை யூத, இசுலாமிய மதங்கள்
உருவ வணக்கத்தைப் பெரும்பாலான சமயங்கள் விலக்குவதில்லை : வைணவம், கிறித்துவம், புத்தம், சமண மதங்கள். ஆனால் இவை யாவற்றையும் ஏற்பது சைவ சமயத்தின் சிறப்பாகும் ( சிவலிங்கம் உருவ அருவ வணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.)
நன்றி:பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

No comments:

Post a Comment

நன்றி