Friday 11 October 2013

சுத்த சைவம்(ஐந்தாம் தந்திரம்-திருமூலர்)


பாடல் எண் : 1

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

பொழிப்புரை :

பல உலகங்களையும், அவை அடங்கியுள்ள பல அண்டங்களையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவினையுடையவ னாகிய சிவனது பெருமையைக் கூறுமிடத்து, எழுச்சியை உடைய இந்த உலகங்கள் மூன்றினையும் தன்னடிப் படுத்து ஆள்கின்ற தலைவனாம் அவன், விளங்கத் தோன்றும் நிலைக்களம் நால்வகைச் சைவமுமாகும்.

குறிப்புரை :

`ஊர், உலகம் என்பன அவற்றிற்கு இடமான உலகத்தை யும், அண்டத்தையும் ஆகுபெயரால் உணர்த்தின, ஏர்தல் - எழுச்சி யுறுதல். `மேருவும்` என்பது பாடமன்று. `இலங்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``தாரணி`` என்றது, `நிலைக்களம்` என்ற வாறு. சைவ சமயத்தின் பெருமை கூறுவார். அதன் முதல்வனாகிய சிவனது பெருமையை முன்னர்க் கூறினார்.
இதனால், `முழுமுதற் கடவுளாகிய சிவன் விளங்கித் தோன்றும் சமயம் சைவசமயமே` என்பதும், `அது நால்வகைப்படும்` என்பதும் கூறப்பட்டன, அந்நால்வகையும் வருகின்ற மந்திரங்களிலும் அதிகாரங்களிலும் அறியப்படும்.

பாடல் எண் : 2

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.

பொழிப்புரை :

சுத்த சைவர்க்கு, சத்தாகிய பதியின் இயல்பையும், அசத்தாகிய பாசத்தின் இயல்பையும், இவற்றிற்கு இடைப்பட்டுச் சதசத்தாய் நிற்கின்ற பசுவின் இயல்பையும் உணர்ந்தபின், அறிவுடைப் பொருளாகிய உயிர்களுள்ளும், அறிவில் பொருளாகிய பாசங்களுள் ஒன்றாகாது வேறுபட்ட பொருளாய், சுத்தமாயுள்ள வைந்தவங்க ளிலும் அசுத்தமாயுள்ள மாயேயங்களிலும் தோய்ந்தும் தோயாமலி ருக்கின்ற நித்தியப் பொருளாகிய பரசிவம் ஒன்றே குறிப் பொருளாம்.

குறிப்புரை :

எனவே, தத்துவ ஞானத்தை விரும்புவது `சுத்த சைவம்` என்றதாம். ஆகவே, சிவஞான பாடியம் முதலியவற்றில் `சுத்த சைவம்` என்னும் பெயராற் குறிக்கப்படும் சுத்த சைவம் அன்று இது என்பது விளங்கும்.
சத்து - மாற்றமின்றி என்றும் ஒரு படித்தாய் இருப்பது. அசத்து - மாற்றத்தை உடையது, சதசத்து - இவ்விரண்டில் எதனோடும் சார்தற்கு உரியதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது. ``சத்து`` முதலிய ஐந்தும் ஆகுபெயராய் முன்னர் அத்தன்மையுடைய பொருளையுணர்த்திப் பின் அவற்றது இயல்பை உணர்த்தின. `கண்டபின்` என்பது `கண்டு` எனத் திரிந்தது. ``நீத்த, நின்ற`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``பரம்`` என்னும் ஒரு பெயர் கொண்டன, அச்சித்தும், நின்று` என்பன பாடமல்ல. ``சுத்தம், அசுத்தம்`` என்பன அவற்றையுடைய பொருள்களைக் குறித்தன. வைந்தவம் - விந்துவின் காரியம். விந்து - சுத்தமாயை, மாயேயம் - மாயையின் காரியம், மாயை - அசுத்த மாயை, `நித்தப் பரம்` என்பது தொடைநோக்கி மெலிந்து நின்றது. `ஞேயம்` என்பது `நேயம்` என மருவிற்று. `அறியப்படுபொருள்` என்பது இதன் பொருள்.
இதனால், நால்வகைச் சைவத்துள் `சுத்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பாடல் எண் : 3

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொழிப்புரை :

கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.

குறிப்புரை :

``சை சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதா யிற்று. ஆகவே, சித்தாந்த சைவமே மேற்கூறிய சுத்த சைவமாதல் பெறப்பட்டது. ``மெய்யோகம்`` என்றது, `பொருளுணர்வுக்குக் காரணமான நாதத்தையுணரும் யோகம்` என்றவாறு. முற்பதம் - முதற்சொல்: பிரணவம்.
இதனால், `சித்தாந்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பாடல் எண் : 4

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.

குறிப்புரை :

`சுத்தமாய்` என ஆக்கம்வருவிக்க. `சித்தாந்தத்துக்கண் நின்று கண்டோர்` என்பதில் இடைநின்றன தொக்கன. ``பூதம்``, ஏனைத் தத்துவங்கள் பலவற்றிற்கும் உபலக்கணம். தத்துவங்களின் அந்தத்தில் உள்ள போதம், `நான்` என்னும் பசுபோதம். அஃது அந்தமாதலாவது, நீங்குதல். புனம்செய்தல் - புனத்தைத் திருந்தச் செய்தல் போலச் செய்தல். ஞான நேயம் - ஞானத்தினால் பற்றப்படும் ஞேயம் `வேதாந்தம் தெளிவாதல் சைவ சித்தாந்தத்திலே` என்பதை, ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` 1 என்பதனால் அறிக.
இதனால், சித்தாந்த சைவத்தின் சிறப்பும், அதன்கண் நின்றாரது பயனும் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

நன்றி