Monday 21 October 2013

சைவசித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்கள்(மும்மலள்)



மும்மலங்கள்

மலம் என்பது இந்து சமயத்தின் ஒரு தத்துவப் பிரிவாகிய சைவசித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களில் ஒன்றாகும். இம்மூன்று உண்மைப் பொருள்கள் பதி (இறைவன்), பசு (உயிர்கள்), பாசம் (மலங்கள்) என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையா
க உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து மும்மலங்கள் என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,
பொருளடக்கம்

1
மலங்களின் வகைகள்
1.1
ஆணவம்
1.2
கன்மம்
1.3
மாயை
2
உசாத்துணைகள்

மலங்களின் வகைகள்

மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை ஆணவம், கன்மம், மாயை எனப்படுகின்றன.
ஆணவம்

மலங்களுள் முதன்மையானது ஆணவ மலம். இதனால் இது மூல மலம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. தமிழ் நூல்களில் இது இருள் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல்; இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவசித்தாந்தம்.
கன்மம்

கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை வினை என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். வினைகளிலும் மூன்று வகை உண்டு. இவை:

பழவினை (சஞ்சிதம்)
நுகர்வினை (பிராரத்தம்)
ஏறுவினை (ஆகாமியம்)

என்பனவாம். இவற்றுள், பழவினை என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும். நுகர்வினை, அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். ஏறுவினை என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும்.
மாயை

மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் சுவாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.

மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம்.

மாயையும், தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

நன்றி