Friday 21 June 2013

நாதன் நாமமும் அதன் பயனும்



நாதன் நாமமும் அதன் பயனும்

திருஞானசம்பந்தப் பெருமான் நாதன் நாமம் நமச்சி வாயவே என நமச்சிவாயப் திருப்பாசுரத்தில் பாடியிருக்கின்றார். இந்த பஞ்சாக்கரமே இறைவனின் நாமம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அகார முதலாக ஐம்பத்தொன் றாகி
உகார முதலாக வோங்கி யுதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்த் தேறி
நகார மதலாகும் நந்தியின் நாமமே
என திருமுலர் திருமந்திரதின் வாயிலாக, சிவபெருமானின் திருநாமம் நமசிவாயவே என மேலும் உறுதிபடுத்துகிறார். இங்கு நந்தி என்பது சிவபெருமானையும், நகார என்பது பஞ்சாககரத்தையும் குறிக்கும்.
நற்றுணை யாவது நமச்சி வாயவே
என திருமுறையில் திருநாவுக்கரசரும்
நற்றவா உன்னை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சி வாயவே
என சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடி உள்ளார்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
என சிவவாக்கியர் பஞ்சாக்கரத்தின் தொன்மையையும், உயிரின் தொடக்கமும் முடிவும் அதுவே என்கிற தன்மையும் இங்கு தெளிவு படுத்துகிறார்.
எனவே
நாதன் நாமம் நமசிவாயவே
பஞ்சாககரத்தின் பயன்
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இது ஔவையின் திருமொழி, எளிய தமிழில் யாவரும் பொருள் கொள்ளும் வண்ணம் அமைந்த இப்பாடலில், விதியை மதி வெல்ல, இடைவிடாது சிவாயநம சிந்தித்திருப்போர்க்கு பிறவி துன்பம் எதும் இல்லை, பிறவி துன்பத்திலிருந்து நீங்க இதுவே வழி, இல்லையெனில் விதி வழி சென்று துன்பத்தை அநுபவிக்க நேரிடும்.
இதே கருத்தை திருமூலர்
தெள்ளமுது ஓறச் சிவாயநம என்று
உள்ளமுது உற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.
தெள்ளமுது ஆகிய சிவசிந்தனை ஊற்றாக பெருக்கெடுத்து ஓட, உள்ளம் மெய்பட ஓதுங்கள் சிவாயநம. ஓதாதவர் சிறிய நீர் துளியானது எப்படி மேலே எழும்பி மீண்டும் அந்த நீர் நிலையிலே விழுகிறதோ அதைப் போல இந்த பிறவி துன்பத்தில், மீண்டும் மீண்டும் பிறந்து துன்பத்தில் தவிப்பார்.
மேலும் அவர்
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்துஅங்கு உறங்கும் விளைவுஅறிவார் இல்லை
எழுத்துஅறிவோம் என்று உரைப்பார்கா ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே.
சிவாயநம எழுத்துதானே எங்களுக்கும் தெரியும் உரைக்கும் மூடர்களே, ஓதுவார் தலையேழுத்தை மாற்றி அமைக்கும் தலைப்பெழுத்து என்பதைச் சிறிதும் அறியாதவரே! பழைமையான வேத ஞானத்தின் முதிர்ந்து கனிந்த பழமே சிவாயநம என்று, அதன் பயனையும் சிறப்பையும் சொல்கிறார்.
இதே கருத்து ஒப்ப திருஞானசம்பந்த மூர்த்தி
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்நெறிக் குய்ப்பதும்
வேதநான் கினும்மெய்ப் பொரு ளாவதும்
நாதன் நாமம் நமச்சி வாயவே
அன்பு பெருகி உள்ளம் உருகி ஓதுவாரை நல் வழிபடுத்துவது (விதியை மாற்றுவது) நமச்சிவாயவே. இதுவே நாதன் (சிவனின்) நாமம் வேதம் நான்கினையும் பிழிந்து சாரும் இதுவே என்கிறார்.
உடைகோவணம் உண்டு, உறங் கப்புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய்இலை யுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தெங்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?
என பட்டினத்தார், பற்றற்று இரு, ஈசன் திருநாமம் மீது பற்றொடு இரு அதுவே துணை எதற்காகவும் கவலையின்றி இரு என்கிறார்.
கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே
சிவவாக்கியர்
ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே
திருமூலர்
ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே

No comments:

Post a Comment

நன்றி