Wednesday 22 April 2015

ந‌ம் தேகமே ஸ்ரீசக்ரம்.


'சக்ர ராஜம்' என்று போற்றப்படும் ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பற்றி, தேவியின் திருவடி,பாகம் 2, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பதிவில் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்தப் பதிவினைக் கொள்ளலாம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
என்று பாடுகிறார் திருமூலர் பெருமான். நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன.
'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ... என்று சட்டைமுனிவர் பெருமான் பாடுகிறார்.

இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான   இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது. இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும், ஜீவன், பிராணன், சுக்கில தாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன. சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம்.

அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள்(நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகுப்பாகும். இதில் பஞ்சபூதங்களும் சக்தி மூலங்கள். மற்ற நான்கும் சிவ மூலங்கள் என அறியப்படுகின்றன.

ஆக, சிவ, சக்தி கோணங்கள்(மூலங்கள்) சேர்ந்த ஸ்ரீ சக்ரம், இந்த அண்டத்தையும், நம் உடலையும் ஒரு சேரக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அண்ட பேரண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் சக்தியே, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ லலிதா பரமேச்வரி. நம் உடலிலும் உலகிலும் வியாபித்திருக்கும் மஹாசக்தி அவளே.

ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அன்னையவள் அருட்காட்சியை காணும் பேறு பெற்றோரே மகான்கள்.  அம்பிகையின் திருவடிகளின் பால் திடமான பக்தி இருப்பின், நம் வினை எத்தகையதாக இருந்தாலும் அது அவளது அருட்புனலால் அடித்துச் செல்லப்பட்டு நிலையான ஆனந்தப் பெருவாழ்வினை நமக்கு வழங்கும்.
இந்த மாபெரும் பிரபஞ்சத் தத்துவமே ஸ்ரீசக்ரம். நம் உடலும் ஸ்ரீ சக்ரமும் ஒன்றே.  நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை இந்தப் பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1. ஸ்ரீ சக்ரத்தின் மையப்புள்ளியே பிந்து ஸ்தானம். இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள்செய்யும் அன்னை பராசக்தி ஆனந்த வாசம் புரிகிறாள். ஒன்றாய் அரும்பி பலவாய் விரியும் ஆதியும் அந்தமும் இல்லா அம்பிகை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அருளாட்சி செய்யும் இடமே பிந்து ஸ்தானம்.  இந்த பிந்து ஸ்தானம் சிவமூலமாக அறியப்படுகிறது. நம் உடலில், இந்த பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலை உச்சி. நம் உடலில் அமைந்துள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களின்படி பார்க்கும் பொழுது,  ஆஜ்ஞை,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..6)  ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானமாகக் கருதப்படுகிறது.
2.ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது ஆவரணமாகிய த்ரிகோணம்(முக்கோணம்) 'ஸர்வ ஸித்தி ப்ரத சக்கரம்' என்ற பெயருடன் விளங்குவதைப் பார்த்தோம். இது ஸ்ரீ சக்ரத்தின் 43வது முக்கோணம்.
இதில் 'அதிரஹஸ்ய யோகினிகள்' எனத் துதிக்கப்படும் மஹா காமேச்வரி, மஹா வஜ்ரேஸ்வரி, மஹா பகமாலினி என்ற திருநாமங்களுடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள். இவர்களின் நாயகியாக, 'திரிபுராம்பா' என்ற திருநாமத்துடன் கூடிய தேவி ரத்தின சிம்மாசனத்தில் அருளுகிறாள்.
'அதி ரஹஸ்ய யோகினிகள்' மூவரும் முறையே, இச்சாசக்தி, ஞானசக்தி கிரியாசக்தி, ஸ்வரூபிணியாக விளங்குகிறார்கள். ஸாதகனின் நியாயமல்லாத இச்சைகளை, (விருப்பங்களை) நீக்கி, ஞான ஆற்றலை மேம்படுத்தி, அம்பிகையின் அருளாற்றலைப் பெற தகுதிப்படுத்தும் சக்திகள் இவர்கள்.

நம் உடலில் தலை(சிரசு) த்ரிகோணமாக உருவகிக்கப்படுகிறது. யோக நெறியில் பார்க்கும் போது 'இந்திர யோனி'(உள்நாக்குப் பகுதி) த்ரிகோணம் என்று கருதப்படுகிறது.

அம்பிகை சிவ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பினும், ஸ்ரீ சக்ரத்தில், சிவகோணங்கள், சக்தி கோணங்கள் என இருப்பதை அறிவோம். இந்த த்ரிகோணம், சக்தி அம்சமுள்ளதாகக் கருதப்படுகிறது.

3.ஸ்ரீ சக்ரத்தின் ஏழாவது ஆவரணமான, எட்டுக்கோணங்களை உடைய ஸர்வ ரோக ஹர சக்கரத்தில் வாக்தேவதைகள், ரஹஸ்ய யோகினிகளாக வசித்து வருகிறார்கள். இவர்களின் தலைவியாக, திரிபுரஸித்தா தேவி மஹாபீடத்தில் அருளுகிறாள்.

இந்த ரஹஸ்ய யோகினிகள், ஜனனம் மரணம், பந்தபாசங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆன்மாவின் ஞானமற்ற தன்மையே 'ரோகம்' எனக் குறிக்கப்படுகிறது. இந்த ரோகத்தை(நோயை) நீக்கி, 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால் இது 'ஸர்வ ரோக ஹர சக்கரம்' எனப் பெயர் பெற்றது.

ரஹஸ்ய யோகினிகளிடமிருந்தே, காவியம், இசை, நாடகம் முதலியவை தோன்றுவதால் இவர்கள் 'வாக்தேவதைகள்' என அழைக்கப்படுகிறார்கள். 'அ' முதல் 'க்ஷ' வரையிலான அக்ஷரங்களின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள் இவர்களே. ஆகவே இவர்கள், 'மாத்ருகா ஸ்வரூபிணிகள்' எனவும் துதிக்கபடுகிறார்கள்.

நம் உடலில், 'நெற்றி' அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது. இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில், ஆதாரச்சக்கரங்களின் வழி பார்க்கும் போது, விசுத்தி,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..5) ஸ்ரீசக்ரத்தின் அஷ்டகோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.

4. ஸ்ரீ சக்ரத்தில், 'அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம் 'ஸர்வ ரக்ஷாகர சக்கரம் என்ற பெயர் பெற்றுத் திகழ்கிறது. இது ஆறாவது ஆவரணமாக அமைந்துள்ளது. இங்கு 'நிகர்ப்ப யோகினிகளும்' அவர்களின் நாயகியாக, 'திரிபுராமாலினியும்' வீற்றிருந்து அருளுகிறார்கள். இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

நம் உடலில், இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி,  உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது. ஆதாரச் சக்கரங்களில், அநாஹதம் (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..4) ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

5. ஸ்ரீசக்ரத்தில், ஐந்தாவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் 'பஹிர்த்தசாரம்' என அழைக்கப்படுகின்றன. இதில் வாசம் செய்யும் 'குலோத்தீர்ண யோகினிகளுக்கு' 'திரிபுராஸ்ரீ' என்ற திருநாமமுடைய தேவி தலைவியாக இருக்கிறாள். இந்த அம்பிகை, தங்கமயமான சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள். இந்த சக்கரம், சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும், குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. சத்குரு ஒருவரே, பரப்பிரம்ம ஸ்வரூபியாகிய தேவியை அடையும் மார்க்கத்தைக் காட்ட வல்லவர். ஆகவே, குருவை அடைதல், ஞான மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குலோத்தீர்ண யோகினிகளை, குலம், உத்தீர்ணம், யோகினிகள் என்று பதம் பிரிக்கலாம். இதில் குலம் என்பது, ஞான மார்க்கத்திற்குத் தேவையான குரு சிஷ்யப் பரம்பரையே. உத்தீர்ணம் என்பது நல்ல முறையில் விருத்தி செய்வது. யோகினிகளை தேவிகள் எனக் கொள்ளலாம். ஆக, குரு சிஷ்யப் பரம்பரையின் விருத்திக்கு அருளுவதால் இந்த தேவிகளுக்கு இத்தகைய திருநாமம் ஏற்பட்டது எனக் கொள்ளலாம். சிஷ்யனுக்கு எப்படி குரு முக்கியமோ அப்படியே, குருவுக்கும் நல்ல சிஷ்யர்கள் அவசியம். இந்த ஐந்தாவது ஆவரண பூஜை, அப்படிப்பட்ட சத்சிஷ்யர்களை குருவிடம் சேர்ப்பிப்பதோடு, குரு சிஷ்ய இணக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

மனித உடலில், கழுத்துப் பகுதி, வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. யோக நெறியில், மணிபூரகச் சக்கரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..3) ஸ்ரீசக்ரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
6.ஸ்ரீசக்ரத்தில் நான்காவது ஆவரணமாகிய  சதுர்தச கோணம்(14 முக்கோணங்கள்), சக்தி சக்கரமாகும். இந்த பதினான்கு முக்கோணங்களும் பூபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாதகன், ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை. சதுர்தச கோணம், ஈரேழு பதினான்கு உலகங்களையும் குறிப்பதாக  அமைந்திருக்கிறது.

 மாயையை அகற்றி ஆத்ம ஞானத்தை அருளுவதால் 'ஸர்வ சௌபாக்கிய தாயக சக்கரம்' என்றும் அறியப்படும் இதில், 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்னும் பதினான்கு சக்திகள் வசிக்கிறார்கள். இவர்களின் நாயகி, 'த்ரிபுரவாஸிநீ' தேவி. தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமமுடைய பரமேஸ்வரனே ஆதிகுருவாக அறியப்படுகிறார். அவர் தாமாகவோ அல்லது  குருவடிவாகவோ தோன்றி, ஜீவன் ப்ரஹ்மம் இரண்டும் ஒன்றே என்ற பேதம் இல்லாத நிலையை அருளுவதே 'ஸம்ப்ரதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்த சக்கரத்தில் வசிக்கும் சக்திகளுக்கு 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் உடலில் இதயப் பகுதி, சதுர்தச கோணத்தைக் குறிப்பதாக அறியப்படுகிறது. யோக நெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம்,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..2)ஸ்ரீ சக்ரத்தின் சதுர்தச கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

7. ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ஆவரணமாகிய எட்டிதழ் கமலம், அஷ்டதளபத்மம் எனப்படுகிறது. இது சிவமூலமாக அறியப்படுகிறது. 'ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரம்' என்றும் அறியப்படும் இதில், 'குப்ததர யோகினிகளான' எட்டு சக்திகள் வாசம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, 'த்ரிபுர ஸூந்தரி' என்ற திருநாமமுடைய தேவி. இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள்.  இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே, ப்ரகிருதி,மஹத் தத்வம், அகங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச பூதங்கள், கர்ம,ஞானேந்திரியங்கள், அந்தக‌ரணம், புருஷன்(ஆத்மா) ஆகிய யாவும் இருக்கின்றன. இந்த யோகினிகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில், தொப்புள், ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..1)  ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது.

8.ஸ்ரீசக்ரத்தின், இரண்டாவது ஆவரணமாகிய பதினாறிதழ் கமலம், ஸர்வாசா பரிபூரகச் சக்கரம் என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில், 'குப்த யோகினிகள்' என்ற திருநாமத்துடன் உள்ள பதினாறு சக்திகள் வசிக்கிறார்கள். சாதகன், இந்த ஜென்மத்தில் அனுபவித்தது போக மீதியுள்ள கர்மா நல்ல முறையிலான கர்மாவாக அமைய, இவர்கள் அருள்பாலிக்கிறார்கள். இவர்களின் நாயகி,'திரிபுரேசி' தேவியாவாள். இது சிவ சக்கரமாகும்.

நம் உடலில், இடுப்பு மற்றும் தொடைகள், ஷோடசதள பத்மமாக அறியப்படுகின்றன. யோக நெறியில், மூலாதாரத்திற்கும், பின் தொடைக்கும் இடைப்பட்ட பகுதி, ஷோடச தள பத்மமாகும்.

9.ஸ்ரீசக்ரத்தின் முதல் ஆவரணமாகிய மூன்று சதுரங்கள் கொண்ட பூபுரம், 'த்ரைலோக்கிய மோகனச் சக்கரம்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில் வாசம் செய்யும், அஷ்டமா சித்திகள்,  ப்ராஹ்மீ, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ ஆகிய அஷ்ட மாத்ருகா தேவிகள், ப்ரகட யோகினிகள்(பத்து முத்ரா சக்திகள்) முதலானோருக்கு  'த்ரிபுரா' என்ற திருநாமமுடைய தேவியே சக்ரேஸ்வரியாக விளங்குகிறாள். இது  சிவ சக்கரமாகும்

நம் உடலில், பாதங்கள், ஸ்ரீ சக்ரத்தின் பூபுரமாக அறியப்படுகிறது. யோக நெறியில், மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதி, பூபுரமாக அறியப்படுகிறது.

ஞான கணேசா சரணம் சரணம்.



இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற கேள்வி அநேகமாக பெரும்பாலோருக்கு மனதில் எழும்பியிருக்கும். அடிப்படையில், 'ஒன்றே பரம்பொருள்' என்பதே இந்து தர்மத்தின் கொள்கையும். உலகெங்கிலும் உள்ள எல்லா மதங்களின் அடிப்படைக் கோட்பாடான, 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்', ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே இந்து தர்மத்தின் அடிநாதமும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இதற்கு மாறுபட்ட, முரண்பாடுடைய  கொள்கைகள் உள்ளதாகத் தோன்றினாலும்,  ஆழமாகச் செல்லும்போது இந்த உண்மையை யாவரும் உணரலாம். 
மனிதர்கள் எல்லோரும் ஒரே விதமான மனப்போக்குக் கொண்டவர்களல்லர். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து எண்ணங்கள்,  கொள்கைக‌ள் முதலியவை மாறுபடும். இத்தகைய ஒரு நிலையில், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற்போன்ற தெய்வத்தை (உருவ) வழிபாடு செய்து, ஆன்மீகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டிய பிறகு நிர்க்குண நிராகார பரம்பொருளை வழிபடும் விதமாகவே இந்த 'பல தெய்வக் கட்டமைப்பு'  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த உருவ வழிபாட்டு முறையிலும், வழிபடுபவர் மனோ தர்மத்துக்கு ஏற்ற வகையில், அம்பிகை, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், முருகன், என்று எந்த  திருவுருவின் மீது மனம் லயிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வழிபடலாம். ஏதேனும் ஒரு தெய்வத்தை உபாசனா மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை  அன்னையாக, தந்தையாக, குருவாக, குழந்தையாக, தோழனாக, எஜமானனாக எந்த பாவனையில் மனம் லயிக்கிறதோ அந்த பாவனையில் வழிபடலாம். 
உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணரை, குழந்தையாகக் கருதி அலங்கரித்து, சின்னத் தொட்டிலிலிட்டு வழிபடலாம். கீதை உரைத்த ஞான குருவாகக் கருதி வழிபடலாம். 'சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்' என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளியது போல், எஜமான பாவத்திலும் வழிபடலாம். ஒவ்வொரு தெய்வத்தைக் குறித்த புராணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே அருளப்பட்டிருக்கின்றன. 
ஸ்ரீமத் பாகவதத்தில், யசோதைக்குக் குழந்தையாகவும், அர்ஜூனனுக்குத் தோழனாகவும், இடையர்களுக்குத் தலைவனாகவும் ஸ்ரீகிருஷ்ணர் புரிந்த லீலைகளைச் சொல்வது, எந்த பாவனையில், நம் மனம் லயிக்கிறதோ, அந்த பாவனையில் வழிபடும் மார்க்கத்தை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.
வழிபடும் முறைகளிலும், எளிய முறையில் வழிபடுவதிலிருந்து, விஸ்தாரமான பூஜா முறைகளில் வழிபடுவது வரை பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன.  மானசீக பூஜைக்கும் மிக உன்னத இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த முறையில் வழிபட்டாலும், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆத்மார்த்தமான பக்தி உணர்வு  மட்டுமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நிவேதனப் பொருள்களிலும் ஆழமான உள்ளர்த்தங்கள். பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு நிவேதனப் பொருள். பெரும்பாலும், அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய், பழங்களே நிவேதனத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. முக்குணங்களான, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையிலும் நிவேதனப்பொருள்கள் அமைகின்றன.  உதாரணமாக,  குழந்தை ரூபத்தில் வழிபடு தெய்வம் இருக்குமானால், பசும்பால், நெய், வெண்ணை முதலிய சத்வ குணம் நிரம்பிய நிவேதனம் குறிக்கப்படுகிறது.
ஒருவருக்கு துன்பம் நேரிடும்போது, அந்தத் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரை 'கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டார்' என்றே சொல்வது வழக்கம்.  பக்தர்களுக்கு ஏற்படும் சகலவிதமான துன்பங்களிலிருந்தும் கை கொடுத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வ உருவங்களுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு எனக் கரங்கள் அமைத்து வழிபடும் முறை வந்தது. சூட்சுமமாகப் பார்க்கும் போது இதற்கு வேறு விதப் பொருளும் உண்டு. அது போல், பரம்பொருளின், படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், பிரளய காலத்தில் ஒடுக்குதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் விதமாகவும், அந்த செயல்களின் சுருக்கம் மற்றும் விரிவாக்கமாகவே மூன்று, ஐந்து, ஆறு, என்று முகங்களுடையவர்களாக தெய்வ உருவங்கள் இருக்கின்றன. 
ஆனால் எத்தனை முகங்கள் அல்லது எத்தனை கரங்கள் கொண்டதாக தெய்வ உருவம் இருப்பினும், திருவடிகள் மட்டும் இரண்டு. பக்தர்கள் தம் இரு கைகளால் பற்றிக் கொண்டு வணங்க எளிதாக இருக்கும் பொருட்டே அனைத்து தெய்வ உருவங்களிலும் திருவடிகள் மட்டும் இரண்டு என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள்   அருமையாக விளக்குவார்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வாகனம். அதிலும் ஆழ்ந்த உட்பொருள். பசுபதியாகிய சிவனாருக்கு காளை வாகனம். பசு என்பது உயிர்கள் எனவும் பதி என்பது இறைவன் எனவும் பொருள்படும். அதைக் குறிக்கும் விதமாக காளை வாகனம். காக்கும் கடவுள் ஸ்ரீ விஷ்ணு, பக்தனுக்குப் பறந்து வந்து உதவுவார் என்பதற்காக கருட வாகனம். பணம் மனிதனை ஆட்சி  செய்ய வல்லது என்பதை உணர்த்துவதற்காக,  நவநிதிகளின் அதிபதியாகிய‌ குபேரனுக்கு நர (மனிதன்) வாகனம்.
மந்திரங்கள் அல்லது வழிபாட்டுத் துதிகள் எனப் பார்த்தால் அவை பெரும்பாலும் மறைமுகமாக, auto suggestion  என்பதாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இறைவனின் எல்லையற்ற‌ பலத்தை, சக்தியைப் போற்றும் அதே நேரத்தில், அவை நமது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக, எல்லையற்ற சக்தியை வழங்குவதாகவும் இருக்கிறது. நம் உள்ளிருப்பதும் இறைவன் அல்லவா?

மேற்சொன்னவற்றின் ஒரு உதாரணமாக,  ஸ்ரீ கணேசரைப் ப‌ற்றி    பார்க்கலாம். எப்போது பார்க்க நேரிட்டாலும் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்துகிற விஷயங்களில் ஒன்று யானை. அந்த யானையின்  முகத்தைக் கொண்டுள்ள கடவுள் அவர். பெரிய தலை, வயிறு, நான்கு கரங்கள், நீண்ட துதிக்கை, இவற்றுடன் கூடிய ஞானச்செல்வம் கணபதி.

பூர்ண ஞானத்தின் வடிவமாகக் குறிக்கப்படுவதால், எல்லா தெய்வங்களின் பூஜைகளிலும் முதல் பூஜை இவருக்குத்தான். தெளிந்த அறிவுச்சுடரின் முன் எந்த இருளும் நில்லாது. அது போல், எடுத்த காரியத்தில் எவ்விதத் தடங்கலும் வராமல் காப்பார் கணபதி. பெரிய தலை, இவர் ஞானத்தின் திருவுரு என்பதைக் குறிக்கிறது. அறிவு எப்போதும் நிறைவாக, ஆழமாக இருக்க வேண்டுமென்பதைக் குறிப்பதே இவரது நீண்ட துதிக்கையுடன் கூடிய யானை முகம்.

புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக கணேசரின் அவதாரம் குறிக்கப்பட்டிருந்தாலும், பார்வதி தேவி, தான் நீராடப் போகும் போது, யாரும் வராமல் காவல் காப்பதற்காக, தன் ஸ்நானப் பொடியைப் பிசைந்து உயிரூட்டிய வடிவமே விநாயகர் என்பதே பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை.
நினைவாற்றல் அதிகமுள்ளதாக சொல்லப்படுவது யானை. ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுக்கு அபரிமிதமான நினைவாற்றலும் அவசியம். அதன் காரணமாகவும் யானை முகம். தந்தங்களில்  ஒன்று ஒடிந்து காணப்படுவது, ஆணவமற்ற தன்மையைக் குறிக்க.  பெரிய வயிறு இவ்வுலகனைத்தும் அவருள் அடக்கம் என்பதைக் குறிப்பதாகும்.  மிகச்சிறிய ஊசியிலிருந்து, மிகப்பெரிய மரம் வரை தூக்கக் கூடிய சக்தி படைத்தது யானையின் துதிக்கை. அது போல், விநாயகரும், ப்ரச்னை என்ன அளவானாலும் அதிலிருந்து மீட்டுக் காக்கக் கூடிய சக்தி படைத்தவர்.
பரம்பொருளின் அருளிச் செயல்நிலைகளைக் குறிக்கும் விதமாக, கணபதியின் வடிவங்களை, 16 வித கணபதி (ஷோடச கணபதி), 32 வித கணபதி என்று வேறுபடுத்தி வழிபடுகிறோம்.
மேலும், பஞ்சமுக விநாயகர், மூன்று முகத்தோடு கூடிய விநாயகர் (த்ரிமுக கணபதி) இரண்டு முக கணபதி (த்விமுக கணபதி)  என  ஒன்றிற்கு மேற்பட்ட திருமுகங்கள் உடையவராகவும் விநாயகர் வழிபடப்படுகிறார். ஷோடச கணபதிகளில், வரத கணபதி, 10 கரங்கள் கொண்டவராகவும்,  நிருத்ய கணபதி, க்ஷிப்ர ப்ரஸாத(உள்முக வழிபாட்டை விரும்புபவர்) கணபதி முதலான திருவுருவங்களில், விநாயகர் 6 கரங்கள் கொண்டவராகவும், விக்ந கணபதி எட்டுக்கரங்கள் கொண்டவராகவும் வழிபடப்படுகிறார்.
வழிபடு முறை என்று பார்த்தால், மஞ்சள் கூம்பு முதற்கொண்டு, ஐம்பொன் விக்ரகம் வரை கணநாதரை எதில் வேண்டுமானாலும் வழிபடலாம். மிகச் சுலபமான, எளிமையான வழிபாட்டு முறைகளே அவருக்கு போதுமானது. ஆனால் விஸ்தாரமான பூஜை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், மிக விரிந்த பூஜாகல்பம் அவருக்கு. அருகம்புல், பலவித மலர்கள், இலைகள் என்று பூஜை செய்யும் பொருட்களும், முறைகளும் விரியும். கணபதியின் புகழ்பாடும் துதிகளும் அநேகம்.
நிவேதனங்களில், பிரதானமாக மோதகம் விளங்குகிறது. பூரணத்துடன் கூடிய வேக வைக்கப்பட்ட கொழுக்கட்டையே மோதகம். பரந்த உலகினுள் பூரணமாக விநாயகர் இருக்கிறார் என்பதை விளக்குவதாக இந்த நிவேதனம்.  லௌகீகமாகப் பார்த்தால், பூரணத்தின் இனிப்புச் சுவை மனச்சோர்வை விலக்கும். மேலும் வேக வைக்கப்பட்டதால் சாத்வீக குணம் நிரம்பியதாகவும் கொள்ளலாம். அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் மனதிலேயே ஞானம் குடிகொள்ளும் என்பதால், சாத்வீக குணம் தரும் நிவேதனம் பிரதானப்படுத்தப்படுகிறது.
மிக மெல்லிய மூச்சுக் காற்று, வினைப் பயனான இவ்வுடலைச் சுமந்து செல்வதைக் காட்டும் முகமாக அத்தனை பெரிய விநாயகருக்கு சிறிய மூஷிக வாகனம்.
இது போல், ஒவ்வொரு தெய்வ உருவத்திலும், ஆயிரமாயிரம் உட்பொருள்கள் உள்ளன. ஆழ்ந்த பக்தியின் மூலம், சாதகன் இவற்றை அறிந்து, பின்,  படிப்படியாக, ஆன்மீக சாதனையில் உயரும் போது,  நிர்க்குண நிராகார‌ பரம்பொருளை அறிந்து பேரின்பமெய்துகிறான். மனிதப் பிறவியின் பயனான மோக்ஷ நிலைக்கு ஒவ்வொரு ஆன்மாவையும் உயர்த்துவத‌ற்கே,  ஆன்மீக நிலையில் இப்படிப்பட்ட கட்டமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சித்ரா பௌர்ணமி பூஜை


சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நன்னாளே சித்ரா பௌர்ணமி. 
மற்ற எல்லா பௌர்ணமி தினங்களை விடவும் சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும்.
சித்ராபௌர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
சித்ரகுப்தர் புராணம்:
ஒரு சமயம், கயிலையில்  பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார்.   அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து  தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சிவபெருமான், மானிடர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியை அவருக்கு வழங்கினார். சித்ர குப்தரும் அவ்வாறே செய்யலானார்.
இவ்வாறு சித்ரகுப்தர் தோன்றிய தினமே சித்ரா பௌர்ணமி.
'சித்' என்றால் மனம், 'குப்த' என்றால் மறைவு எனவும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவபுண்ணியங்களைக் கண்காணிப்பதாலும் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.
பின்னொரு சமயம், தேவேந்திரனின் தவத்திற்கு மெச்சி, சிவபெருமான், சித்ரகுப்தரை, தேவலோகப் பசுவான காமதேனுவின் வயிற்றில் உதிக்குமாறு பணித்தார். அதன் படி, சித்ரகுப்தரும், காமதேனுவுக்கு மகனாகப் பிறந்தார்.   அவரை, யமதர்மராஜருக்கு உதவியாக, ஜீவராசிகளின் பாவபுண்ணியங்களைக் கணக்கிடும்படி சிவனார் பணிக்க, சித்ரகுப்தரும், அவ்வாறே செய்து வருகிறார்.
இது குறித்த மற்றொரு புராணக்கதை.
யமதர்மராஜர்,  தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக் கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர். அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன் தோன்றினார். காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர். அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், யமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார். இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.
சித்ரா பௌர்ணமி பூஜை:
சித்திரை மாதம் பௌர்ணமி பெரும்பாலும் சித்திரை நட்சத்திர தினத்தன்றே வரும். சித்ரா பௌர்ணமியன்று  அதிகாலை, வீடு வாசலை மெழுகி, மாக்கோலமிட வேண்டும். இல்லத்தில், தெற்கு பார்த்து வாசற்கதவு அல்லது ஜன்னல் இருந்தால் திறந்து வைத்து, அந்த இடத்தை ஒட்டி, பூஜை செய்யும் இடத்தை அமைத்தல் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தில், ஒரு ஆள் அமர்ந்திருப்பது போல, சித்ரகுப்தர் உருவை மாக்கோலமிட வேண்டும். அவரது திருக்கரங்களில் ஏடும் எழுத்தாணியும் இருப்பது போல் வரைய வேண்டும். பழங்காலத்தில், ஏட்டையும் எழுத்தாணியையும் பூஜைக்கு வைப்பார்களாம். சில வீடுகளில் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை, மாக்கோல மாவால் பாதங்கள் வரைவதும் வழக்கம்(ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு வரைவது போல்). ஆனால், சித்ரகுப்த பூஜைக்கு, 8 வடிவம் வரைந்து அதன் மேல் விரல்கள் இருக்குமாறு வரைவார்கள்.

சித்ரகுப்தரது படம் இருப்பின் அதனையும் வைத்துப் பூஜிக்கலாம்.சௌகரியப்பட்டால், கலசம் வைத்துப் பூஜிக்கலாம். இல்லாவிட்டால், சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தூப தீபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டி மனமுருகி வழிபட வேண்டும். ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவராதலால், வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், சித்ரகுப்தருக்குப் பலவண்ண வஸ்திரம் சாற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.நிவேதனத்துக்கு, தயிர்சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவை நிவேதனம் செய்ய வேண்டும்.

காமதேனுவின் திருவயிற்றில் உதித்தவராதலால், பசும்பால், தயிர் முதலியவற்றை சித்ரகுப்தருக்கு நிவேதிப்பதில்லை. அன்றைய தினம் விரதமிருப்போர், உப்பு, பசும் பால்,  தயிர் முதலியவற்றை உட்கொள்வதுமில்லை. எருமைப் பால், எருமைத் தயிர் முதலியவையே நிவேதனம். அபிஷேகத்திற்கும் பசும் பால் உபயோகிப்பதில்லை. அன்றைய தினம் எருமைத் தயிர் உபயோகித்து செய்த தயிர் சாதத்தை  பிரசாதமாக‌ விநியோகிப்பது வழக்கம்.
பூஜையுடன் கூட விரதமும் எடுப்பதானால், பெரும்பாலும் ஹவிஸையே நிவேதனத்துக்குப் பயன்படுத்துவார்கள். 'ஹவிஸ்' என்பது, சாதம் கொதிக்கும் பொழுது அதில் ஒரு கரண்டி நெய்யை ஊற்றித் தயாரிக்கப்படுவது. இது மிகவும் விசேஷமான நிவேதனமாகும். விரதம் எடுக்காவிட்டால் கூட, இதை நிவேதனத்திற்குப் பயன்படுத்தலாம்.
பூஜை முடிந்ததும், நெல், கோதுமை, எள், பயறு, உளுந்து, கடலை, காராமணி, துவரை அல்லது துவரம் பருப்பு, கொள்ளு முதலிய நவ தானியங்கள், மட்டைத் தேங்காய், கொத்துடன் மாங்காய் அல்லது இரண்டு மாங்காய்கள், தாம்பூலம் தக்ஷிணை முதலியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். சித்ரகுப்தரது புராணத்தை வாசிப்பது பூஜையின் முக்கிய அம்சமாகும்.
அன்று மாங்காய், மாம்பழம், வாழைப்பழம் முதலியவற்றை உணவில் சேர்க்கலாம். சிறியவர்கள், பெரியவர்கள் யாரானாலும், பூஜை செய்ய இயலாதவர்களானாலும் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது மிகச் சிறப்பு.
சித்ரா பௌர்ணமி விரதம்:
சித்ரா பௌர்ணமி விரதம் எடுப்பதானால், ஒரு சித்ராபௌர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு மாதமும், பௌர்ணமியன்று மேற்கூறியவாறு பூஜை செய்து உப்பில்லாமல் சாப்பிட்டு விரதமிருக்க வேண்டும்(மொத்தம் பன்னிரண்டு பூஜைகள்). அடுத்த சித்ரா பௌர்ணமியன்று விரதத்தை முடிக்கலாம். சௌகரியப்படாவிட்டால், நடுவில் ஏதேனும் ஒரு பௌர்ணமி தினத்தில் முடிக்கலாம்.

விரதம் எடுப்பதற்கு என விசேஷமாகப் பூஜைகள் இல்லை. மேற்கூறியவாறே பூஜை செய்து ஆரம்பிக்கலாம். ஆனால் விரத நிறைவு தினத்தன்று, வழக்கமாகச் செய்யும் பூஜையைச் செய்து விட்டு, ஐந்து கலசங்களை வைத்து, கலச பூஜை செய்ய வேண்டும்.  ஐந்து வைதீகர்களுக்கு பஞ்ச தானம்(வேஷ்டி, தீர்த்த பாத்திரம், தீபம், மணி, புத்தகம்) முதலியவற்றைத் தானம் செய்து விட்டு அவர்களுக்கு உணவிட வேண்டும்.
சித்ரா பௌர்ணமி விரத மகிமை:
சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் வழிபாடுகள், எல்லா தேவர்களையும் திருப்தியடையச் செய்கின்றன. சித்ரகுப்தர், இந்த பூஜையால் அகமகிழ்ந்து, அதன் காரணமாக, பூஜை செய்பவரது பாவ புண்ணியங்களை பரிவுடன் தீர்மானிக்கிறார். இதை விளக்கும் ஒரு புராணக் கதை பின்வருமாறு.....
ஒரு சிறுவனுக்கு முரட்டுத் தனம் அதிகமாக இருந்தது. அவனுக்குப் படிப்பும் வரவில்லை.  நாளாக ஆக அவன் கெட்ட பழக்கங்களும் கூடிக் கொண்டே போயின. அவன் தாய் மிகக் கவலை கொண்டாள். மகனை அழைத்து, 'மகனே!!, சித்ரகுப்தய நம: எனத் தினமும் சொல்லி வா. சித்ரகுப்தர் உனக்கு நல்வழி காட்டுவார்' என்று கூறினாள். அவனும் அவ்வாறே கூறி வந்தான். அவன் வளர்ந்து பெரியவனானான். அவனுக்கு, அந்திமக் காலம் நெருங்கியது. சித்ரகுப்தர் அவன் ஏட்டைப் புரட்டினார். தனது பெயரைக் கூறிய ஒரு நல்ல செயலைத் தவிர அவன் ஏதும் செய்யவில்லை என அறிந்தார். அவன் மேல் இரக்கம் கொண்டார். அவனுக்கு இன்னும் ஏழு நாளில் மரணம் சம்பவிக்க இருந்தது.
சித்ரகுப்தர் அவன் கனவில் தோன்றி,' நீ உன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியமும் செய்யவில்லை.  இன்னும் ஒரு வாரமே உனக்கு ஆயுள். ஆகவே, நீ உன் நிலத்திலொரு குளம் வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் உனக்கு33/4 நாழிகை சொர்க்க வாசம் உண்டு. நிறைய மாடுகள் நீர் அருந்தினால் சொர்க்க வாசம் நிரந்தரமாகும். பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் நித்யவாசம் செய்கிறார்கள். நீ இறந்ததும், தர்மராஜரின் சபைக்கு அழைத்து வரப்படுவாய். நீ முதலில் சொர்க்க வாசம்  அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசம் அனுபவிக்கிறாயா? என்று யமதர்மராஜர் கேட்பார். நீ, சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொல்லிவிடு' என்று கூறினார்.

சித்ரகுப்தரின் அறிவுரைப்படி அவனும் ஒரு குளம் வெட்டினான். ஆறு நாட்கள் வரை அதில் நீர் வரவில்லை. அவன் செய்த பாவங்கள் அவனுக்குத் தடையாக நின்றன. ஏழாம் நாள், சித்ரகுப்தரின் கருணையால், அதில் ஒரு ஊற்று தோன்றியது. சித்ரகுப்தரே, ஒரு மாடாக ஓடி வந்தார். அதன் கரையில் நின்று, 'மா' என்று குரல் கொடுத்தார். உடனே, நிறைய  மாடுகள் ஓடி வந்தன. அதில் ஒரு மாடு அந்த குளத்து நீரை அருந்தியது.

உடனே, அந்த பாவியின் உயிர் பிரிந்தது. அவன் தர்மராஜ சபைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் பாவ புண்ணியக் கணக்குகளை அறிந்த யமதர்மராஜர், அவனை 'முதலில் சொர்க்க வாசம் அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசமா?' எனக் கேட்க, அவனும் தான் முதலில் சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொன்னான்.

அதன்படி, முதலில் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். பூவுலகில் அவன் வெட்டிய குளத்தில் நீர் ஊற ஊற மாடுகள் வந்து நீர் குடித்த வண்ணம் இருந்தன. அவன் புண்ணியக் கணக்கும் ஏறிக் கொண்டே இருந்தது. அவன் சொர்க்கத்திலேயே நிரந்தரமாக இருக்கலானான்.
தன் நாமத்தை உச்சரித்ததற்காக மட்டுமே ஒருவனுக்கு சொர்க்க வாசம் வழங்கினாரென்றால்,  சித்ரகுப்தரது கருணையையும் சித்ரகுப்த பூஜையைச் செய்வதன் மகிமை எத்தகையது என்பதையும்  நாம் உணரலாம்.
புனர் பூஜை:
பூஜை முடிந்த தினத்தன்றோ அல்லது மறுநாள் காலையிலோ, இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம், கற்பூரம் காட்டி, சித்ரகுப்தரை இருப்பிடம் சேர வேண்டிப் பிரார்த்தனை செய்து, பூஜை செய்த படத்தை அல்லது கலசத்தை வடக்காக நகர்த்தி வைக்கவும். சித்திரத்தில் பூஜை செய்திருந்தால், நகர்த்துவது போல் பாவனையாகச் செய்யவும்.

இவ்வாறு முறையாகப் பூஜிப்பவர்களுக்கு, சித்ரகுப்தர் அருளால், இகபர நலன்கள் யாவும் கிடைப்பது உறுதி.
சித்ரா பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு.
அம்பிகையின் அம்சமாக, சந்திர பகவான் கருதப்படுவதால், பொதுவாக,  எல்லா பௌர்ணமி தினங்களிலுமே, அம்பிகைக்கு பூஜைகள், வழிபாடு முதலியவை செய்வது வழக்கம்.  சித்ரா பௌர்ணமி தினம், அம்பிகைக்கு உகந்த ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி முதலியவை பாராயணம் செய்து பூஜிப்பது சிறப்பு. திருவிளக்கு பூஜையும் செய்யலாம். திருவிளக்கு பூஜை செய்யும் முறைக்கு இங்கு சொடுக்கவும்.
கடம்பவனம் எனப் புகழ்பெற்ற மதுரையில், தன் பாவச் சுமை நீங்கும் பொருட்டு, இந்திரன் சிவனாரை வழிபாடு செய்த நன்னாளே சித்ராபௌர்ணமி. அங்கு எழுந்தருளியிருக்கும் சுயம்பு மூர்த்தியின் விமானத்திற்கு இந்திர விமானம் என்றே  பெயர்.

சித்ராபௌர்ணமி தினத்தில் சிவனாரை வழிபடுவது அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். அன்றைய தினத்தில் சிவனாருக்கு, வில்வம், மருக்கொழுந்து முதலியவைகளால் அர்ச்சனை செய்து சுத்த அன்னம் நிவேதித்து வழிபடுவது சிறப்பு. பெரும்பாலான சிவத் தலங்களில் அன்றைய தினம், ஐப்பசி பௌர்ணமி தினம் போல அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் ஜெயந்தி மகோத்சவமும் சித்ராபௌர்ணமி தினத்தன்றே கொண்டாடப்படுகின்றது.

ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரையின் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணும் பொருட்டு, கள்ளழகர் பெருமான், வைகையாற்றில் இறங்கும் நன்னாள் சித்ராபௌர்ணமியே. அன்றைய தினம் அழகர் பெருமான் அணிந்திருக்கும் பட்டின் நிறமே, அந்த வருடத்தின் மழைப் பொழிவையும், விவசாயத்தையும் கணிப்பதற்கு உதவுகிறது. பச்சை வண்ணப் பட்டில் அழகர் பெருமான் வைகையாற்றில் இறங்கினால், மழை பொழிவு சிறந்து, விவசாயம் செழிப்பதாக ஐதீகம். வெண்பட்டு, அமைதியையும் சுபிட்சத்தையும் குறிக்கிறது.


இவ்வாறு சிறப்புகள் பல பொருந்திய சித்ராபௌர்ணமி தினத்தன்று இறைவழிபாடு செய்து, நலம் பல பெறுவோம்.

ஸ்ரீ குரு கீதை.


குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர: |
குருரேவ பரம் ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவே ப்ரஹ்மா, குருவே விஷ்ணு, குருவே அனைத்திற்கும் தேவனான பரமேச்வரன். குருவே சாக்ஷாத் பரப்ரம்மம். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.

ந குரோரதிகம் தத்த்வம் ந குரோரதிகம் தப: |
ந குரோரதிகம் ஞானம் தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவைக் காட்டிலும் உயர்ந்த தத்வம் ஒன்றில்லை. குருவைக் காட்டிலும் உயர்ந்த தவம் ஒன்றில்லை.குருவைக் காட்டிலும் உயர்ந்த ஞானமொன்றில்லை.அப்பேர்ப்பட்ட ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.
(ஸ்ரீகுரு கீதை)
 'கீதை' என்னும் சொல் பொதுவாக ஸ்ரீமத் பகவத் கீதையையே குறிக்கும். ஆனால் 26 வகையான கீதைகள் இருக்கின்றன. அவற்றில் சில, கபில கீதை (இதன் சாரத்தை, சாங்கிய யோகம் பதிவில் காணலாம்), வியாச கீதை, உத்தவ கீதை, குரு கீதை, ஹம்ஸ கீதை, சிவ கீதை முதலானவை.  இவற்றில் ஸ்ரீகுரு கீதையைப் பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் காணலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர், நம்மைப் பெறாமல் பெற்று, ஞானாசானாக நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை நமக்குக் காட்டிக் கொடுத்து, நம் வாழ்வின் பயனை அடையச் செய்யும் சத்குருநாதனே ஆவார். குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

நமக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் அனைவரும் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள்.   ஆனால் யாரொருவர் 'நாம் யார்?' என அறியும் ஞானப் பாதையின் கதவுகளை ஒருவருக்குத்  திறந்து வைக்கிறாரோ அவரே 'ஸத்குரு' என்னும் திருநாமத்தால் அறியப்படுபவர்.

நம் ஆன்ம முன்னேற்றத்திற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் ஞான குருமார்கள் நம்மைக் காக்கும் கவசம் போன்றவர்களே.
நல்ல குருவை அடைவது என்பது நிச்சயம் நம் பூர்வ புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும். அப்பேர்ப்பட்ட சத்குருவை அடைந்தவர்கள், நிச்சயம் பாக்கியவான்களே. நல்ல குருவுக்கான தேடல், நம் ஆழ்மனதில் ஆழப் பதிந்திருக்கும் பட்சத்தில், நம் கர்மவினைக் கட்டுக்கள் உடைந்து, நல்ல குருவை கண்டடையும் பேறு தானாக சித்திக்கும்.
'குரு' என்பவர், தந்தைக்குச் சமானமாகவும், குருவின் மனைவி, தாய்க்குச் சமமாகவும், குருவின் குழந்தைகள், சகோதர சகோதரியருக்குச் சமானமாகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பது வேதவாக்கியம். அகக்கண்களைத் திறந்து வைத்து, அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் உள்ளத்தில் ஞான ஒளியேற்றி, இகபர நலன்களனைத்தும் ஒருவருக்குக் கிடைக்க உதவுபவர் குருவே ஆவார்.
நம் இந்து தர்மத்தில், ஆசாரியர்களுக்கும், குருமார்களுக்கும் இருக்கும் சிறப்பு அளவிடமுடியாதது. குரு சிஷ்ய பரம்பரை, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில்,  குலதெய்வம் போல் குருபீடமும் இருக்கிறது.  நம் சனாதன மதத்தின் நிலையான தூண்களான வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள்,  தரிசனங்கள் யாவும், குருமுகமாகவே, வழிவழியாக உபதேசிக்கப்பட்டு, நம்மை அடைந்துள்ளன. பழங்காலத்தில், குருவின் இல்லத்திலேயே சிஷ்யர்கள் தங்கியிருந்து, குருவுக்கு பணிவிடைகள் செய்து, அவர்களிடமிருந்து கல்வி கற்பது வழக்கம். 

நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச் சக்கரங்களில், சஹஸ்ராரத்திற்கு 
(பதிவைக் காண்க)சற்றுக் கீழாக அமைந்துள்ள ஒரு சக்கரத்தின் திருநாமம் 'குரு'. இது பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. இது மத்தியில், ஸ்ரீகுருவின் மஹாமந்திரமும், திருவடிகளும் விளங்குகிறது. இந்தச் சக்கரத்தை அடைந்த பின்பே, சஹஸ்ராரத்தை அடைந்து, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப நிலையை அநுபவிக்க முடியும்.
சொல்லில் அடங்கா மகிமை பொருந்திய குருவின் சிறப்புகள், அவரைப் பூஜிக்கும் முறை, சத்குருவை அடைந்தவர்  பெறும் நன்மைகள் என அனைத்தையும் தெளிவாக உரைக்கும் நூலே 'ஸ்ரீ குரு கீதை'. இது வியாச மகாமுனிவரால் இயற்றப்பட்டது. இது புராணங்களில் பெரியதான 'ஸ்காந்த புராணத்'தில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ உமாமகேஸ்வர சம்வாத(உரையாடல்) ரூபமாக அமைந்துள்ளது. 182 ஸ்லோகங்களைக் கொண்டதாக ஸ்ரீகுருகீதை அமைந்துள்ளது.

ஸ்ரீ குருகீதையை, ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்கு, அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், உபதேசித்தார். அவர்கள் மூலமாக, இந்த அரிய துதியானது உலகமெங்கும் பரவலாயிற்று.

'தினமும் காலையில், நம் ஆன்ம முன்னேற்றத்திற்காக, நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் சத்குருநாதரை, நம் சிரத்தில், வரத, அபய முத்திரைகளோடு கூடிய கரங்களை உடையவராக தியானிக்க வேண்டும். அவரையே எல்லா தேவர்களின் ஸ்வரூபமாகக் கருதி, மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். அவருடைய பாதாரவிந்தங்களில் இருந்து பெருகி ஓடும் தீர்த்தம், சதா சர்வகாலமும் நம் சிரத்தில் விழுந்து கொண்டு இருப்பது போலக் கருதி வணங்க வேண்டும். அந்த தீர்த்தமானது, நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துவதாகப் பாவனை செய்ய வேண்டும். இதனால், உள்ளம் துலங்கி, மாசு மறுவற்ற ஸ்படிகம் போல் ஆகிறது' என்று குருகீதையின் த்யான ஸ்லோகம் கூறுகிறது.
இனி, ஸ்ரீகுருகீதையில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனுக்கு இடையில் நடந்த உரையாடல் ரூபமாக இருக்கும் சில ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

திருக்கயிலையில், பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம், 'ஸ்வாமி, சரீரத்தில் பற்றுதல் இருக்கும் ஜீவன், எந்த சாதனத்தினால், பரம்ம ஸ்வரூபத்தை அடைவான்?. அதை எனக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் தங்களை அடிபணிகிறேன்' என வேண்ட, ஸ்ரீ பரமேஸ்வரனும், உலக நன்மைக்காக மலைமக‌ளால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியால் மிகுந்த சந்தோஷமடைந்து, பின்வருமாறு கூறலானார்.

யோ குரு: ஸ சிவ: ப்ரோக்தோ ய: சிவ: ஸ குரு; ஸ்ம்ருத:
"யார் குருவோ அவரே ஈஸ்வரன். யார் ஈஸ்வரனோ அவரே குரு"

இவ்வாறு, துவங்குகிறார், அகிலத்தின் முதல் குருவான சாக்ஷாத் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீபரமேஸ்வரன்.  தொடர்ந்து அவர் திருவாய்மலர்ந்தருளும் அமுத மொழிகளில் சில.
சோஷணம் பாபபங்கஸ்ய தீபனம் ஞான தேஜஸ: |
குரோ: பாதோதகம் தேவி ஸ்ம்ஸாரார்ணவதாரகம் ||
தேவி!!, ஸத்குருவினுடைய பாதோதகம்(பாதங்களை அலம்பிய நீர்) பாவம் என்னும் சேற்றை வற்ற அடிக்கிறது. ஞான தேஜஸை விளக்குகிறது. ஸம்ஸார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கிறது.

குருமூர்த்திம் ஸம்ரேந்நித்யம் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோராக்ஞாம் ப்ரகுருவீத குரோரந்யம் ந பாவயேத் ||
குருவின் திருவுருவை எப்போதும் ஸ்மரணை செய்ய வேண்டும். குருவின் திருநாமத்தை எந்நேரமும் ஜபிக்க வேண்டும். குருவின் கட்டளைப்படியே நடக்க வேண்டும். குருவைத் தவிர வேறொன்றையும் நினைக்கலாகாது.
அநேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மகோடி விதாஹினே |
ஞானானலப்ரபாவேன தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||

யார் தன்னுடைய ஞானாக்னியின் மகிமையினால், சிஷ்யர்கள் தங்கள் ஜென்மஜென்மாந்திரங்களில் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான கர்மாக்களை தகிக்கிறாரோ அத்தகைய ஸ்ரீஸத்குருவிற்கு நமஸ்காரம்.

த்யானமூலம் குரோர்மூர்த்தி: பூஜாமூலம் குரோ:பதம் |
மந்த்ரமூலம் குரோர்வாக்யம் மோக்ஷமூலம் குரோ: க்ருபா ||
தியானத்திற்கு மூலம் குருவின் திருவுருவம். பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள். மந்திரங்களுக்கு மூலம் குருவின் உபதேச மொழிகள். மோக்ஷத்திற்கு மூலம் குருவின் கிருபையே ஆகும்.

இவ்வாறு பலப்பல ஸ்லோகங்களால் குருவின் மகிமை விளக்கப்பட்டு, இறுதியில், பரப்பிரம்ம ஸ்வரூபமே குரு என்பதாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் ஸ்ம‌ராமி
ஸ்ரீமத் ப்ரப்ரம்ஹ குரும் பஜாமி |
ஸ்ரீமத்பரப்ரம்ஹ குரும் வதாமி 
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் நமாமி ||
ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை ஸ்மரணை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை பஜனை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவின் விஷயமாகவே பேசுகிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை நமஸ்கரிக்கிறேன்.

நித்யம் சுத்தம் நிராபாஸம் நிராகாரம் நிரஞ்ஜனம் |
நித்யபோத சிதானந்தம் குரும் ப்ரஹ்ம நமாம்யஹம் ||
நித்யமானவரும், சுத்தனும், மாறுபாடற்றவரும், உருவம் அற்றவரும், நிர்மலமானவரும், நித்யபோதரூபனும்,  சிதானந்த ஸ்வரூபமாக விளங்குபவருமான ஸ்ரீஸத்குரு எனும் பரம்பொருளை வணங்குகிறேன்.
அதன் பின், குருவை தியானிக்கும் முறை, அவரிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து உபதேசிக்கிறார் எம்பெருமான்  . அவற்றுள் சில...
ஹூங்காரேண ந வக்தவ்யம் ப்ராஜ்ஞை: சிஷ்யை; கதாசன |
குரோரக்ரே ந வக்தவ்யமஸத்யம் ச கதாசன ||
சிஷ்யர்கள், மிகப்பெரிய வித்வான்களாக இருப்பினும், குருவின் எதிரில் 'ஹூம்' காரத்தினால் பேசலாகாது (கர்வம் கொண்டு பேசலாகாது என்பது கருத்து). குருவின் சந்நிதானத்தில், சத்தியமல்லாததை ஒருபோதும் பேசலாகாது.
பாதுகாஸன சய்யாதி குருணா யததிஷ்டிதம் |
நமஸ்குர்வீத தத்ஸர்வம் பாதாப்யாம் ந ஸ்ப்ருசேத் க்வசித் ||
குரு உபயோகிக்கும் பாதுகைகள், படுக்கை, இருக்கை முதலானவற்றுக்குக் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும். அவைகளை ஒருபோதும் காலால் மிதிக்கலாகாது.
நிறைவாக, ஸ்ரீ பரமேஸ்வரன், பார்வதி தேவியிடம், 'தேவி, இதுவரை, நான் முக்தனுடைய இலக்கணம், குரு பக்தி, தியானம் ஆகியவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் என் இருதயத்தில்,  சதாசிவத்தை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை  சதா அனுஸந்தானம் செய்து கொண்டிருக்கிறேன். நீயும், குருவான என்னை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை பக்தியுடன் சொல்லுவாயாக' என்றுரைக்கின்றார்.

குரு கீதையின் பலஸ்ருதி(பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்) பற்றியும் பரமேஸ்வரனானவர் கீழ்வருமாறு கூறுகிறார்.

'மனிதர்களால், இந்த குரு கீதை பக்தியோடு கேட்கப்பட்டால் அல்லது பாராயணம் செய்யப்பட்டால், அல்லது தானம் செய்யப்பட்டால், ஸம்ஸார பந்தம் அடியோடு நீங்கிவிடும். குரு கீதையின் ஜபத்தினாலேயே அநேக விதமான பலன்கள் கிட்டும். மற்ற மந்திர ஜபங்களுக்கு இதன் மகிமையில் பதினாறில் ஒரு பங்கு அளவு கூட இல்லை. இது அனைத்துப் பாவங்களையும் நீக்குகிறது. எல்லா சித்திகளையும் தர வல்லது. இதை புருஷர்கள், ஸ்த்ரீகள் யாவரும் பாராயணம் செய்யலாம். பஞ்சாயதன மூர்த்திகளில் (கணபதி, சிவன், அம்பிகை, சூர்யன், விஷ்ணு, முருகன்) யாரை உபாசித்தாலும்,  இதைப் பாராயணம் செய்யலாம்'.

மேலும் என்னென்ன பலன்களை விரும்புவோர் எந்த விதமான முறையில் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் விளக்கமாகக் கூறுகிறார். உதாரணமாக, உள்ள அமைதியை விரும்புவோர் வெண்மை நிற ஆடையை அணிந்து குருகீதையை ஜபிக்க வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது.

யாரையெல்லாம் குருவாக ஏற்கக் கூடாதென்றும் குரு கீதையில் கூறப்பட்டுள்ளது.

'ஞானமில்லாதவனும், 'தானே குரு' என்பதாக நினைத்துக் கொண்டிருப்பவனும், பொய் சொல்பவன், மோசம் செய்பவன், முதலானோர்களும் ஆத்ம ஞானத்தை அடைய முடியாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறரை ஞான மார்க்கத்தில் செலுத்த முடியும்?. ஆகவே இவர்களை குருவாக ஏற்கக் கூடாது' என்று சொல்கிறது குரு கீதை.
இவ்விதம் குருவின் மகிமை குறித்து விளக்கமாக உரைக்கிறது ஸ்ரீ குரு கீதை.

இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது, ஸ்ரீகுருவின் சரணாரவிந்தங்களே. எத்தனையோ குருமார்கள் இந்த ஞான பூமியிலே. அவரவர் மனதிற்கு இசைந்த வழிகளில், சத்குருவை தேர்ந்தெடுத்து, பின் அவரை விடாது பின்பற்றினோமானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனின் திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம்.
தெளிவு குருவின் திருமேனி காணல் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம்

அம்பரீஷ சரிதம்




பக்தி  என்பது பூர்வபுண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது. க‌டும் வெயிலில் குடை போல்,  இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும். நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம் தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.
'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.
மிகச் சிறந்த பக்திமான்களின் சரிதங்கள் நமக்கு எப்போதும் உற்சாகமூட்டி நம்பிக்கை அளிப்பவை. அவர்களுக்கு நேர்ந்த சோதனைகளும், அவற்றை, பக்தியின் சக்தியால் அவர்கள் வெற்றி கொண்ட விதமும் படிக்குந்தோறும் நம்மைப் பண்படுத்தி, உயர்த்தக்  கூடியவை. அப்பேர்ப்பட்ட பக்திமான்களுள் ஒருவரான அம்பரீஷனின் சரிதத்தை இந்தப் பதிவில் நாம் காணலாம்.

வைவஸ்வத மனுவின் பத்தாவது புதல்வன் நபாகன். நபாகனுடைய குமாரன் நாபாகன். நாபாகனின் மைந்தனே அம்பரீஷச் சக்கரவர்த்தி .


மச்சாவதாரம் நிகழ்ந்த சமயத்தில், அந்நிகழ்வுக்குத் துணை புரிந்த சத்யவிரதனே வைவஸ்வத மனுவானார். மச்சாவதாரப் புராணம் குறித்த செய்திகளுக்கு கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள் பதிவைப் பார்க்கவும்.(மத்ஸ்ய ஜெயந்தி....மே 7, செவ்வாய்க்கிழமை).

அம்பரீஷர், ராஜரிஷி எனப் போற்றப்பட்டவர். மிகச் சிறந்த பக்திமான்.  இப்பூவுலகு முழுவதையும் ஒரு குடையின் கீழ் அரசு புரிந்து, நிகரற்ற செல்வத்தை அடைந்திருந்த போதிலும், அதன் காரணமாக, எவ்வித மதி மயக்கமும் அடையாதவர். பகவான் வாசுதேவனிடத்தில் அசையாத பக்தி பூண்டவர். பகவானின் பரம பக்தர்களான பாகவதர்களை மிகவும் மதித்துப் போற்றி பூஜிப்பவர்.

பற்றின்றி, தான் செய்யும் எல்லாவிதமான செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து, ஒருமைப்பட்ட மனதுடன் பக்தி செய்த அம்பரீஷர‌து பக்திக்கு மெச்சி, பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஆயிரம் முனைகளுடைய தம் சுதர்சன சக்கரத்தை அவரைக் காக்கும் பொருட்டு அவருக்கு அளித்து அருளினார்.

த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோsஸ்ய‌
பக்த்யைவ தேவ நசிராதப்ருதா: ப்ரஸாதம் |
யேனாஸ்ய யாசனம்ருதேsப்ய பிரக்ஷணார்த்தம்
சக்ரம் பவான் ப்ரவிததரா ஸ ஹஸ்ரதாரம் || 
(ஸ்ரீமந் நாரயணீயம்)
(தேவ தேவா!!, எல்லாச் செயல்களையும் உம் பிரீதிக்காகவே செய்து வந்த அவரை(அம்பரீஷனை) மெச்சி, அவருக்கு அருள் புரிந்தீர். அவரைக் காக்கும் பொருட்டு, அவர் பிரார்த்திக்காமலேயே, ஆயிரம் கூரிய நுனிகளை உடைய சுதர்சன சக்கரத்தை அளித்தீர்.)
அம்பரீஷர், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிக உகந்த த்வாதசீ ((ஏகாதசி) விரதத்தை ஒரு வருட காலம் அனுஷ்டிக்க நிச்சயித்து, அவ்வண்ணமே, அந்த உயர்ந்த விரதத்தை, ஒத்த மனதினளான தம் பத்னியுடன் அனுஷ்டித்தார். ஒரு வருடம் கழித்து, கார்த்திகை மாதம் விரதம் நிறைவடையும் சமயத்தில், மூன்று நாட்கள் உபவாசம் இருந்து, யமுனா நதியில் நீராடி, மது வனத்தில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தார். அறுபது கோடி கோதானம் செய்து பகவானை ஆராதித்தார். பகவானின் பக்தர்களையும் பூஜித்தார்.
பின் பூஜையில் பங்கேற்ற  அனைவருக்கும் சிறந்த உணவை வழங்கி, அவர்கள் யாவரும் உண்ட பின், அவரவர் வேண்டிய பொருளை தானமாக அளித்து, பின் அவர்கள் அனைவரின் அனுமதியையும் பெற்று, பாரணை  (விரத நிறைவு) செய்ய முற்பட்டார்.
அந்தச் சமயத்தில் துர்வாஸ மஹரிஷி எழுந்தருளினார். எளிதில் கோப வசப்பட்டு பிறரைச் சபிக்கும் சுபாவமுடையவர் துர்வாஸர்.
துர்வாஸரைக் கண்ட அம்பரீஷர், ஓடிச் சென்று அவரைத் தகுந்த முறையில் உபசரித்தார். அவருக்கு ஆசனமளித்து மரியாதைகள் செய்து, உணவு உண்ண வேண்டினார். அதை ஏற்ற துர்வாஸரும், தாம் யமுனையில் நீராடி விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.
யமுனையில் நீராடிய துர்வாஸர், கண்களை மூடி பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இங்கே நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. த்வாதசீ திதி நிறைவடையும் நேரத்திற்குள் அம்பரீஷர் பாரணை செய்தாக வேண்டும். அப்போதே இந்த ஒரு வருட காலமாக அனுஷ்டித்து வந்த விரதம் நன்முறையில் நிறைவும் பெறும். ஆனால், துர்வாஸரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் கவலை கொண்ட அம்பரீஷர், தம் குருமார்களுடன் கலந்தாலோசித்தார். 'த்வாதசீ திதி நிறைவடைவதற்குள் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். அவ்வாறு அருந்துவது  பாரணை செய்ததற்குச் சமம். அதே வேளையில் அதிதியாகிய துர்வாஸ மஹரிஷியை விட்டுவிட்டு உணவருந்திய பாவத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம்' என்று அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றார்.
அவ்வாறே பாரணை செய்து விட்டு, துர்வாஸ மஹரிஷியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.
துர்வாஸ மஹரிஷி வந்தவுடன், தகுந்த முறையில் உபசரித்தார். ஆனால் துர்வாஸரோ, தம் ஞானதிருஷ்டியின் மூலமாக, அம்பரீஷர் செய்ததைத் தெரிந்து கொண்டார். மிகுந்த கோபம் கொண்டு, 'அதிதியான‌ என்னை போஜனம் செய்ய அழைத்து விட்டு, எனக்கு உணவளிக்காமல், தான் மட்டும் உண்டு விட்ட உனக்கு அதன் பலனைத் தருகிறேன் பார்' என்று விட்டு, தம் ஜடாமுடியிலிருந்த ஜடை ஒன்றைக் கிள்ளி, கீழே எறிந்தார். அது ஒரு மிகக் கொடிய பிசாசாக உருவெடுத்தது.
அதைக் கண்டு சிறிதும் அம்பரீஷர் மனங்கலங்கவில்லை. தம் இடம் விட்டு அசையாது நின்றார். ஆனால் அவரைக் காக்க பகவானால் அருளப்பட்ட  சக்ராயுதம் அந்தப் பிசாசைத் தாக்கி, அதைப் பொசுக்கி விட்டு, பின் துர்வாஸரை நோக்கிப் பாய்ந்தது. 
துர்வாஸர் ஓட ஆரம்பித்தார்.  எங்கு சென்றாலும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவரை விடாமல் துரத்தியது. துர்வாஸர் சத்ய லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரைச் சரண் புகுந்தார். அவரோ,   சக்ராயுதத்தை தம்மால் மீற முடியாதென்று சொல்லி விட்டர். பின் துர்வாஸர் கைலாயத்தை அடைந்தார். சிவனார், ஸ்ரீவிஷ்ணுவையே சரணடையுமாறு ஆக்ஞாபித்தார். (சில புராணங்களில், சக்ராயுதம், பிசாசைத் துரத்த, அது பயந்து ஓடி, ஒரு கட்டத்திற்கு மேல், கோபமடைந்து தன்னை ஏவிய துர்வாஸரைத் துரத்தத் துவங்கியதாகவும், பிசாசு, சக்ராயுதம் இரண்டாலும் துரத்தப்பட்ட துர்வாஸர் பிரம்மதேவரைச் சரண‌டைந்ததாகவும் கூற‌ப்படுகிறது).
அதன் பின், துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், யார் இவ்வுலகப் பற்றனைத்தையும் துறந்து என் பால் பக்தியுடன் என்னைச் சரணடைகிறார்களோ, அவர்களை நான் ஒரு போதும் கைவிடுவதில்லை. நல்ல பெண்மணிகள், தம் கணவன்மார்களை எவ்வாறு தம் அன்பினால் வசப்படுத்துகிறார்களோ, அவ்வாறே,  பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர். பக்தர்களின் இருதயமே நான். என் இருதயமே பக்தர்கள் வசம் கட்டுண்டு இருக்கிறது. உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர் அம்பரீஷனையே சரணடையும்'  என்று திருவாய் மலர்ந்தருளினார்.
துர்வாஸர், உடனே அம்பரீஷர் இருக்கும் இடத்தை அடைந்து, அவரது காலைப் பற்றி, மன்னிப்புக் கோரினார்.   சக்ராயுதத்திடமிருந்து  தம்மைக் காக்குமாறு வேண்டினார்.

உடனே அம்பரீஷர், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைப் போற்றித் துதி செய்தார். துர்வாஸரை விட்டு விடக் கோரி வேண்டினார்.
(ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை வழிபடுவது அளவில்லாத நன்மைகளை அளிக்கக் கூடியது. குறிப்பாக, கொடும் நோய், தீய சக்திகளால் துன்புறுதல், எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்தும் சக்கரத்தாழ்வாரை வழிபட உடனடியாக நீங்கும். கருட புராணத்தில் இருக்கும், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் மகிமைகளைப் போற்றும் ஸ்ரீ சுதர்சன‌ சக்கர ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்).
அவரது பக்திக்கு மனமிரங்கி, சக்கரத்தாழ்வாரும் சாந்தமடைந்தார்.


கிட்டத்தட்ட ஒரு வருட காலம், துர்வாஸர் திரும்ப வருவதை எதிர்பார்த்து உணவு உண்ணாமல் காத்திருந்தார் அம்பரீஷர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. மிகச் சிறந்த பொறுமைசாலியான அம்பரீஷரை மெச்சி, துர்வாஸ மஹரிஷி, அவருக்கு எல்லா விதமான ஆசிகளையும் அளித்தார். பின் அன்புடன் அம்பரீஷர் அளித்த உணவை உண்டு, அவரிடமிருந்து விடைபெற்று, ஆகாய மார்க்கமாக‌ பிரம்ம லோகத்தை அடைந்தார்.

அம்பரீஷர், முன்பிருந்ததை விட அதிகமாக பகவானிடத்தில் பக்தி செலுத்தலானார். நாளடைவில், தம் மக்களிடம் அரசை ஒப்புவித்து விட்டு, இகலோக பந்தங்களிலிருந்து விடுபட்டு, பகவான் ஸ்ரீவாசுதேவனிடம் மனதை நிலைநிறுத்தி, மேலான  மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்தார். 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான, திருவித்துவக்கோடு என்னும் திருத்தலமே, அம்பரீஷர் முக்தி அடைந்த திருத்தலம் என்பது புராணம்.
பக்தியின் சக்தியை, பகவான் பக்தருக்குக் கட்டுப்பட்டவர் என்பதைத் தெளிவாக விளக்கும் இந்த அம்பரீஷ சரிதத்தைப் படிப்பவருக்கும் தியானிப்பவருக்கும் பகவான் மேல் அசையாத பக்தி உண்டாகும். அதன் பயனாக, இறையருள் பெற்று, இக பர நன்மைகளை எல்லாம் அடைந்து வாழ்வாங்கு வாழ்வர்.

கௌமாரம்




முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே
செந்தூர்ப்பதிகொண்டோன், செந்திலாண்டவன் , பக்தர் சிந்தைக் குடிகொண்டான் கந்தக் கடவுள் , வந்தனை செய்வாரையும் சொற்றமிழால் தன்னை வைதாரையும், அத்தமிழின்பத்துக்காக, வாழ்வாங்கு வாழவைக்கும் எந்தை, எம்பெருமான் முருகக் கடவுளைப் பரம்பொருளாகப் போற்றும் ,'கௌமாரம்', பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
"ஸ்வாமி' என்ற பெயர், வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான், அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் சுப்பிரமணியர்தான், அவர் குழந்தையாக இருக்கிற கடவுள், குமாரஸ்வாமி" என்று காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர் அருளியிருக்கிறார்.

சுப்பிரமணியர் என்ற திருநாமமே, சு+பிரம்மண்யம் என்று சிரேஷ்டமான் பிரம்மம் என்ற பொருளில் விளங்குவதாக இருக்கிறது. 'கௌ' என்றால் மயில் என்றும் பொருள். ஆகவே, மயில் வாகனனான முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடும், இந்த மார்க்கத்திற்கு, கௌமாரம் என்று பெயர்.
முருகப்பெருமான், 'தமிழ்க்கடவுள்'என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், முருகபக்தியை, சென்ற இடமெங்கும் கோவில்கள் கட்டி, வெளிப்படுத்தினர்.
'முருகு' என்றால் அழகு என்று பொருள். கந்தன், பெயரழகன்,வடிவழகன், அருளழகன், பக்தருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கும் கொடையழகன்.
சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகன். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர்) என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை. எனவே மாயைக்கு 'குக மாயை' என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.

மயிலானது மாயைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அதுதன் தோகையை விரிப்பது போலும் ஒடுக்குவது போலும் சிருஷ்டியும் சம்ஹாரமும் நடைபெறுகிறது. அந்த அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட ஞான சக்தி எம்பிரான்.
சிவபெருமானின், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம், அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்புப் பிழம்புகள்,சிவனாரின் நெற்றிக் கண்ணின் வழியே வெளிப்பட்டு,   பரம்பொருளாகிய‌ முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.
அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.   (ஸ்ரீ கந்தபுராணம்)
பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்ததால், 'முருகன் மட்டுமே ஆண்பிள்ளை' என்பார் வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.
ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)
ஸ்ரீ ருத்ரத்தில் வரும் 'நமோ ஹிரண்யபாகவே ஸேநாந்யே' என்ற வரிகள், தேவசேனாபதியாகிய முருகனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஓம் எனும் ஓங்கார ஒலியே வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். ஓம் எனும் பிரணவம் மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவம்
 அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
 'உ' காராஸ்து மகேச்வர:
 'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
 பிரணவஸ்தி த்ரியாத்மக:
பிரணவ ஸ்வரூபமாக, அதன் உட்பொருளாக விளங்கும் பரம்பொருளே முருகன்.
'ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் '
என்கிறார் ஸ்ரீ குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில்.
சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)
நிர்க்குணப்பரம்பொருளாகவும், சகுண நிலையில், படைப்பிற்குக் காரணமாகவும் உள்ளவ‌ன் முருகப் பெருமான்.
அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு.

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய். (கந்தர் கலிவெண்பா).
என்று குமரகுருபரர், ஐந்தொழிலுக்கும் அப்பாற்பட்ட, குறியும், குணமும், வடிவுமற்று எங்கும் நிறை பரப்பிரம்மமாய் முருகன் அருளுவதைப் புகழ்கிறார்.
திருமுருகப் பெருமானின், ஆறுமுகங்களின் அழகையும் அவை செய்யும் அருட்செயல்களையும் நக்கீரப் பெருமான் தமது 'திருமுருகாற்றுப் படை'யில்,
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் 
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
உலகம் கொண்ட இருள் (அஞ்ஞான இருள்) நீங்கப் பொலியும் சூரியனாய் ஒரு முகம். பக்தருக்கு வரம் கொடுக்கும் ஒரு முகம், வேத விதி வழுவாது வேள்வி செய்வோர் வேள்விப் பயனைத் தந்தருளும் ஒரு முகம். வேதத்தில் உள்ள மறை பொருளை, யாவரும் மகிழும் வண்ணம், பூரண சந்திரன் போல் விளக்கி நின்றதொரு முகம். பகைவரை மாய்த்து, இனி பகைவருண்டோ என்று போர்க்களத்தை விரும்பி நின்றதொருமுகம். வள்ளியம்மையிடத்து முறுவல் செய்து மகிழும் ஒரு முகம் என்று இனிது விளக்குகிறார்.
திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் 'சரவணபவ' என்பதாகும். 'சரவணபவன்' என்றால், நாணல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். 'சரவணபவ' மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.
ச... ‍செல்வம்
ர ... கல்வி
வ ... முக்தி
ண ... பகை வெல்லல்
ப ... காலம் கடந்த நிலை
வ ... ஆரோக்கியம்
முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

கந்த புராணக் கதை, அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததே,
பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)
என்ற வரிகளில்,முருகன் அவதாரக் காரணத்தை அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என, முருகன் நின்றாடும் தலங்கள் பல இருந்தும், ஆறுபடை வீடுகள் என குறிக்கப்பெறும் தலங்கள் முருகப்பெருமானது வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையவை. அவையாவன,
ஓங்கார ஸ்வரூபியான முருகன், தந்தைக்கு அதனை உபதேசித்த, 'சுவாமிமலை', ஞானப்பழத்துக்காக, கோபம் கொண்டு, பின் சினம் தணிந்த 'பழனி', சூரனை சம்ஹரித்து, பின் சிவபூஜை செய்த 'நிராகுலத்' தலமான 'திருச்செந்தூர்', முருகன், தெய்வானைத் திருமணம் நடந்த 'உல்லாசம்' எனப் போற்றப் பெறும் 'திருப்பரங்குன்றம்', வள்ளியை மணம் புரிந்த,சல்லாபம்' எனப் புகழப்படும் 'திருத்தணி',  வள்ளி தெய்வானை சமேதராக அருள்மழை பொழியும் 'சர்வ வியாபக'த் தலமான 'பழமுதிர்சோலை'.

கந்தபுராணத்தைச் சுருக்கமாக,  "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” (சிவனாரின் மகன், சஷ்டித் திதியில் மாமரமாகி நின்ற சூரனை வேல் கொண்டு பிளந்தான்) என்று கூறுவதுண்டு.
சிவனாரிடமிருந்து, முருகன் தோன்றியதால், 'சிவமும் முருகனும்' ஒன்றே என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை, சைவத்தின் ஒரு கூறாகவே கருதுகிறது.
பிரம்மதேவர் பிரணவப்பொருள் அறியாததால் அவரைச் சிறையில் அடைத்து, அவரது படைக்கும் தொழிலைத் தானே செய்தது, சூரனை அழித்தது, தேவர்களைக் காத்தது, தனது உண்மையுருவை மறைத்து, வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியை மணம் புரிந்தது, பக்தருக்கு நித்தமும் அருளுவது என்று ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலியவற்றைச் செய்யும் பரம்பொருள் கந்தனே என்பதை,  கந்தபுராணக் காட்சிகள் மறைமுகமாக நமக்கு எடுத்தியம்புகின்றன.
முருகப்பெருமான், இச்சாசக்தியான வள்ளியையும், கிரியாசக்தியான தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.
கௌமாரத்தில், முருகனே, குண்டலினியாக உருவகப்படுத்தப்படுகிறார். ஆகவே , சில மாநிலங்களில், நாகரூபமாக முருகனை வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.
'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக'  (ஸ்ரீகந்தர் ஷஷ்டிக் கவசம்).
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் ஆறு ஆதாரத் தலங்களாகக் கூறப்படுகின்றன.அவை,  மூலாதாரம்....திருப்பரங்குன் றம், சுவாதிஷ்டானம்...திருச்செந்தூர் , மணிபூரகம்....பழனி, அநாஹதம்...சுவாமிமலை, விசுத்தி.....திருத்தணி, ஆஜ்ஞா....பழமுதிர்சோலை.
ஞானசக்தியாகிய முருகப்பெருமான், அன்பர் பலருக்கு ஞானோபதேசம் தந்து ஆட்கொள்ளும் கருணைப் பெருங்கடல். சிவனாருக்கு உபதேசித்த ஏரகத்துச் செல்வன், சித்தர் பலருக்கு ஞானோபதேசம் தந்து முக்தி நிலையை அருளிய
காருண்ய மூர்த்தி. ஸ்ரீ போகர், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ அருணகிரிநாதர், வள்ளலார்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்,  என‌ ஷண்முகக் கடவுள், பல மகான்களுக்கு ஞானாசிரியனாக அருள் மழை பொழிந்து வருகிறார்.
பழமுதிர்சோலையில், ஔவைக்கு 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு, அகந்தை அகற்றி, ஞானம் அருளிய குகக் கடவுளின் கேள்விகளுக்குப் செந்தமிழ்ப்பாமாலை சூட்டி விடையளித்தார் தமிழ் மூதாட்டி. அரியது எது? என்ற கேள்விக்கு,
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
என்று துவங்கி, விரிகிறது ஔவையின் பாமாலை.
சரவணப்பொய்கையில் உதித்த ஷண்முகக் கடவுளை, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபட உகந்த தினமாகும். தட்சிணாயனத் துவக்கத்தில், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும் விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று  விரதம் முடிப்பவர்களுக்கு, எம்பெருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும். வைகாசி விசாகம், முருகனின் திருஅவதாரத்தினமாகக் கருதப்படுகிறது. தைப்பூசத்தில், பிரம்ம வித்யா ஸ்வரூபமான வேல் சக்தியால் முருகனுக்கு வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் தெய்வானையை அம்மையை மணம் புரிந்தார். ஆகவே, இந்தத் தினங்கள் 'கௌமாரர்கள்' எனப்படும் முருகபக்தர்களால் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் முருகப்பெருமானை இந்தத் தினங்களில் வழிபாடு செய்கின்றனர். சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை, பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் வைத்து, பொதிகை நோக்கிச் சுமந்து வரும் வேளையில், பழனியில், தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.
சுமை காவுபவர்கள்(தூக்குபவர்கள்), சுமை இலகுவாக இருக்க வேண்டி, ஒரு தடியில் சுமைகளைக் கட்டி, இம்மாதிரிச் சுமந்து செல்வர். காவுதடி, என்பதே காவடியாக உருமாறியது. வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே காவடியின் தத்துவம்.
இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. தமிழில் கா என்ற சொல், காப்பாற்று என்று பொருள்படும். முருகனின் திருவடிகள் காப்பாற்றும் என்பதால் முருகனுக்குரிய காணிக்கைகளைச் சுமந்து அவர் திருவடி சேர்க்கும் இம்முறைக்கு காவடி எனப் பெயர். காவடிகள், பால் காவடி, பன்னீர்க்காவடி, என‌ எண்ணிலா வகைகளைக் கொண்டது.

காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அரோஹரா' அல்லது 'அரோகரா' என்று முழங்குவது வழக்கம்.  'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கமே அரோகரா என்றாயிற்று. இதன் பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
என்பதாகும்.
திதிகளில் ஷஷ்டித் திதி, முருகனுக்கு உகந்தது. ஷஷ்டிதிதிக்குரிய தேவி, ஷஷ்டிதேவி எனப் போற்றப்படும் தெய்வானை அம்மை. (ஷஷ்டியில்) சட்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற சொல்வழக்கு, ஷஷ்டி விரதத்தின் மகிமையை உணர்த்துவதாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஆறு தினங்கள் கந்தர்ஷஷ்டி என சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அந்தத் தினங்களில், முருகப்பெருமான் விரதம் இருந்து, ஷஷ்டியன்று சூரசம்ஹாரம் செய்தார். ஆகவே, அந்தத் தினங்களில், முருகப் பெருமானின் தலங்களில்,சூரசம்ஹாரப் பெருவிழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, முருகன் வேல் வாங்கிய தலமான சிக்கலில், வேல்பூஜைக்குப் பின், வேல்நெடுங்கண்ணியம்மையிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் போது, முருகனின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.

திருத்தணித் திருத்தலத்தில் மட்டும்,  கந்தர்ஷஷ்டி, பூச்சொரிதல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
முருகப் பெருமானது புகழைப்பாடும் துதிகள் அநேகம்...அநேகம். சிவபெருமானது புகழைப்பாடும் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது போல் முருகப்பெருமானது புகழைப் பாடும் நூல்களும் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பெரும்பணியைச் செய்தவர், திரு.தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவார்.

  1. திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
  2. திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாம் திருமுறை
  3. திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாம் திருமுறை
  4. திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காம் திருமுறை
  5. குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாம் திருமுறை
  6. பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாம் திருமுறை
  7. பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாம் திருமுறை
  8. கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாம் திருமுறை
  9. திருவகுப்பு - ஒன்பதாம் திருமுறை
  10. கந்தரனுபூதி - பத்தாம் திருமுறை
  11. நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள் -பதினோராம் திருமுறை
  12. சேய்த்தொண்டர் புராணம் (சிவனாரது சேய் ஆன முருகனின் அடியவர் வரலாறு) -பன்னிரண்டாம் திருமுறை இயற்றியவர்.தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.
முருகப்பெருமானுக்கும் அவதாரங்கள் உண்டு. ஸ்ரீ குமாரில பட்டர், மாமதுரை அரசி மீனாட்சியம்மை, சொக்கநாதப்பெருமானின் திருக்குமாரர் உக்கிரபாண்டியனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரை முருகனின் திருஅவதாரங்களாகக் கருதுகிறார்கள்.

'வேலை வணங்குவதே வேலை' என்றிருப்போர் வேதனை தீரும். நாதன் முருகன் நல்லருள் தந்து சோதனை நீக்கிச் சுகம் பல தருவான். ஆறுமுகமும் பன்னிருகரமும் கொண்டு, சேவல்கொடியேந்தி மயில்வாகனத்தில், வள்ளி தெய்வானையோடு, வேல்முருகனாகக் காட்சியளிக்கும் எம்பெருமான் முருகனின் திருவுருவத்தை மனதிலிருத்தி, முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.

முருகன் திருவடிகளே சரணம்.
ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே (பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'தௌத்தியம்' (திருவடித் துதி)).