Thursday 30 January 2014

தமிழர் கண்ட தாண்டவக்கோன்

அருவம்,உருவம்,அருவுருவம் என இறைவனை கண்ட தலைசிறந்த மெய்ஞானம் சைவசமயம். அதுபோல் இயற்கையை உணர்ந்து இயற்கை விதிகளை இறைதத்துவங்களாக தொகுத்து தலைசிறந்த பண்பாடாக சைவப் பண்பாடு விளங்குவது வெள்ளிடை மலை.அருவமான இறைவனுக்கு உருவங்கள் வழங்கி சிவனாக கண்டது சைவப் பண்பாடு என்றால் அந்த உருவங்களுக்குள் ஆயிரம் அர்த்தங்களை புகுத்தியது சைவப் பண்பாட்டின் தனித்துவமான சிறப்பு என்றே கூறவேண்டும்.


"சைவ சமயமே சமயம்" என தாயுமான சுவாமிகளும் "சைவமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது" என அருணந்தி சிவாச்சாரியாரும் நவின்றதது சாலச் சிறப்பான தமிழ்வாசகங்களாகும்.

நிருத்தத்தின் தலைவராக, கூத்துப் பிரானாக எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளை தமிழர்கள் கண்டு நடராசாப் பெருமானாக அறுபத்தி நான்கு மூர்த்தங்களில் ஒன்றாய் சைவப் பண்பாட்டில் இருத்தி, வேதநாகரீகத்துக்கு பொதுச்சின்னமாக மலரும் வகையில் பாரதப் பண்பாட்டுக்கு குறியீடாக மலரும் வகையில் மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,சமயம்,அழகியல் உட்பட ஏராளமான அம்சங்களை நடராச திருவுருவத்துள் கண்டு இவ்வுலகுக்கு அளித்தனர் எனலாம்.
நடராசப் பெருமானின் நூற்றியெட்டு கரணங்கள் அல்லது தாண்டவங்கள் பற்றி சைவ ஆகமங்கள்,சிற்ப நூல்கள்,பரத நாட்டிய சாத்திரம் ஆகியன எடுத்துக்கூறுகின்றன.எனினும்
தாண்டவங்களில் தலைசிறந்ததாய் விளங்கும் ஆனந்த தாண்டவம் பரத நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. திருவெண்காட்டில் அகழ்வாய்வில் கண்டெடுத்த நடராச மூர்த்தியின் பீடத்தில் தேசி நடனத்தை ஆடுபவர் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தேசி நடனமும் பரதரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்படவில்லை.

சாத்திரிய நடனக் கலைஞர்கள் அறியாத நடனத்தை சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதை "அரங்கிடை நூலறிவாளர் அறியப் படாததோர் கூத்து" எனப் பாடுகிறார் நாவுக்கு அரசராகிய திருநாவுக்கரச நாயனார். எனவே எம்பெருமானின் திருநடனங்கள் யாவற்றினையும் பரதர் இயற்றிய சாத்திர நூல் கொண்டிராதது சாதரணமானதே எனலாம்.

ஆனந்த தாண்டவமானது வேறு எங்கும் இல்லாது தமிழகத்திலே காணக்கிடைப்பது ஆனந்த தாண்டவமானது தமிழரின் ஆன்மீகக் கண்டுபிடிப்பென நவில வலுச்சேர்க்கின்றது. கி.பி 4ம் நூற்றாண்டளவில் இருந்து தமிழகத்த்ல் நடராச சிலைகள் இருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளமை பரதக் கலையிலும் இறைவனின் திருநடன
வடிவங்ககளிலும் தமிழரின் உரித்து அதிகம் இருப்பதை புலனாக்கிறது. தமிழரிடம் இருந்த நாட்டியக் கலையை சற்று மேலதிக இணைப்புக்களுடன் பரதர் சாத்திரம் செய்தார் எனபதே சாலச் சிறந்ததாகும்.

தாண்டவம் தண்டு எனும் வினையடி வழிவந்ததாகவும், தண்டு என்பது துள்ளுதல்,பாய்தல்,ஆடுதல் எனும் பொருளில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகளில் மட்டுமன்றி இலக்கிய வளமற்ற திராவிடமொழிகளிலும் புழக்கத்தில் உள்ளமையையும் தமிழாராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுவர்.


இறைவனின் படைத்தலைக் குறிக்கும் காளிகா தாண்டவம் அல்லது முனிதாண்டவம் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபையிலும், ஆன்மாக்களின் நல்வினைக்கு ஏற்ப இன்பங்களை அளித்துக்காக்கும் இன்பக் காத்தலைக் குறிக்கும் சந்தியா தாண்டவம் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும், தீவினைக்கு ஏற்ப தண்டித்துக் காத்தலாகிய துன்பக் காத்தலைக் குறிக்கும் கௌரீ தாண்டவம் திருப்புத்தூர் சிற்சபையிலும் அழித்தலைக் குறிக்கும் சம்கார தாண்டவம் நள்ளிரவில் சுடலையிலும் மறைத்தலைக் குறிக்கும் திரிபுர தாண்டவம் குற்றாலத்தில் உள்ள சித்திரசபையிலும் அருளுதலைக் குறிக்கும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் உள்ள இரத்தினசபையிலும் நடைபெறுகின்றன. இறைவனின் ஐந்தொழிலையும் குறிக்கும் ஆனந்த தாண்டவம் பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடைபெறுகின்றது. இச்சபையை கனகசபை என்பர். நாதாந்த நடனம்,புஜங்க நடனம் எனவும் ஆனந்த தாண்டவத்தை அழைப்பர்.

திருத்தாண்டவங்கள் தமிழகத்தில் உள்ள ஆலயங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது போன்று வேறெங்கும் தொடர்புபடுத்தப்படவில்லை.இவ்வாறு நடராச மூர்த்த வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருவதும் தமிழ்நாட்டில் என்பதை அவதானிக்கும் போது தமிழரின் பண்பாட்டு முதிர்ச்சி புலனாகிறது எனலாம்.
வலக்கையில் ஏந்தியுள்ள உடுக்கு படைத்தலையும் அபயகரம் காத்தலையும் இடது கையில் ஏந்தியுள்ள நெருப்பு அழித்தலையும் முயலகன் மீது ஊன்றிய வலது திருப்பாதம் மறைத்தலையும் தூக்கிய இடது திருவடி அருளுதலையும் குறிக்கும். இவ்வாறு நடராசப் பெருமானின் திருவுருவம் ஐந்தொழில்களையும் அதாவது பஞ்சகிருத்தியங்களையும் குறிக்கும் திருவுருவமாக விளங்குகின்றது.

இதனை,
"அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் அங்காரம்
அரனுற்றணைப்பில் அமருந்திரோதாயி
அரனடியென்னும் அநுக்கிரகமே"
என்று தமிழ் மறையாகிய திருமந்திரமும்.
"தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றுமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முக்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு"
என்று சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றாகிய உண்மை விளக்கமும் அழகாக எடுத்துக்கூறுகின்றன.
பக்குவம் எய்திய ஆன்மாவின் உணர்விலுருந்து மாயையை அகற்றுவதை இறைவன் துடியினை அசைத்தல் வாயிலாகவும் நெருப்பினை ஏந்தியுள்ளமை பழைய வினைகள் அவ்வான்மாவுக்கு ஏற்படாதவாறு சுடுதலையும் ஊன்றிய திருவடி வாயிலாக ஆன்மாவினது ஆணவ மலத்தை கெடச் செய்வதாயும் தூக்கிய திருவடி வாயிலாகதுன்பங்களுக்குள் உழன்று அல்லல் அனுபவித்து வந்த ஆன்மா மீண்டும் அவற்றுள் சிக்கி அல்லல்ப்படாது அருள்நிலைக்கச் செய்தலையும், மற்றும் தூக்கிய திருவடியின் வளைந்த நிலையும், பாதத்தைக் காட்டும் திருவடியும் நில் என பொருட்பட அமைந்த திருக்கரமும் துரியாதீதம் எனும் ஆனந்த நிலையில் நிலைபெற்று இருப்பதையும் இறைவன் சுட்டுகிறார் என்கிறது உண்மை விளக்கம்.
எம்பெருமானின் திருவுருவத்தில் உள்ள பாம்பானது பிறப்பு இறப்புக்களை உணர்த்துகிறது. பாம்பு எப்படி தோல் கழற்றுமோ அதுபோல் பிறக்கும் போது எடுக்கும் உடலை இறப்பின்போது ஆன்மாவானது விட்டு விலகுகின்றது. ஆதலால் ஆன்மா நிலையானது என்பதையும் உடலானது பாம்பின் தோலை ஒத்தது என்பதையும் சுட்டுகின்றது.
"நமசிவாய " எனும் தூல பஞ்சாட்சரம் "சிவாயநம" எனும் சூட்சும பஞ்சாட்சரம் ஆகிய இருவகைப் பஞ்சாட்சரங்களையும் (திருவைந்தெழுத்து) நடராசத் திருவுருவம் சுட்டி நிற்கின்றது.
திருவடி "ந" காரமாகவும் திரு வயிறு "ம" காரமாகவும் திருத்தோள் "சி" காரமாகவும் திருமுகம் "வா" ஆகவும் திருமுடி "ய" ஆகவும் விளங்கி தூல பஞ்சாட்சாரத்தையும்,
உடுக்கை அடிக்கும் திருக்கை "சி" காரமாகவும் வீசும் திருக்கை ஞானமாகிய திருவருளைக்குறிக்கும் "வா" ஆகவும் அபயமளிக்கும் திருக்கரம் "ய" ஆகவும் நெருப்பினை வைத்திருக்கும் கை "ந" காரமாகவும் முயலகன் மீது ஊன்றிய திருவடி "ம" காரமாகவும் விளங்கி சூட்சும பஞ்சாட்சரத்தையும் குறிக்கின்றது.
சைவ ஆகமங்கள் போற்றுகின்ற சிவ தாண்டவங்களில் ஒருசில பின்வருமாறு
பாண்டரங்க தாண்டவம்- முப்புரத்தை எரிக்கும் முன்னர் சிவனார் ஆடிய நடனம்.
கொடு கொட்டி நடனம்- முப்புரங்களை எரித்தபின்னர் தேவர்கள், முனிவர்கள் மகிழ உமையம்மை தாளமிட இறைவன் தனது திருக்கரங்களைக் கொட்டிக் கொண்டேயாடிய திருநடனம்
சந்தியா நிருத்தம்- பிரதோச காலத்தில் உமையம்மை,தேவர்கள், முனிவர்கள், பூத கணங்கள் மகிழ்ந்திட நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே புலித்தோளை ஆடையாக அணிந்து சூலாயுதந்தை சுழற்றிக் கொண்டு ஆடிய திருநடனம்.
ஊர்த்துவ தாண்டவம்- திருவாலங்காட்டில் காளி தேவிக்கு ஏற்பட்ட செருக்கை அடக்குவதற்கு காளியுடன் எம்பெருமான் திருநடனம் புரிந்தவேளை, காதணி கீழே விழ வலதுகாலினால் காதணியை எடுத்து அக்காலினை மேல் நோக்கி உயர்த்தி கால்விரல்களின் மூலமாய் காதணியை காதிலே மீண்டும் அணிந்து, தொடர்ந்து அந்நிலையில் நின்றவாறு தனது திருநடனத்தைத் தொடர்கின்றார். காளியால் இறைவனின் குறித்த நடனத்தை ஆடமுடியாது போகவே, தோல்வியை உணர்ந்துகொள்கின்றாள். இவ்வாறு காளியின் ஆணவத்தை அடக்க ஆடிய திருநடனம்.

கௌரி தாண்டவம்- திருமால் மோகினியாய் திருவடிவம் கொண்டு பத்மாசூரனை அழித்தபின்னர் சிவனும் மோகினியான திருமாலும் இணைந்து ஆடிய திருநடனத்தை உமையம்மை பார்க்க ஆவல் கொள்ளவே, கயிலையில் மீண்டும் ஆடிய திருநடனம்.

வீரட்டகாச நடனம்- முருகப் பெருமான் பிரணவத்தின் பொருளை உணர்த்தியபோது "யானும் குமரனும் ஒன்றே" என்று வீரங்கொண்டு ஆடியருளிய திருநடனம்.

அனவரத நடனம்-ஆன்மாக்களுக்கு போக முக்திகளை அழிக்கும் பொருட்டு படைப்பு முதலான செயல்களைச் செய்து எப்போதும் ஆடிக்கொண்டிருக்கின்ற (அனவரதம்) திருநடனம்

மகாசங்கரா நடனம்- மகா பிரளய காலத்தில் உலகனைத்தும் பராசக்தியில் ஒடுங்க, பராசக்தி பரமசிவனுள் ஒடுங்க, பரமசிவன் தனியாக நின்று ஆடும் திருநடனம்.

எல்லாத்துக்கும் மேலாக, ஐந்தொழிலையும் குறிக்கின்ற விஞ்ஞானம் மெய்சிலிர்த்து நிற்கின்ற சிதம்பரத்தில் அரங்கேறிய ஆனந்த தாண்டம்

இறைவன் சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆட காரணம் என்ன?

ஒருமுறை திருமால் ஆதிசேடன் மீது அனந்தசயனனாக இருக்கையில் திருமாலின் உடல்நிறை அதிகரிப்பதுபோன்று ஆதிசேடன் உணர்ந்தான்.அதற்குரிய காரணத்தை நாராயணனிடம் கேட்டபோது சிவபெருமானின் திருநடனத்தை நினைத்து மகிழ்ந்துகொண்டிருப்பதால் அவ்வாறு உணார்ந்து கொண்டாய் என விளக்கினார். உடனே சிவபெருமானின் திருநடனத்தைக் காணும் ஆவல் ஆதிசேடனுக்கு ஏற்படவே, அனுமதி நாடி நாராயணனிடம் விண்ணப்பித்தார். நாராயணனின் திருவாக்குக்கு இணங்க சிதம்பரம் அமைந்துள்ள இடத்துக்கு வருகை தந்து திருநடனம் காணும் வரம்வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருக்கத் தொடங்கினார். அதேசமயத்தில் தேனீக்கள் பூக்களை நாடும் முன்னே அவற்றை அதிகாலையிலேயே பறித்துவிட வேண்டுமென எண்ணி மரத்தில் ஏறுவதற்கு இலகுவாக , சிவபெருமானை வேண்டி புலிக்கால்களைப் வரமாகப் பெற்ற வியாக்கிரதபாதர் எனும் முனிவரும் இறைவனின் திருநடனத்தைக் காண விரும்பி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்.
அன்பே உருவான சிவபெருமான் இவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டு, திருவாதிரை எனும் நன்னாளில் உலகம் பயனடையும் வண்ணம் சிதம்பரத்தில் எழுந்தருளி ஆனந்தத் தாண்டவமாடி நல்லருள் புரிந்தார். இந்நாளே அருத்திரா தரிசனம் என வழிபடப்படுகின்றது.

சம்கார நடனத்தை இறைவன் சுடலையில் நள்ளிரவுப் பொழுதில் ஆடுவதாய் ஏலவே அறிந்தோம். யானைத் தோலையும் புலித் தோலையும் உடுத்தி பிரமகபாலத்தையே மாலையாக அணித்து பிணங்கள் எரிக்கும் இடமாகவும் இரத்தம்,மாமிசம் முதலியவற்றால் துர்நாற்றம் வீசும் இடமாகவும் பூதம்,பிரேதம்,வேதாளங்கள் குடியிருக்கும் இடமாகவும் காகம்,கழுகு,பருந்து முதலிய பறவைகளும் செந்நாய் போன்ற விலங்குகளும் வாழுகின்ற இடமாகவும் பிரேத மந்திரங்கள் ஒலிக்கும் இடமாகவும் விளங்கும் சுடலையில் சிவபெருமான் ஏன் திருநடனம் செய்ய வேண்டும்? அதுவும் பரம்பொருளாகிய இறைவன் அழகான திருப்பதிகளில் ஆடுகின்ற எம்பெருமான் ஏன் சுடலையில் ஆட வேண்டும்?
சாதரண எளிய சிவசிந்தையுள்ளோருக்கு எழும் ஐயம் அம்மையாகிய பார்வதி தேவிக்கு வராமல் போகுமா என்ன?
ஐயம் தீர்க்க அம்மை வினாவியதும் அப்பன் திருவாய் மலர்ந்தருளியதும்சிவமகாபுராணத்தில் தீட்டப்பட்டிருக்கின்றது.
அன்னை உமை சுடலையில் ஆடுவதன் காரணத்தை வினாவியபோது எம்பெருமான் "பிரளய முடிவில் யாவரினதும் மரணத்திற்குப்பின் நின்று ஆடுவதால் சுடலையாடி என அழைக்கப்படுவதாயும் திருமால் ஒருமுறை மயானத்தில் நான் ஆடிக்கொண்டிருக்கும் போது வழிபட வந்தவேளை, பற்பல பூத வேதாளங்கள் யாவும் தாளம் போட்டுக்கொண்டும் பாட்டுப் பாடிக்கொண்டும் இருந்ததை அவதானித்து இவை இப்படி உங்களுடன் தாளம் போட்டு பாட்டுப்பாடி உங்கள் நடனத்தில் இலயித்திருப்பது நல்லதே என்றும் இல்லாவிட்டால் பூவுலகம் எங்கும் இவை பரவி மக்களை துன்புறுத்தும் எனவும் கூறி மயானத்திலே இப்போதுபோல் என்றும் திருநடனம் புரிய வேண்டும் என வேண்டினார்.எனவேதான் சுடலையில் நின்று திருநடனம் புரிகிறேன்" என திருவாய் மலர்ந்தருளினார்.

வழமையாக வலக்காலை ஊன்றியபடி திருநடனம் புரியும் பரம்பொருளாகிய சிவபெருமான் கால்மாறி ஆடி சிவனடியாராக்கிய நாடாளும் மன்னனின் ஆவலை நிறைவேற்றிய சங்கதி சங்கத் தமிழ் நகரான மதுரையில் அரங்கேறியது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை அரங்கேற்றிய இறைவனின் ஒரு திருவிளையாடலாகும்.
வெள்ளியம்மலத்தில் நித்தம் வலக்காலை ஊன்றியவாறு திருநடனம் செய்து பஞ்சகிருத்தியத் தொழில்களையும் புரிவதனால் எம்பெருமானின் திருக்காலுக்கு நோ ஏற்படாதோ என கலக்கமுற்ற சுவுந்தர பாண்டியன் கால்மாறி ஆடவேண்டி இறைவனிடம் வேண்டி, தனது உயிரையே மாய்த்துக் கொள்ள முனைந்தபோது மன்னனின் சிவபக்திக்கு திருவருள் புரிய திருவுள்ளம் கொண்ட இறைவன் இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கி கால்மாறியாடி அற்புதம் நிகழ்த்தி, மன்னனை ஆனந்த வெள்ளத்துள் ஆழ்த்தினார்.
"என்றுமிப் படியே யிந்தத் திருநடம் யாருங் காண
நின்றருள் செய்ய வேண்டு நிருமல மான வென்னி
மன்றவ வடியேன் வேண்டும் வரமிது வென்று தாழ்ந்தான்
அன்றுதொட் டின்று மெங்கோ னந்நட நிலையாய் நின்றான்"

மன்னன் தான் கண்டு ஆனந்தமுற்ற இந்த அற்புதக் கோலத்தை உலகத்தவர் யாவரும் கண்டு மனம் மகிழ, திருவருள் பெற தொடர்ந்தும் இவ்வண்ணமே வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரியவேண்டும் என வேண்டவே, திருவருட் சம்மதம் அளித்தார் எம்பெருமான்.
அறிஞர்களினதும் விஞ்ஞானிகளினதும் பார்வையில் தாண்டவக்கோன்
கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமியின் The Dance of Shiva எனும் நூல் மேலைதேயத்துக்கு நடராசப் பெருமானின் திருநடன தத்துவங்களை கொண்டுசென்றதென்றால் மிகையில்லை. அவர் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "(Nataraj is the ) clearest image of the activity of God which any art or religion can boast of…A more fluid and energetic representation of a moving figure than the dancing figure of Shiva can scarcely be found anywhere,"

தமிழரின் அளப்பரிய ஆன்மீகக் கண்டுபிடிப்பான இறைவனின் திருநடனக் கோலத்தை இன்றைய விஞ்ஞானிகளும் பௌதீகவியலாளர்களும் கண்டு மெய்சிலிர்த்து நிற்பது பெருமையே.

பண்டைய கால இந்திய மக்கள் ஆக்கல்,காத்தல்,அழித்தல் அடங்கிய தாண்டவத்தை இறைவடிவாகக் கண்டு சிலைகளாய் வடித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் CARL SAGAN குறிப்பிடுகின்றார்.
"FRITJOF CAPRA எனும் மேலைத்தேய இயற்பியல் வல்லுனர் "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," எனும் கட்டுரையிலும் பின்னர் The Tao of Physics எனும் நூலிலும் நவீன இயற்பியலையும் நடராசப் பெருமானின் திருநடனத்தையும் அழகாக தொடர்புபடுத்தி,
"every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena." என்கிறார்.

இவ்விஞ்ஞானிகளின் கருத்துகளை மேலும் அழகுபட கூறுவதாயின் பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படையான தாண்டவத்தை தமிழர்கள் தமது பண்பாடாகிய சைவப் பண்பாட்டில் நடராச திருவுருவமாக ஆனந்த தாண்டவமாகக் கண்டனர் என்லாம்.

பிரபஞ்ச ஆரம்பத்தில் பெரும் ஒலி உண்டானதாகவும் அதன் விளைவாலேயே பிரபஞ்ச தோற்றம் நடைபெற்றதாகவும் சில அறிவியலாளர்கள்,இயற்பியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்த ஒலியைப்பற்றி (COSMIC BACKGROUD RADIATION) பற்றி ஆய்வுகளை இவர்கள் நடத்துகின்றனர்.உடுக்கை ஏந்திய கை படைத்தலைக் குறிப்பதை நினைவில் கொள்க. இவ் ஒலியானது ஓம் எனும் பிரணவ ஒலியாக இருக்கும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேதங்களும் இந்த பிரணவத்தில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் கூறுகின்றது.

இப்படி விஞ்ஞானத்துக்கு விடை சொல்லும் மெய்ஞ்ஞானத் திருவுருவமாக நடராசப் பெருமான் விளங்குவதால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு
அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது. இது தமிழர் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் என்றால் மிகையில்லை.
இச்சிலையடியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய நடராசரின் சமசுகிரத துதியுடன் "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." எனும் CAPRA இன் வசனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
"QUANTUM PHYSICS AND THE DANCE OF NADARAJA" என்ற கட்டுரையில் GEORGE KALAMARAS என்பவர் இந்திய மக்களின் இன்றைய அறியாமையை சுட்டிக்காட்டியுள்ளார். உண்மைதான்! நாத்தீகம் கதைப்பதிலேயே தமிழன் விஞ்ஞானத்தை விஞ்சிய பண்பாட்டைக் கொண்டிருந்தான் என்ற உண்மையை மறக்கத் தொடங்கிவிட்டோம் நம்மில் பலர்.

தமிழருக்கு இன்னொரு கடமையுண்டு. தமிழரின் சொத்தே நடராசப் பெருமான் குறிப்பாக ஆனந்தத் தாண்டவ பெருமான் என்பதை மேலைத்தேயத்துக்கு உணர்த்த வேண்டியது.

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"

நடராசரின் 108வகை நடனங்களில் ஒருசில கீழே இணைக்கப்பட்டுள்ளன (இணையக்கடலில் வலைவீசித் தேடியதில் பெறப்பட்ட படங்கள் இவையாகும்.)



































சகலகலாவல்லி மாலை-பொருளுரை

ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி செய்த அவர்களிடம் அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பு காரியம் என அனைவரும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவரிடம் சென்று ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்று காசியில் ஆலயம் அமைக்க நிலம் கேட்டபோது ஹிந்துஸ்தானி தெரியாத காரணத்தினால் அவமதிக்கப்பட்டார். கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது! எனினும் சிந்தை கலங்காது, கலைவாணியைத் துதித்து சகலகலாவல்லி பாமாலை இயற்றிச் சூட்டி ஹிந்துஸ்தானி , உருது மொழியாற்றல்களை ஒரேநாளிலேயே பெற்றுக்கொண்டார்.



தனது தவச்சிறப்பால் சிங்கத்தை தன்வசப்படுத்தி அதன்மேல் அமர்ந்து தாரா ஷிக்கோஹ்யின் அவைக்குச் சென்று தனது கோரிக்கையை ஹிந்துஸ்தானியில் கேட்டு, ஹிந்துஸ்தானியிலே அவனுடன் சரளமாக கதைத்து நாணச்செய்து அவனிடம் இருந்து இடத்துக்குரிய அனுமதியைப் பெற்று காசிமடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். 


இவையாவும் கலைவாணியின் அருள்மழையால் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளுக்கு  கைகூடியது.எனவே, நாமும் கலைவாணியின் அருள்மழையைப் பெற்றிட இயற்றிய தமிழ்மழையை கலைவாணிமேல் பொழிகின்ற சகலகலாவல்லி பாமாலையை பாடுவோமாக!


"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்று மாணிக்கவாசகப் பெருமான் பொருளுணர்ந்து பாட வேண்டியதன் சிறப்பை திருவாசகத்தின் சிவபுராணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே பொருளுணர்ந்து பாடுவோமாக! 

1)வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் 
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் 
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் 
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.


சகலகலாவல்லியே -
எல்லாக் கலைகளையும் அளிக்கின்ற வல்லமை உடையவளே

சகம் ஏழும்அளித்து உண்டான் உறங்க -
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக அவற்றை உண்டு, (ஆலிலைமேல்) துயின்றான்.
ஊழிக் காலத்தில் உலகங்கள் அனைத்தையும் உண்டு காத்த வண்ணம் ஆல் இலைமேல் துயில்வார் என்பது புராணச்செய்தி.

ஒழித்தான்பித் தாக - அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே - உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாதுகொலோ - உனது திருவடிகளைத் தாங்கும் பேறு வெண்தாமரையைத் தவிர்த்து எனது உள்ளமாகிய வெண்தாமரைக்கு வாய்க்கப்பெறாதது முறையா?

காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா? 

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!" - என்ற சுவாமி விபுலானந்த அடிகளின் பாடலையும்

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வர்' என்னும் திருக்குறளின் மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளையும் இங்கு பொருத்து உணர்க!



2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 
பதம் பிரித்து அமைந்த பாடல்:
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 

பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே- தாமரை மலராகிய ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பசும்பொன்கொடி போன்றவளே!
கனதனக் குன்றும்-குன்றுபோன்ற பெரிய தனங்களை உடையவளே!

ஐம்பால்- ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை
ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - ஐந்து பகுதிகளாக பகுத்து ஒப்பனை செய்யப்பட்ட காடுபோல் அடர்ந்த கூந்தலை தாங்கியுள்ளவளே! கருப்பாக இனிப்பவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் -  அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருள் சுவையும் சொல் சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிகளையும் ( ஆசுகவி,மதுரகவி,சித்திரக்கவி,வித்தாரக்கவி)

பாடும் பணியில் பணித் தருள்வாய்- இடையறாது பாடும் பணிக்கு எளியேனை பணித்து அருள் செய்வாயாக!

ஆசுகவி - யாரும் இதுவரை பாடியிராத வகையில் யாரும் பாடியிராத பொருளின்பத்தை தரும் வண்ணம் புதிய புதியதாக பாடல்களை இயற்றும் கலை


மதுரகவி- இசைநடையில் கவி எழுதும் கலை


சித்திரக்கவி - தேர் போன்ற சித்திரத்தில் அடுக்கி வைக்கலாம் போன்ற அமைப்பில் சொற்களை அழகுற அடுக்கி பாடுகின்ற கலை


வித்தாரக் கவி - பலவிதமான அமைப்புகளில் அமைத்து பாடுவது 


வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் 
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில் 
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித் 
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு 
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே -
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!

உளம் கொண்டு - விருப்பம் கொண்டு
களிக்கும் கலாப மயிலே - மகிழ்ச்சியடையும் மயில் போன்றவளே
சிந்தக்கண்டு - பொழியக்கண்டு

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து -நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக

உன் அருள்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும் கொலோ -  உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா?

எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே!
நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!

4)தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் 
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று 
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய் 
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும் 
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று 
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே -  கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 

செந்நாவில் நின்று -  நல்ல நாவினின்று 

தூக்கும் பனுவல் -  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் 
துறைதோய்ந்த கல்வியும் - எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் 

சொற்சுவை தோய் வாக்கும் - சொற்சுவை நிரம்பிய வாக்கும் 

பெருகப் பணித்துஅருள் வாய்- பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 
அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

5)பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் 
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் 
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் 
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என் 
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து 
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் 
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


நெடுந் தாள் கமலத்து -  (திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த) நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும்
அஞ்சத்துவசம் உயர்த்தோன்- அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்

செந்நாவும் - சிறந்த நாவினையும்
அகமும் -மனதினையும் 

வெள்ளைக் கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய்-  ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! 

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய - செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் 

பொற்பாத பங்கேருகம் -  பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே - எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?

தாள் - கால், கயிறு, முயற்சி,படி,காகிதம்,வைக்கோல்,கடையாணி,தாழ்ப்பாள்,திறவுகோல் (கழகத் தமிழ்க்கையகராதி) சிலர் நீண்ட இதழை உடைய தாமரை என்று பொருள் சொல்கின்றனர். அது பொருந்துமா என்று தெரியவில்லை! கழக அகராதிப்படி தாள் என்பது தாமரையின் தண்டையே பெரிதும் குறிக்கும்! 

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ? 
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.

6)பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் 
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் 
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் 
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 

எழுதா மறையும் - எழுதாமறையாகிய வேதத்திலும் 
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் -வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று 
அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் - பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) 
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய் - விரும்பும் காலத்தில் எளிதில் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக

வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!

7)பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 



பதம் பிரித்து அமைந்த பாடல்:
பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால் 
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர் 
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் 
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!
உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் - அடியார்கள் விரும்பி எண்ணிப் புனைகின்ற முத்தமிழ்க் கலை நூல்களில் காணப்படுகின்ற தீம்பால் அமுதம் (போன்ற மெஞ்ஞானத்தை) தெளிவிக்கின்ற
ஓதி/ ஓதிமம்-அன்னம்
பேடு -பெண்
பாட்டும் பொருளும் - பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் 
பொருளால்பொருந்தும் பயனும்- பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும்
என்பால் கூட்டும்படி - எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் 
நின்கடைக்கண் நல்காய் - உனது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே.....உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.

8)சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல 
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் 
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல 
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர் 
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

நளினஆசனம்சேர் செல்வி- செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் 
ஒருகாலமும்- எக்காலத்திலும்
சிதையாமை நல்கும் -காலத்தால் அழியாத 
கல்விப் பெருஞ்செல்வப் பேறே- கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! 
 சொல் விற்பனமும்-சொல்வன்மையும்
அவதானமும்-அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) 
கவி சொல்லவல்ல நல்வித்தையும் -  சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
தந்து அடிமைகொள் வாய்நளின - அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! 
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும்
எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

9)சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை 
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை 
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 

பதம் பிரித்து அமைந்த பாடல்:
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன 
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை 
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை 
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே! 

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி - நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானை
அரசன்னம்- அரச அன்னமும்
நாண-நாணும்படி 
நடை கற்கும் பதாம்புயத் தாளே-அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே
சொற்கும் பொருட்கும் -சொல்லுக்கும் பொருளுக்கும் 
உயிராம் மெய்ஞ்ஞானத்தின் - உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவத்தின்
தோற்றம் என்ன நிற்கின்ற - (தோற்றமென  நிற்கின்ற) - தோன்றி நிற்கின்ற 
நின்னை நினைப்பவர் யார் - நினைப்பவர்கள் யாரும் இல்லை

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக! 

10) மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் 
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
பதம் பிரித்து அமைந்த பாடல்:
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் 
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் 
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

படைப்போன் - படைக்கும் தெய்வம் நான்முகன் 
முதலாம் விண்கண்ட தெய்வம் - முதலாக சிறப்புடைய தெய்வங்கள் 
பல்கோடி உண்டேனும்  - பலகோடி இருந்தாலும் 
விளம்பில்- தெளிந்து கூறில்
உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ - உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை 
மண்கண்ட வெண்குடைக் கீழாக- மண்ணுலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ்
மேற்பட்ட மன்னரும்- சிறப்புடைய மன்னரும்  
பண்கண்ட அளவில் - பாடலைக் கேட்ட மாத்திரத்தில் 
பணியச் செய்வாய்- பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!


சிறு தெய்வவழிபாடு பட்றி சிவஞானசித்தியார் நூல் விளக்கம்

மானிடரையும் மற்றச் சிறுதெய்வங்களையும் வழிபடும்போதும் நன்மைகள் கிடைக்கின்றனவே? அது எப்படி?  இவ்வண்ணம் எழுகின்ற வினாக்களை, சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் தெளிவுபடுத்துகின்றது. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை.சித்தியாருக்கு மிஞ்சிய நூலுமில்லை என்பது முதுமொழி.





சிவஞானசித்தியார் நூலின் சுபக்கம் இரண்டாம் சூத்திரம் 24,25,26,27 ஆம் பாடல்கள் சிவபெருமான் உயிர்கள் மேல் எவ்வளவு கருணையுடையவன் என்பதை உணர்ந்துகின்றன.

மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு)
இச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும்
செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும்
செயற்குமுன்னிலையாம் அன்றே! (24)


தான் விரும்பும் தெய்வத்தை மனதில் நினைக்கவும் வாக்கினால் தவறாது மந்திரம் கூறவும் கையினால் நல்ல மலர்களை எடுத்துப் போற்றவும்  இவற்றோடுகூட, சினம் முதலிய தீயகுணங்களை நீக்கி, வாழும் முறைப்படி வாழ்ந்தால், அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்கு துணையாக முன்வந்து நிற்கும்.

யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவைஇ லாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே! (25)


எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.

இங்குநாம் சிலர்க்குப் பூசை
இயற்றினால் இவர்க ளோவந்(து)
அங்குவான் தருவார் அன்றேல்
அத் தெய்வம் எல்லாம்
இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்(கு)
ஆணைவைப்பால் அளிப்பான்  (26)


இங்கு நாம் சிறுதெய்வங்கள்,பெரியோர்,உயர்ந்தோருக்கு வழிபாடு செய்தால்,அவர்களே அவற்றுக்கான பலன்களை மறுபிறவியில் நமக்குத் தரமாட்டார்கள். எங்கும் உள்ள சிவனே வந்து அருள் செய்வான்.எல்லாம் அவன் ஆணை வழியாக நிற்பதுவும் இயங்குவதுமாகையால் அவனே நமக்குப் பயன் தருவான்.

காண்பவன் சிவனே ஆனால்
அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பறம் அரன் தன் பாதம்
மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன
விதிஅறம் விருப்பொன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும்
பூசனை புரிந்து கொள்ளே   (27)


எல்லாம் ஏற்பவன் சிவனேயாதலால், அவனடிக்கு அன்பு செய்வது சிறந்த அறமாகும். அவன் திருவடியை மறந்து செய்யும் அறங்கள், வீண் செயலே ஆகும். ஆகவே அவனை வழிபடுவதே அறமும் செய்யத்தக்கதாகும்.


சைவ சமயத்தில் பிறத்தல், சைவ சமயத்தை சார்ந்து ஒழுகுதல் புண்ணியத்தின் பயன் என்பதையும் இந்நூல் உணர்த்துகின்றது.


நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே
                                - சிவஞான சித்தியார்


மானிடர் வாழுகின்ற பூமியில் பிறந்தாலும் வேதம் பயிலாத நாட்டில் பிறக்காமல் வேதம் சிறந்த நாட்டில் தவம் செய்யும் குடியில் புறச்சமயங்கள் சாராது பிறத்தல் மிகுந்த பாக்கியம்.

வாழ்வெனும் மையல் விட்டு
வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது சால
உயர்சிவ ஞானத் தாலே
போழ் இள மதியினானைப்
போற்றுவார் அருள்பெற் றாரே
                                                 -சிவஞான சித்தியார்


வாழ்வுபற்றிய செருக்குகள் பற்றாமலும், வறுமையில் சிறுமையடையாமலும் பணிவு கொண்டு, சைவ சமயம் சார்வது; நல்வினையில் பெறுதற்கரிய பேறு. மிக உயர்ந்த சிவஞானம் பெற்று பிறைமதி சூடிய, இறைவனை வழிபட்டு இருப்போர் அருள்மிகப் பெற்றவராம்.
                              
எனவே, வேதம் பயிலுகின்ற நாட்டில் பிறக்க முடியாதவர்களுக்கும், அன்றி பிறந்தும் நல்லூழ் குறைவால் திருநெறிச் சைவத்தை ஒழுகும் பெறு வாய்க்கமுடியாதவர்களுக்கும், அன்றி திருநெறிச் சைவத்தில் பிறந்தும் ஞானக்குறைவால் சிறுதெய்வவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் எம்பெருமான் சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு, அவர்கள் வழிபடும் தெய்வத்தின் வடிவம் தாங்கி அவர்களின் நல்வினை-தீவினைக்கு ஏற்ப அருள்பாலிக்கின்றார்.
 

பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றியை இழந்து தவித்தபோது தாய்ப்பன்றியாக உருவெடுத்து பாலூட்டிய எம்பெருமானின் கருணையை வார்த்தைகளால் அளவிடமுடியாது. அப்படிப்பட்ட எம்பெருமான்; நல்வழியில் நடப்பவர் ஞானக்குறைவால் தேவதைகளையோ அன்றி மானிடர்களையோ கடவுளாகக் கருதி வழிபட்டால், அவர்களை கைவிட்டுவிடுவாரா என்ன?

பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே ஆவர். எனவே வினைகள் செய்வனவாகவும், இன்ப-துன்பம் நுகர்வனவாகவும், பிறப்பு-இறப்பு என்னும் சாகரத்துள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இவர்கள் இருப்பதால் இச்சிறுதெய்வங்களால் ஆவதொன்றில்லை. ஆனால்  நல்வினை தீவினைக்கு ஏற்ப வந்தமைய வேண்டிய பலன்களை சிவபெருமானை அறியாத சிறுதெய்வ-பிறநெறி வழிபாட்டாளர்களுக்கு அவர்கள் நம்புகின்ற உருவெடுத்து சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்.  இது எப்பெருமானின் தனிப் பெருங்கருணையால் சிறுதெய்வ- பிறநெறி வழிபாட்டாளர்கள் பெறும் பயனாகும்.

எனவே; இத்தகு எம்பெருமானின் கருணையையும் முழுமுதற்தன்மையையும் உணர்ந்து எம்பெருமானின் திருவடிக்கு அன்பு செய்வதே சிறந்த அறமாகும். "காண்பவன் சிவனே ஆனால் அவனடிக்கு அன்பு செய்கை" என்று  மேலே தரப்பட்டுள்ள சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி  இதை வலியுறுத்துகின்றது.  இவ்வுண்மையை உணர மறுத்து,  சிவபெருமானின் திருவடியை மறந்து செய்கின்ற அறங்கள் யாவும் வீண் செயலே! "மாண்பறம் அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம் வீண்செயல்" என்று 
சிவஞானசித்தியார் பாடலில் (27) உள்ள வரி இதை தெளிவுபடுத்துகின்றது.

மயக்கவுணர்வால் தேவதைகளையும், மானிடர்களையும் வழிபடுபவர்க்கு சிவபெருமான் பெருஇரக்கம் கொண்டு பலனளிப்பதால், எல்லாவற்றுக்கும் உத்தவரவாதமாக விளங்கும் சிவபெருமானையே அன்புசெய்து பூசித்தல் வேண்டும் என்பதையே சிவஞானசித்தியார் நூல் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
 

நம்முடையதும் நம்மில் சிலர் மயக்கவுணர்வால் ஞானக்குறைவால் கடவுளாகக் கருதும் மானிடர்களினதும் தேவதைகளினதும் பிறப்பையும் இறப்பையும் அவரவர் கருவில் உதிக்கும் முன்னரே வரையறை செய்த எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிகளுக்கு அன்பு செய்து பூசிப்பது தவப்பயனே!
 

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக்  கருணை செய் தானே " - திருமந்திரம்


ஆகமப் பொருளை சிவபெருமான் தமிழ்-ஆரியம் என்னும் இருமொழிகளிலும் ஏக காலத்தில் அம்மைக்கு விளக்கியபோதும் நமது நல்லூழ் குறைவால் சிவாகமங்கள் தமிழில் கிடைக்காமற் போயிற்று. எனினும் சமயகுரவர்கள் வழியாக சைவசித்தாந்த நூல்களாக தமிழில் சிவாகப் பொருளை அறியும்பொருட்டு நமக்கு எம்பெருமான் வழிசமைத்திருக்க, நாம் அவற்றை அறியாது, உதாசீனம் செய்து வாழ்வது, அறிந்தோர் எடுத்தியம்பும் அறிவுரைகளை செவிமடுக்காது தவிர்ப்பது யாவும் மீளாப்பழிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்வோமாக!

மானிடப் பிறவி தானும்
வகுத்தது மனவாக்கு காயம்
ஆன் இடத்து ஐந்தும் மாடும்
அரன்பணிக் காக அன்றோ
வானிடத் தவரும் மண்மேல்
வந்துஅரன் தனைஇர்ச் சிப்பர்
ஊன் எடுத்து உழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ
                              -சிவஞானசித்தியார்

மனிதப் பிறவிக்கு, மனம் வாக்கு காயம் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது சிவன் பணிக்காகவே ஆகும்.ஐம்பொறிகளும் சிவன் பணிக்காகவே! வானில் உள்ள தேவர்களும் மண்ணில் வந்து சிவனை வழிபடுவர். அப்படியிருக்க; உடம்பைப் பெற்றும் இவை உணராதவர்கள் அறியாமை உடையவரே ஆவர் என்று சிவஞானசித்தியார் நூல் உரைக்கின்றது.

தேவர் சிவனை வழிபடும் பொருட்டு பூமிக்கு வருகையில்; நாம், பூமியில் சிவாலயங்களால் சூழப்பட்ட நற்றமிழ் நாட்டில் வாழும் பேறுபெற்றும் சிவாலய வழிபாட்டை மறந்து சிறுதெய்வ-பிறநெறி தெய்வ- மானிடச் சாமிகளை மயக்கத்தால் வழிபடுபது தீய ஊழின்  விளைவே!


பிறவாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் அழிவில்லாதவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை வழங்குபவனுமாகிய சிவபெருமானை வணங்குங்கள்; அவ்வாறு வணங்கினால் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப் பேறு அடையலாம்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி  மாயா  விருத்தமு மாமே
                                                 -திருமந்திரம்

 

சிவனருள் இருந்தால்தான் சிவனை வழிபடும் பேறு அமையும் என்பதை திருவாசகத்தில் சிவபுராணத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் தனது தேன் தமிழால் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்கிறார். சிவபெருமானின் அருள் இருந்தால்தான் சிவபெருமானை வழிபடும் சைவநெறியை ஒழுகும் 

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்

தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம்,கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் ,ரிசப விரதம் என்பன அவையாகும்.மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.
இவ்வாறு அருமையும் திருவருளும் நிறைந்த சிவராத்திரியானது நித்திய,பட்ச,யோக,மாத சிவராத்திரி,மகா சிவராத்திரி என ஐவகைப்படும்.
நித்திய சிவராத்திரி :- பன்னிரண்டு மாதங்களிலும் வருகிற தேய்பிறை,வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி எனப்படும்
மாத சிவராத்திரி :- ஒவ்வொரு மாதத்திலும் வருகிற தேய்பிறைச் சதுர்த்தசி மாத சிவராத்திரியாகும்
பட்ச சிவராத்திரி :-தை மாதத்தில்,தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூசை செய்தல பட்ச சிவராத்திரி என அழைக்கப்படும்.
யோக சிவராத்திரி :- திங்கள் கிழமையன்று அமாவாசையும் அறுபது நாழிகையும் இருந்தால் அன்றைய நாள் யோகசிவராத்திரி எனப்படும
மகா சிவராத்திரி :-ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும்
உத்தமோத்தம சிவராத்திரி,உத்தம சிவராத்திரி,மத்திம சிவராத்திரி,அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது இத்தம சிவராத்திரி.காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.
சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்
அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.
பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர்.இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.
வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.
சிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்
முதல் சாமம்: பஞ்சகவ்ய அபிடேகம்,சந்தனக் காப்பு,வில்வம்,தாமரை மலர்களால் அலங்கரித்தல் அர்ச்சனை செய்தல்,பச்சைப் பயிறு பொங்கல் நிவேதனம்,ரிக்வேத பாராயணம்
இரண்டாம் சாமம்: சர்க்கரை,பால்,தயிர்,நெய் கலந்த ரச பஞ்சாமிர்த அபிடேகம், பச்சைக் கற்பூரம்,பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்தல்,துளசி அலங்காரம்,வில்வ அர்ச்சனை,பாயசம் நிவேதனம்,யசூர்வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்: தேன் அபிடேகம்,பச்சைக் கற்பூரம் சார்த்தல்,மல்லிகை அலங்காரம்,வில்வம் அர்ச்சனை,எள் அன்னம் நிவேதனம்,சாமவேத பாராயணம்
நான்காம் சாமம்: கருப்பஞ்சாறு அபிடேகம்,நந்தியாவட்டை மலர் சார்த்தல்,அல்லி,நீலோற்பலம்,நந்தியாவர்த்தம் ஆகிய மலர்களால் அலங்காரம் மற்றும் அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம்,அதர்வண வேத பாராயணம்

சிவராத்திரி விரத விதிகள்
சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள்
அதிகாலை நீராடி,அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.
வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.
நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை லிங்கோத்பவ காலம் என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே!தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் திரு அருமைகள்

வேடனொருவன் வேட்டையாடச் சென்றபோது புலி ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது. செய்வதறியாது ஓடிச் சென்று மரமொன்றில் ஏறினான்.துரத்தி வந்த புலியும் அவனை கொல்வதற்காய் கீழேயே காத்திருக்கத் தொடங்கியது. இரவானது. புலி போனபாடில்லை. நித்திரை கொண்டால் மரத்தில் இருந்து தவறி விழுந்து புலிக்கு இரையாகும் வாய்ப்பு இருப்பதை எண்ணி நித்திரை கொள்ளாது மரத்தின்மேலேயே தங்கியிருந்த வேடன் மரத்தில் இருந்த இலைகளை பிடுங்கிப் பிடுங்கி கிழே போட்டவாறு இருந்தான். நித்திரையைத் தவர்ப்பதன் பொருட்டு அவன் மரத்தின் இலைகளைப் பிடுங்கிக் பிடுங்கிப் போட்டுக்கொண்டிருந்தான்.மறுநாள் காலை புலி தானாகவே விலகிச் சென்றுவிட்டது.
அன்று இரவு சிவராத்திரி இரவாகும். அவன் ஏறிய மரம் வில்வ மரமாகும். அவன் பிடுங்கிப் போட்ட வில்வ இலைகள் கிழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. இவ்வாறு தன்னையறியாமலே உண்ணாது உறங்காது சிவராத்திரி விரதத்தையும் சிவலிங்க பூசையையும் செய்த புண்ணியத்தை பெற்றவேடன் பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றான். இவ் அற்புதம் நடைபெற்ற புண்ணிய பூமி திருவைகாவூர் திருத்தலமாகும். (திருவைகாவூர் எனும் சொல்லின்மேல் சொடுக்குவதம் மூலம் குறித்த திருத்தலத்தைக் கண்டு இறையின்பம் நுகரலாம்.)
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று,மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி
எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

அர்ஜூனன் தவமிருந்து எம்பெருமானிடம் பாசுபதம் பெற்றநாள்
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்
மார்க்கண்டேயருக்காய் எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்
கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.(திருக்காளத்தி திருத்தலத்தை கண்டு சிவானந்தம் நுகர திருக்காளத்தி எனும் சொல்லின்மேல் சொடுக்குக)
"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம்.ஆனால் சிறப்பாக,மலர்கள்,நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.
நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
திருமந்திரம்