Tuesday 11 August 2015

அருகம்புல்லும் சிவபதமும்!



எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது. அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது.

இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது.

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி - தகவின்
அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்
கண்டீர் திருச்சிற் சபையானைத் தேர்ந்து

பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்.

சிற்சபையானை எதைக்கொண்டு அருச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து. பகுதி, தகுதி, விகுதி என்பதில்,

இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து "கு' (பகுதி, தகுதி, விகுதி). இதைக் கூட்டினால் மூன்று "கு' வரும். இதை இரட்டித்தால் ஆறு "கு' - அறுகு வரும். (அறுகு-அறுகம்புல்).

அருச்சித்தால் முன் ஆம்: அறுகம்புல் கொண்டு அருச்சித்தால் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) - பதவி என்பது வரும். (பதவி - சிவபதம்).

அது கடை ஆம்: பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால், கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று "தி' வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும். இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டுள்ளார்.

(நன்றி - தினமணி)

கடவுள் கண்ட முதல் நூல்!



தென்றமிழ் நாட்டில் மிகப்பழைய காலத்தில் கடவுளுண்மை யுணர்ந்த நான்கு அறிவர்கள் பிறப்பிறப்பு அற்று வீட்டையடைவதற்கு ஏதுவாகிய ஒளி நெறியைக் காண முயன்றனர். (அறிவர்களுள் சித்தர் என்பார் உலகப்பயன் தரத்தக்க மருந்து மந்திரம் முதலிய பல கலைகளையும் வளர்த்தனர். மேற்சொன்ன நான்கு அறிவர்கள் கடவுளை நினைந்து ஓர் ஆலமரத்தடியில் தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி ஒளிநெறியை அறிவுறுத்தினர். அஃது
“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
என்று திருஞானசம்பந்தர் திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த் தவத்தோன்”
என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும்.
நோக்கத்தை வைத்தே நம்முடைய சமயத்துக்குப் பேர் ஏற்பட்டுள்ளது. திரு என்பது வீட்டின்பத்தைக் குறிக்கும். “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்ற சுந்தரர் திருவாக்கில் திரு என்ற சொல் அப்பொருளில் வந்தது காண்க. திருநெறி என்பது தமிழர் சமயத்தின் பெயர். அதனைச் செந்நெறி யென்றுங்கூறுப. “திருநெறிய தமிழ்,” “செந்நெறிக்கே ஏற்றுந்தகையன்” என வருதல் காண்க.

அறம், பொருள் இன்பங்களைப் பற்றிய ஒளிநெறியைத் திருவருளால் அறிந்த நான்கு அறிவர்களும் தத்தம் மாணவர்களுக்கு வெவ்வேறாக அதனை அறிவுறுத்தினர். அவர்கள் வாய்மொழியாற் கூறிய அருள் நூல்கள் நான்மறை எனப் பெயர்பெற்றன. கடவுளருளால் அவை உணர்த்தப் பட்டமையின் அவை கடவுள் கண்ட முதல் நூல் எனப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைப்பற்றிப் பேசின.

அறத்தாற் பொருளீட்டி உலக இன்பத்தைத் துய்த்து அதன் நிலையாமையைக் கண்டு அதனை வெறுத்து வீட்டின்பம் நாடுதலே மனித வாழ்க்கையுள் முக்கிய நோக்கமாகும். அகப்பொருள் நூலுக்கு இன்பங்கூறுதல் முக்கியமாதலின், ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என இன்பத்தை முதலில் எடுத்தோதினர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

-    (தமிழர் சமயம் – கா.சு.பிள்ளை எழுதிய நூலிலிருந்து)

சைவக் கொக்கு




துரையில் நீர்வளம் குறைந்து குளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டபோது நாரை ஒன்று இரை தேடி காட்டுக்குச்சென்றது. அங்கு நீர் நிறைந்த குளத்தைக் கண்டு மகிழ்ந்தது. குளத்தில் முழு நீறு பூசிய அடியவர்கள் ஐந்தெழுத்து மந்திரம் ஓதி நீராடிக் கொண்டிருந்தனர். அறம், பொருள், இன்பம் வீடு முதலான நான்கு வேதங்களையும், பரமனின் அருள் திருக்கோலப் புகழையும் பாடி வழிபட்டனர். இனிய மந்திர ஒலிகளைக் கேட்ட நாரை அக்குளத்தில் அடியவர்களைச் சுற்றிலும் சிறிய மீன்களும் பெரிய மீன்களும் துள்ளி விளையாடிய விந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டது. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்ணாத அற்புதக் காட்சியைக் கண்டது.

ரமனைப் போற்றும் மந்திர ஒலியை கேட்டும், மீன்களின் கொல்லா நோன்பையும் கண்ட நாரை இனி தானும் மீன்களை உண்பது இல்லை என்று முடிவு செய்தது. அதன் பின்னர் தண்ணீர் மட்டுமே பருகியது.

நீராடி மந்திரம் சொல்லி முடித்துக் கரையேறிய அடியவர்கள் தமிழ் வேள்வி வழிபாடுகளைச் செய்தனர். பரமனின் அருட் செயல்களைப் பாடி வழிபட்டனர்.

ரமன் அன்பர்களுக்குக் காட்டிய மாபெரும் கருணை, மகிமையையெல்லாம் பேசி மகிழ்ந்தனர். அவையாவன:
  • சந்திரனுக்கு வாழ்வளித்தது.
  • தென்முகக் கடவுளாய் அமர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வேதங்களை உரைத்தது.
  • ஐம்முக ஈசனாய் ஆகமம் அருளிச் செய்தது.
  • நாகங்களை அணிந்து கொண்டு நாகங்களுக்கு அருளி நாகேசுவரன் ஆனது.
  • பகீரதனுக்காக கங்கையைத் தாங்கி மண்ணுலகைக் காத்தது.
  • நஞ்சு உண்டு பிரம்ம லோகம், வைகுண்டம் உட்பட அனைத்து உலகங்களையும்; நான்முகன், திருமால் உட்பட அனைத்து உயிர்களையும் காத்தது.
  • புன்னகையால் முப்புரம் எரித்து அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அருள் புரிந்தது.
  • முக்கண்ணன் ஆகி உலகங்களை வாழ வைத்தது.
  • விளக்கைத் தூண்டிய எலியை மகாபலிச் சக்கரவர்த்தியாக்கியது.
  • மரத்தின் மேல் இருந்து வில்வ இலைகளை உதிர்த்த குரங்கினை முசுகுந்தச் சோழசக்கரவர்த்தியாக்கியது.
  • வாமனனால் குருடாக்கப்பட்ட சுக்கிராச்சாரியருக்கு கண் அளித்தது.
  • மார்க்கண்டேயருக்காகத் திருவடியால் காலனை மாய்த்துப்பின் கருணை காட்டி வாழ வைத்தது.
  • நெற்றிக்கண்ணால் காமனை எரித்துப் பின் இரதிக்காகப் பெரும் கருணையுடன் உயிர் கொடுத்தது.
  • சிவபூசை செய்த திருமாலுக்குச் சக்கரத்தையும் சங்கினையும் அருளிச் செய்தது.
  • தட்ச யாகத்தில் தலை துண்டிக்கப்பட்ட நான்முகனுக்கும் திருமாலுக்கும் மீண்டும் சிரம் அருளியது.
  • மற்ற தேவர்களுக்கும் அவரவர்கள் இழந்த அங்கங்களை நலமாக்கி அருளிச் செய்தது.
  • நான்முகன் சிரம் கொய்த பைரவருக்கும், பிள்ளையாருக்கும், முருகனுக்கும் அருள் புரிந்தது.
  • உபமன்யுவுக்காக பாற்கடல் அருளியது.
  • நான்முகன், திருமால், உருத்திரன் முதலான மும்மூர்த்திகளுக்கும், பராசத்திக்கும், கலைமகளுக்கும், திருமகளுக்கும் பல முறையும் பல தலங்களிலும் பல வகையிலும் அருளியது.
  • திருமால் பிறந்த பல பிறப்புகளிலும் கூர்ம சம்காரமூர்த்தியாகவும், நரசிம்ம சம்கார மூர்த்தியாகவும் தோன்றி, திருமாலுக்கு கருணை புரிந்து மீண்டும் வைகுண்ட வாழ்வை திருமாலுக்கு அருளியது.
  • ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு அசுரர்களை ஏமாற்றிய மோகினியின் பாவம் போக்கியது.
  • தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை உரித்து இடையில் அணிந்து கொண்டது.
  • சிவபூசை செய்த வாமனனது குற்றமும் பழியும் போக்கி  அருளியது.
  • பரசுராமருக்கு மழுவாயுதத்தை அருளியது.
  • சிவபூசை செய்த இராமனது பிரம்மகத்தி தோசம் போக்கியது.
  • காணாமல் போன மைந்தனை மீண்டும் பெறுவதற்காக ருக்குமணியுடன் சோமவார விரதம் இருந்து சிவபூசை செய்த கண்ணனுக்கு அருளியது.
  • பல்வேறு தலங்களிலும் சிவபூசை செய்து வழிபட்ட திருமால் உள்ளிட்ட தேவர்களுக்கும், கிரகங்களுக்கும், முனிவர்களுக்கும், அடியார்களுக்கும், அசுரர்களுக்கும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், புழுபூச்சிகளுக்கும் கருணை காட்டி அருளியது எனப் பரம்பொருளின் அருட்செயல்களை யெல்லாம் ஓதினர்.

துரை பொற்றாமரைக்குளப் பெருமை பாடி சொக்கநாதர் அன்பர்களுக்குக் காட்டிய மாபெரும் கருணை மகிமையெல்லாம் பேசி மகிழ்ந்தனர். பரமனின் மகிமைகளை கேட்ட நாரை சொக்கநாதர் கோயிலை நோக்கிப் பறந்தது. 

பொற்றாமரைக் குளத்தில் முழுகி கோயிலை வலம் வந்தது. தண்ணீர் மட்டுமே பருகி வாழ்ந்தது. புனிதப் பொற்றாமரைக் குளத்தில் இருந்த மீன்களைப் பறவைகள் உண்பதைக் கண்டு வருந்தியது.
சைவப்பிறவியாகப் பிறந்த மனிதர்களே பிறவிப்பண்பு மாறி மற்ற உயிர்களை அடித்து உண்ணும் மாமிசப்பிராணியாக இருக்கும்போது மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின் மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின் குணத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்று கலங்கியது. 

நாள்தோறும் சொக்கநாதர் கோயிலை வலம் வந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் போகுமாறு அருள வேண்டும்  என்று பரம்பொருளை வேண்டியது. நாரையின் வேண்டுதலுக்கு இரங்கிப் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாதவாறு அருள்புரிந்து நாரையின் துயர் தீர்த்தார்.

மாமிசம் உண்ணும் பறவை இனமாகப் பிறந்தாலும் பக்தியுடன் சீவகாருண்ய வாழ்க்கை வாழ்ந்து பல நாட்கள் நீரை மட்டுமே பருகி சொக்கநாதர் கோயிலை வலம் வந்த நாரைக்குப் பரமன் மீன்டும் வந்து பிறக்காத முத்தி அருளிச் சிவகணமாக்கிச் சிவலோக வாழ்வை அருளிச் செய்தார்.

ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றே!


உலக மக்கள் அறியாமையிலிருந்தும், விலங்கு உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு பண்பட்ட அன்புள்ளத்தோடு அற வாழ்க்கையைக் கடைப்பிடித்து, சாந்த சீலர்களாய், ஒழுக்கமுள்ள உத்தமர்களாய், மனித நேயம் கொண்டவராய் வாழவும், நாட்டில் ஒற்றுமையுணர்வு மேலோங்கி அமைதி நிலவவும் அறிவுரை வழங்கி, நல்வழி வகுத்து அண்மையில் (1850-1929) வாழ்ந்த அருளாளர்தான் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்.

அவர் அத்தியாச்சிரம, சுத்தாத்வைத, வைதீக சைவ சித்தாந்த ஞானபாநு என்று புகழ்ந்து வணங்கப் படுகின்றார். சுவாமிகளின் சீடரான தமிழ்த்தென்றல் திரு. வி.க. தம் குரு வணக்கத்தில் பாம்பன் சுவாமிகளைத் “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்.

“ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றேயெனவும், தமிழாலும், வடமொழியாலும் அனைத்துக் கடவுட் கொள்கைகளையும் ஐயந்திரிபற உணர வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டும் ஒரு நெறி நோக்கியனவே யெனவும், இல்லறமும், துறவறமும் முரண் பட்டனவல்ல, ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வரும் ஒருமை நிலையினவே என்றும், இவ்வாறு இங்கே கூறப்பெற்ற மூவகை இருமைகளையும் இணைக்கும் திருவருட் பாலமாக நின்று உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டிய அருளாளரே பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்” என்று சித்தாந்த சரபம் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி அவர்கள் எழுதியுள்ளார்.

சுவாமிகள் இசைத் தமிழிலும், இயல் தமிழிலும் சிறந்து விளங்கியவர். இவர் வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன் என்றார் திரு.வி.க.

பலதெய்வ வழிபாட்டினைக் கண்டித்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடையவர். ஆன்ம நெறிக்குத் தடையாய் இருப்பது சாதி அபிமானமே என்று உரைத்தவர். சாதி வேறுபாடுகளை அறவே வெறுத்தவர். பொய்யினில் முனிவு கொண்டவர். சீவகாருண்யத்தைப் பெரிதும் போற்றியவர். ஒரு மூட்டைப் பூச்சி சிறுவனால் கொல்லப் பட்டதைக் கண்டு அவனைக் கண்டித்து மனம் வருந்தி அன்று பூராவும் உணவு உட்கொள்ளாமல் இருந்தார் சுவாமிகள்.

இறைவன் படைப்புகள் அனைத்தும் முக்கியமானவை என்றும், உடல் உருவத்தில் வேறுபட்டாலும் உயிர் அடிப்படையில் சமம் என்றும் கருதியவர். மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவர். வடமொழியே கலவாத தூய தமிழில் சேந்தன் செந்தமிழ் என்ற நூலை இயற்றியவர். சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று அறிவித்தவர். சேந்தன் செந்தமிழ் என்ற நூலுக்குப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் வரைந்த முகவுரையில் கூறியதாவது, “நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும், உரையும் உள்ள அமைப்பு இதுவரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.”

“இரை தேடுவதோடு இறையைத் தேடு” என்று சுவாமிகள் அறிவுறுத்தினார். முருகன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்று துணிபு கொண்டு உள்ளம் உருகி அருளிய பாடல்கள் 6666. வியாசங்கள் 32. இவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சமய சாத்திர தோத்திரம் முதலியவற்றின் நுட்பங்களைக் கொண்டன.

சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளை யாத்தார்கள். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி இரண்டரைக் கடிகைக்குள் “பஞ்சவிம்சதி அதிக சதபங்கியை” அருளினார்கள். இவருடைய பாடல்கள் 20 க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திர சக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலியும் காவியச் சுவை மிக்கவை. இவற்றை உள்ளத் தூய்மையுடன் ஓதி உடற் பிணியிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுபவர் பலர். பக்தர்கள் வழிபாட்டில் ஓதிப் பயன் பெறும் பதிகங்களில் முக்கியமானவை வருமாறு:

குமாரஸ்தவம் : கந்தபுராணச் சுருக்கம். 44 மந்திரங்களால் முருகப் பெருமானை அர்ச்சித்து, அவனுடைய திருவடியை அடைய வழிவகுப்பது.

சண்முக கவசம் : பகை, பயங்கரம், பாவம், வறுமை, நோய் முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறச் செய்வது.


பகை கடிதல் : பகையை வெல்லவும், திருமயிலின் மீது முருகனைத் தரிசிக்கவும் உதவுவது.


அட்டாட்ட விக்கிரக லீலை : உரோக நாசம், பாவ நாசம், சத்துரு நாசம், ஆயுள் விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி, உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும், முக்தியும் வாய்க்கும்.


வேற்குழவி வேட்கை : புத்திர தோட நிவர்த்தி, சந்ததி விருத்தி செய்வது.


திருக்கயிலாயத் திருவிளையாடல்: சிறுவர்களின் உடல் வன்மை, கல்வி அறிவு பெறுதல்.


பஞ்சாமிர்த வண்ணம் : ஆயுள் வளர்த்தல், மோட்சம், சுகம் பெறுதல்.


துக்கரகித பிரார்த்தனை : பல்வேறு துக்கங்களிலிருந்து விடுதலை அடைதல்.


பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப் பட்டவை. ஓர் எடுத்துக் காட்டு. பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணப் பாடலை இரண்டு வேதியர்கள் திருச்செந்தூர் கவுண்ட மண்டபத்தில் நாள்தோறும் பாராயணம் செய்யும்போது ஒரு நாள் அழகான ஓர் இளைஞன் இப்பாராயணத்தைக் கேட்டு மகிழ்ந்ததை அங்குள்ள மூதாட்டியிடம் சொன்னதாகப் பாம்பன் சுவாமிகள் பெருவேண்டுகோள் என்னும் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம்
இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப் பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே
வரிமாமறை இறைவா எனை மறவேல் எனை மறவேல்.”

“நான் பாடும் பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்” என்றும், “எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்” என்றும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைத் துதித்து உலகவர்க்காகவே வேண்டும் அருள்நிலை பரமாசாரியாராகவும், சமுதாய மேம்பாட்டுச் சிற்பியாகவும் திகழ்ந்தவர்.

பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கவை.

நிஷ்டையும், முருகப் பெருமான் தரிசனமும் : முருகப் பெருமானைக் கனவிலும், நினைவிலும் பலமுறை தரிசித்தவர். 1894 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இராமநாதபுரத்தை அடுத்த பிரப்பன் வலசை என்ற சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக் குழியில் 35 நாள்கள் ஊண், உறக்கமின்றித் தொடர்ந்து நிட்டை செய்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரிடம் உபதேசம் பெற்றார் பாம்பன் சுவாமிகள். இந்த தெய்வீக அனுபவத்தைத் தகராலய ரகசியம் (1896-”ஆம் வருடம்) என்ற தம்முடைய நூலில் விவரித்துள்ளார். 35 நாள்காறுந் தனிநிட்டை காத்திருந்த ஞான்று கௌபீனதாரியாய் வெளிப்பட்ட இறைவன், எமக்கொரு மொழியினுணர்த்தியருளினன் என்று இந்நூல் பாயிரத்தில் சுவாமிகள் கூறியுள்ளார்.

“எத்தனையோ தலம் சுற்றி வந்தேன் மனம் எட்டுணையும்
அத்தன் குமாரன் முருகனை நாட அடங்கவில்லை
பக்தர்கள் வாழ் பிரப்பன் வலசைச் செம்பதிதனிலே
சத்தியமாகக் கைகூடினதால் இனித் தாழ்வில்லையே”

மயூரவாகன சேவளம் : சுவாமிகளின் 73 ஆம் வயதில் (27.12.1923) ஓர் அற்புதம் நடந்தது. வட சென்னையிலுள்ள தம்பு செட்டித் தெருவில் சுவாமிகள் சென்றபோது ஒரு குதிரை வண்டி வேகமாக வந்து இவரைக் கீழே தள்ளியதால் இவருடைய கால் எலும்பு முறிந்தது. சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சுவாமிகள் சேர்க்கப்பட்டபோது அங்குள்ள ஆங்கிலேய மருத்துவர்கள் சுவாமிகள் மிகவும் வயதானவர் என்பதாலும், உப்பை அறவே நீக்கிய உணவு உட்கொள்வதாலும் எலும்புகள் இணையாது என்றும், காலின் ஒரு பகுதியை நீக்கிவிட வேண்டும் என்றும் கருதினார்கள். இக்கருத்தை சுவாமிகள் ஏற்க மறுத்து முருகப் பெருமான் கருணையால் இத்துன்பத்திலிருந்து தாம் காப்பாற்றப் படுவது நிச்சயம் என்று எண்ணி உறுதியுடன் வழிபட்டார்கள்.

“வானம் இடிந்து தலையில் விழும்படி
வம்பு வந்தாலும் என்னை- & அந்தக்
கான மயில் முருகையன் திருவருள்
கைவிட மாட்டாதே”

என்பது சுவாமிகளின் துணிபு.

சுவாமிகளின் சீடர்கள் சுவாமிகளால் அருளப் பெற்ற சண்முக கவசத்தை மனமுருகிப் பாராயணம் செய்தார்கள். மருத்துவமனையில் சேர்த்த 11-ஆம் நாள் இரவு (27.12.1923) சுவாமிகள் இரண்டு மயில்கள் மிகுந்த ஒளியோடு நடனம் ஆடுவதைக் கண்டு களித்து பிறகு அம்மயில்கள் மறைந்தபோது அழுது புலம்பினார்.

“விண் மகிழ்ந்திட வேல்விடு வேள்மயில்
கண் மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்
மண் மகிழ்ந்திட மாகம் மகிழ்ந்திட
எண் மகிழ்ந்த பதினொன்றின் இராவிலே”

பிறகு சுவாமிகள் படுத்திருந்த படுக்கையில் ஓர் சிவந்த நிறக் குழந்தை படுத்திருப்பதைச் சுவாமிகள் கண்ணுற்று, குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அக்குழந்தை மறைந்து விட்டது. அரசு மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்து எலும்பு கூடி வருவதைக் கண்டு ஆச்சர்யத்தோடு மகிழ்ந்தார்கள்.

“முன்காலை உதைத்தவன் கால்முளையாய் நின்றாய்
பின்காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என்காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின்காலை எனக்கு அளி என்றான்”

சுவாமிகள் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கிப் பூரண குணம் பெற்று பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடர்கள் இல்லத்தை அடைந்தார். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சுவாமிகள் ‘அசோகசாலவாசம்’ என்ற நூலில் 1924-ஆம் ஆண்டு விளக்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சி முருகப் பெருமான் தன் அடியவர் மீது கொண்டுள்ள கருணையையும், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தின் மகிமையையும் வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல், கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் என்ற உண்மையை வலியுறுத்துகிறது.

பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும், அதன் கீழ் எழுதப்பட்டுள்ள மேற்கண்ட அற்புத நிகழ்ச்சிக் குறிப்பையும் சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் 11-ஆவது வார்டில் (பழைய மன்றோ வார்டு) இன்றும் காணலாம்.

இந்த மயில் காட்சியையும், தெய்வீகச் செயல்களையும் நன்றியுணர்வுடன் போற்றி மயூரவாகன சேவன விழாவாக வருடந்தோறும் பாம்பன் சுவாமிகள் தாம் முக்தியடையும் வரை (1929) சிறப்பாகக் கொண்டாடினார்கள். சுவாமிகளால் நிறுவப்பட்ட மகாதேஜோ மண்டல சபையினர் இவ்விழாவை சுவாமிகளின் வில் சாசனத்தில் (1926) விளக்கியவாறு வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள்.

பாம்பன் சுவாமிகள் செவ்வேட்பரமன் சேவடியை 30.05.1929 தேதியில் அடைந்தார்கள். அவருடைய சமாதி நிலையம் சென்னை திருவான்மியூரில் நிறுவப்பட்டுள்ளது.

(நன்றி - செ.வே. சதாநந்தன் - ஓம்சக்தி ஆன்லைன் .காம் )

சிவபூசையின் இன்றியமையாமை பற்றி சமயக் குரவர்கள்...!



இறைவனை அடைவிக்கும் படிமுறைகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பன. இந்த நான்கு நெறிகளில் நோன்பு எனப்படும் இரண்டாம் படிமுறையில் சிவபூசை அடங்கும்.

இது படிமுறை என்றமையால் இந்தப்படியில் காலை வைத்துத்தான் அடுத்த படிகளில் ஏற முடியும் என்பதும், ஏறி இறைவனை அடையமுடியும் என்பதும் கூறாமலே விளங்கும் இதனால் இதன் இன்றியமையாமை புலனாகிறது.

இவ்வாறாகின் இதன் இன்றியமையாமை பற்றி நம் சமயக் குரவர்களின் கருத்து என்ன? அவர்கள் இதை வலியுறுத்தி இருக்கிறார்களா?

முதலில் சீல நெறியை விளக்க வந்தவர் என்றும், நம் சமய குரவரில் முதலாவதாக வைத்து எண்ணப்படுபவருமான சம்பந்தர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.
(முதல் திருமுறை – பதிக எண்:21 - திருச்சிவபுரம், பாடல் எண்: 04)

இந்தப்பாட்டில் சம்பந்தர் இறைவனுக்கு நறுநீரால் திருமஞ்சனம் செய்யச் சொல்கிறார்; சந்தனக் கலவையைச் சாத்தச் சொல்கிறார். அன்றலர்ந்த நாண் மலர்களால் நறும்புகை காட்டச் சொல்கிறார். பதினாறு தீபங்களை வளரொளியாக நிரல்படக் காட்டச் சொல்கிறார் இவையனைத்தும் சிவபூசை எனப்படும் நோன்பு வழிபாட்டின் உறுப்புக்கள். இவற்றைக் கொண்டு நியதிப்படி வழிபடும் அடியவர்க்கு திருச்சிவபுரத்து இறைவனாகிய சிவபெருமான் குறைவில்லாத பதமுத்தியை நாம் உரிமைக்குரல் கொடுக்காமலேயே தானாக வந்து சேர உதவுவான் என்கிறார்.

சரி, இது இறந்தபின் அல்லவா வரும்? என்று ஏக்கத்துடன் கேட்போருக்கு ஆறுதலாக இவ்வாறு சிவபூசை செய்து நியதிப்படி வழிபடும் அடியவரைச் செயமகள் என்று கூறப்படும் திருமகளின் தலைவர் என்று மக்கள் போற்றும்படி இவ்வுலகிலேயே நிதிக்குவையும் சிவபெருமான் நல்குவார் என்று பாட்டின் இறுதியில் கூறுகிறார்.
(தொடரும்)

ஆண்குறியா சிவலிங்கம்?



லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”

தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.

தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.
சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
   
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது) 

சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா?



வாகனத்தின் பின்னும் கொடிமரத்தின் முன்னும் பலிபீடம் அமைக்கப்பட வேண்டும். பலி என்பது உணவைக் குறிக்கும் ஒரு சொல். இதைப் பிற்காலத்தில் தவறான பொருளில் உயிர்ப்பலி என்று கூறினர்.

உயிரின் தன்முனைப்பை இறைவன்முன் ஒழித்து அதையே இறைவனுக்குச் சமர்ப்பிப்பது பின்னாளில் உயிர்ப்பலி என்று திரிந்து விட்டது. தன்முனைப்பை எவன் இறைவன் முன் அமுதாகப் படைக்கிறானோ அவனே இறைவனை அடைவான்.

யான் எனதென்றும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
என்பது திருவள்ளுவர் இதுபற்றிக்கூறுவது. 

தன்முனைப்பாகிய செறுக்கறுத்தலை கோழி அறுத்தல், ஆடறுத்தல் என்று முற்றிலுமாக சிதைத்து விட்டனர். பலி என்றது அமுது என்பது போய், பலி என்பது உயிர்ப்பலி என்று மக்கள் மாற்றிச் சிதைத்தது கொடுமையிலும் கொடுமை.

கோயிலில் நாம் இறைவனுக்கு ஊட்டும் பொருட்கள் அனைத்தும் அவன் படைத்தது. எனவே அவற்றைப் படைப்பதில் இறைவன் புதிதாகக் கொள்வது எதுவும் இல்லை. ஆனால், நம்மையே இறைவனுக்குப் படைத்தால் அதையே இறைவன் விரும்புவான். “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றார் விபுலானந்த அடிகள்.

இதற்கு மாறாக, உயிர்வதை செய்தால் கருணையே வடிவான இறைவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
ஏனைய தெய்வங்களிடையே பலி இட்டு வழிபாடு நடந்திருந்தாலும், சிவலிங்கத்தின் முன் மிருகபலி இட்டு வழிபாடு செய்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றில்லை. மாறாக, சிவலிங்கத்தின் முன் மிருகபலியிட்டால் சிவன் அங்கிருந்து மறைந்து விடுவான் என்று 52-வது புறநானூற்றுப் பாடலில் வருகிறது.

“கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்”
என்பன அவ்வரிகள். கடவுள் கந்தம் என்பது நடுதறி எனப்படும் சிவலிங்கத்தைக் குறிக்கும். பொதியில் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். பலியிட்டால் சிவலிங்க ஆற்றல் மறைந்து கோயில் பாழ்படும் என்கிறது அவ்வரி.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)   

எழுவகைத் தாண்டவம்!



கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்தெழுந் தனவால்
ஓதும் அவ்வேழ் சுரங்களினால்
நன்று நம்மிடையே எழுவித நடனம்
நலம்பெறத் தோன்றின…
(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 9)

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ
மொடும், உலக சங்கார
மேதகு நடனம், இவை சிவை! நாம்
விதந்த நன்னாமம்என்  றுணர்தி
(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் - 10)

இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.

பிரம கற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்;
செப்பும் அத்தானம் கேண்மோ;
அரவும் அம்புலியும் போற்றும்
அருள் தில்லை யம்பலத்தில்
பரவும் ஆனந்த தாண்டவம்
செய்வோம் பைம்பொற் பாவாய்!

இவர்மணி மாடக் கூடல்
இரசித சபையில் நின்று
தவரடி பரவச் செய்தும்
சந்தியா தாண்டவம், செம்
பவளமெல் இதழி! நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை, என்றும்
சிவமிகு திருத்த லத்தில்
சிற்சபை யதனில் செய்வோம்

அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம், பூங்
கத்திகைக் குழலி! ஆலங்
காட்டினிற் காளி தாண்ட
வத்தை நன்கியற்று கிற்போம்
இரத்தின சபையில் மாதொ
(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 11,12,13,14)

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி
ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்
காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும்
கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்ருகிற்போம்

தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.

இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.
(நன்றி: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘இறைவன் ஆடிய எழுவகை தாண்டவம்’ புத்தகம்)

சிவனை உணரும் வழி!


(திரு.வி.கலியாணசுந்தரனார் (திரு.வி.க) பேசியது)

எந்நாட்டவர்க்கும் இறைவன் – நமது தென்னாடுடைய சிவன் – மாற்ற மனங்கடந்து, ஊர் பேரின்றி, ஆதியந்தமின்றி இருக்கிறான் எனப் போந்தனர்.

அச்சிவனை எப்படி உணர்வது?
சிவன் உணர இயலாத ஒருவனா? என்று ஐயுற இடமுண்டு.
சிவன் “மாற்ற மனங்கடந்தவன்”, “போக்கு வரவுமிலாப் புண்ணியன்”, ஒருநாமம் ஓருருவமில்லாதவன்” என்றருளிய நமது பெரியார், சிவனை உணராது அவ்வுரைகளைப் பகிர்ந்தாரா?
அவர் எங்ஙனம் உணர்ந்தார்? “நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற்றின்மை” என்று உணரும் வழியை அப்பெரியார் காட்டா நிற்கிறாரா?

இறைவன் இயல்பு:
மாற்ற மனங்கடந்த ஒன்றை மாற்ற மனங்கடந்தே பார்த்தல் வேண்டும். போக்கு வரவில்லா ஒன்றை மனஒட்டமில்லாவிடத்திலிருந்தே நோக்கல் வேண்டும். கருவி கரணங்களில்லா ஒன்றைக் கருவிகரணங் கடந்து நின்றே காண்டல் வேண்டும்.
பருவுடல் உணர்வுமட்டுங்கொண்டு “மாற்ற மனங்கடந்த இறைவன் எங்கே” என்றால், எங்கே, எங்கே என்றுதான் ஏங்கியொழிதல் வேண்டும்.
“உரையுணர்வு இறந்துநின்று உணர்வதோர் உணர்வே” என் வரூஉம் இன்னுரையை உற்று உற்று ஊன்றி ஊன்றி நோக்குவாமாக.
“உணர்வதோர் உணர்வே” என்று முழுமுதற்பொருளை நம் பெருமான் விளிக்கிறார். எந்நிலையில் நின்று அச்செம்பொருளை உணர்வது என்பதை அன்பர் உலகிற்கி உணர்த்தாமற் போகவில்லை.

அந்நிலை எது?
“உரையுணர்வு இறந்து நிற்கும் நிலை” என்று அடிகள் அறிவுறுத்துகிறார். அப்பெருநிலையே நினைப்பற நினைக்கும் நிலையென்க. நினைப்பற நினைக்கும் நிலையில் “இறைவனல்லால் பிறிதுமற்றின்மை” என்னுங்காட்சி பெறுதல் கூடும். இந்நிலை நின்றே மாணிக்கவாசகனார் “நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற்றின்மை” என்று இறைவனுண்மையை இனிதெடுத்துரைக்கிறார்.
நினைப்பற நினைக்கும் ஒரு நிலை; பருவுடல் நுண்ணுடல் கடந்த ஒரு நிலை; கன்மம் தேய்ந்து ஆணவம் ஒடுங்கும் ஓர் உணர்வுநிலை. அந்நிலையில் இறைவன் திருவருள் பதியும். அத்திருவருளால் இறைவன் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் உண்மையை உணரக் கூடும்.
“இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதியுங் காட்டொணாதே” என்ற அப்பரம்பெருமானார், “அவனருளே கண்ணாகக் காணினல்லால் இந்நிறத்தன் காட்டொணாதே” என்று ஆன்டவன் அருளால் அவணுன்மை உணர்தலைத் தெரிதல் காண்க. “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்றார் மணிவாசகரும்.

அகக்கண்:
ஆண்டவனருளால் அகக்கண் திறக்கப் பெற்ற மெய்யடியார்கட்கு இயற்கையினூடே ஆண்டவன் நீக்கமற நிறைந்து நிற்றல் செவ்விதிற் புலனாகும். அக்கண் திறக்கப் பெறாதார்க்கு அந்நிறைவு புலனாதலில்லை. இறைவனுக்கு, இயற்கை உடலாகப் பொலிதலை மெய்யடியார்கள் சாத்திர வாயிலாகவும், தோத்திர வாயிலாகவும் உலகிற்குப் பலபட விளக்கிப் போந்தார்கள்.

காவியங்கள் முதலியன:
இயற்கை இறைவன் வடிவம் என்பதை உணர்த்த உலகில் எழுந்த பாக்கள் எத்தனை! காவியங்கள் எத்தனை! நாடகங்கள் எத்தனை! அப்பாக்களையும் காவியங்களையும் நாடகங்களையும் படிக்கப் படிக்க, அவைகளின் அழகில் அறிவு படியப்படிய, கருவிகரணச் சேட்டைகள் ஒடுங்கி இயற்கை வடிவான இறை இன்பத்தில் திளைக்கும் பேறு பெறலாம். கதைகட்கு மட்டுங் காவியங்களைப் படித்தலால் விளையத்தக்க பயன் விளையாது.