Tuesday 11 August 2015

ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றே!


உலக மக்கள் அறியாமையிலிருந்தும், விலங்கு உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு பண்பட்ட அன்புள்ளத்தோடு அற வாழ்க்கையைக் கடைப்பிடித்து, சாந்த சீலர்களாய், ஒழுக்கமுள்ள உத்தமர்களாய், மனித நேயம் கொண்டவராய் வாழவும், நாட்டில் ஒற்றுமையுணர்வு மேலோங்கி அமைதி நிலவவும் அறிவுரை வழங்கி, நல்வழி வகுத்து அண்மையில் (1850-1929) வாழ்ந்த அருளாளர்தான் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்.

அவர் அத்தியாச்சிரம, சுத்தாத்வைத, வைதீக சைவ சித்தாந்த ஞானபாநு என்று புகழ்ந்து வணங்கப் படுகின்றார். சுவாமிகளின் சீடரான தமிழ்த்தென்றல் திரு. வி.க. தம் குரு வணக்கத்தில் பாம்பன் சுவாமிகளைத் “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்.

“ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றேயெனவும், தமிழாலும், வடமொழியாலும் அனைத்துக் கடவுட் கொள்கைகளையும் ஐயந்திரிபற உணர வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டும் ஒரு நெறி நோக்கியனவே யெனவும், இல்லறமும், துறவறமும் முரண் பட்டனவல்ல, ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வரும் ஒருமை நிலையினவே என்றும், இவ்வாறு இங்கே கூறப்பெற்ற மூவகை இருமைகளையும் இணைக்கும் திருவருட் பாலமாக நின்று உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டிய அருளாளரே பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்” என்று சித்தாந்த சரபம் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி அவர்கள் எழுதியுள்ளார்.

சுவாமிகள் இசைத் தமிழிலும், இயல் தமிழிலும் சிறந்து விளங்கியவர். இவர் வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன் என்றார் திரு.வி.க.

பலதெய்வ வழிபாட்டினைக் கண்டித்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடையவர். ஆன்ம நெறிக்குத் தடையாய் இருப்பது சாதி அபிமானமே என்று உரைத்தவர். சாதி வேறுபாடுகளை அறவே வெறுத்தவர். பொய்யினில் முனிவு கொண்டவர். சீவகாருண்யத்தைப் பெரிதும் போற்றியவர். ஒரு மூட்டைப் பூச்சி சிறுவனால் கொல்லப் பட்டதைக் கண்டு அவனைக் கண்டித்து மனம் வருந்தி அன்று பூராவும் உணவு உட்கொள்ளாமல் இருந்தார் சுவாமிகள்.

இறைவன் படைப்புகள் அனைத்தும் முக்கியமானவை என்றும், உடல் உருவத்தில் வேறுபட்டாலும் உயிர் அடிப்படையில் சமம் என்றும் கருதியவர். மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவர். வடமொழியே கலவாத தூய தமிழில் சேந்தன் செந்தமிழ் என்ற நூலை இயற்றியவர். சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று அறிவித்தவர். சேந்தன் செந்தமிழ் என்ற நூலுக்குப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் வரைந்த முகவுரையில் கூறியதாவது, “நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும், உரையும் உள்ள அமைப்பு இதுவரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.”

“இரை தேடுவதோடு இறையைத் தேடு” என்று சுவாமிகள் அறிவுறுத்தினார். முருகன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்று துணிபு கொண்டு உள்ளம் உருகி அருளிய பாடல்கள் 6666. வியாசங்கள் 32. இவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சமய சாத்திர தோத்திரம் முதலியவற்றின் நுட்பங்களைக் கொண்டன.

சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளை யாத்தார்கள். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி இரண்டரைக் கடிகைக்குள் “பஞ்சவிம்சதி அதிக சதபங்கியை” அருளினார்கள். இவருடைய பாடல்கள் 20 க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திர சக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலியும் காவியச் சுவை மிக்கவை. இவற்றை உள்ளத் தூய்மையுடன் ஓதி உடற் பிணியிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுபவர் பலர். பக்தர்கள் வழிபாட்டில் ஓதிப் பயன் பெறும் பதிகங்களில் முக்கியமானவை வருமாறு:

குமாரஸ்தவம் : கந்தபுராணச் சுருக்கம். 44 மந்திரங்களால் முருகப் பெருமானை அர்ச்சித்து, அவனுடைய திருவடியை அடைய வழிவகுப்பது.

சண்முக கவசம் : பகை, பயங்கரம், பாவம், வறுமை, நோய் முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறச் செய்வது.


பகை கடிதல் : பகையை வெல்லவும், திருமயிலின் மீது முருகனைத் தரிசிக்கவும் உதவுவது.


அட்டாட்ட விக்கிரக லீலை : உரோக நாசம், பாவ நாசம், சத்துரு நாசம், ஆயுள் விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி, உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும், முக்தியும் வாய்க்கும்.


வேற்குழவி வேட்கை : புத்திர தோட நிவர்த்தி, சந்ததி விருத்தி செய்வது.


திருக்கயிலாயத் திருவிளையாடல்: சிறுவர்களின் உடல் வன்மை, கல்வி அறிவு பெறுதல்.


பஞ்சாமிர்த வண்ணம் : ஆயுள் வளர்த்தல், மோட்சம், சுகம் பெறுதல்.


துக்கரகித பிரார்த்தனை : பல்வேறு துக்கங்களிலிருந்து விடுதலை அடைதல்.


பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப் பட்டவை. ஓர் எடுத்துக் காட்டு. பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணப் பாடலை இரண்டு வேதியர்கள் திருச்செந்தூர் கவுண்ட மண்டபத்தில் நாள்தோறும் பாராயணம் செய்யும்போது ஒரு நாள் அழகான ஓர் இளைஞன் இப்பாராயணத்தைக் கேட்டு மகிழ்ந்ததை அங்குள்ள மூதாட்டியிடம் சொன்னதாகப் பாம்பன் சுவாமிகள் பெருவேண்டுகோள் என்னும் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம்
இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப் பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே
வரிமாமறை இறைவா எனை மறவேல் எனை மறவேல்.”

“நான் பாடும் பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்” என்றும், “எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்” என்றும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைத் துதித்து உலகவர்க்காகவே வேண்டும் அருள்நிலை பரமாசாரியாராகவும், சமுதாய மேம்பாட்டுச் சிற்பியாகவும் திகழ்ந்தவர்.

பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பிடத் தக்கவை.

நிஷ்டையும், முருகப் பெருமான் தரிசனமும் : முருகப் பெருமானைக் கனவிலும், நினைவிலும் பலமுறை தரிசித்தவர். 1894 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இராமநாதபுரத்தை அடுத்த பிரப்பன் வலசை என்ற சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக் குழியில் 35 நாள்கள் ஊண், உறக்கமின்றித் தொடர்ந்து நிட்டை செய்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரிடம் உபதேசம் பெற்றார் பாம்பன் சுவாமிகள். இந்த தெய்வீக அனுபவத்தைத் தகராலய ரகசியம் (1896-”ஆம் வருடம்) என்ற தம்முடைய நூலில் விவரித்துள்ளார். 35 நாள்காறுந் தனிநிட்டை காத்திருந்த ஞான்று கௌபீனதாரியாய் வெளிப்பட்ட இறைவன், எமக்கொரு மொழியினுணர்த்தியருளினன் என்று இந்நூல் பாயிரத்தில் சுவாமிகள் கூறியுள்ளார்.

“எத்தனையோ தலம் சுற்றி வந்தேன் மனம் எட்டுணையும்
அத்தன் குமாரன் முருகனை நாட அடங்கவில்லை
பக்தர்கள் வாழ் பிரப்பன் வலசைச் செம்பதிதனிலே
சத்தியமாகக் கைகூடினதால் இனித் தாழ்வில்லையே”

மயூரவாகன சேவளம் : சுவாமிகளின் 73 ஆம் வயதில் (27.12.1923) ஓர் அற்புதம் நடந்தது. வட சென்னையிலுள்ள தம்பு செட்டித் தெருவில் சுவாமிகள் சென்றபோது ஒரு குதிரை வண்டி வேகமாக வந்து இவரைக் கீழே தள்ளியதால் இவருடைய கால் எலும்பு முறிந்தது. சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சுவாமிகள் சேர்க்கப்பட்டபோது அங்குள்ள ஆங்கிலேய மருத்துவர்கள் சுவாமிகள் மிகவும் வயதானவர் என்பதாலும், உப்பை அறவே நீக்கிய உணவு உட்கொள்வதாலும் எலும்புகள் இணையாது என்றும், காலின் ஒரு பகுதியை நீக்கிவிட வேண்டும் என்றும் கருதினார்கள். இக்கருத்தை சுவாமிகள் ஏற்க மறுத்து முருகப் பெருமான் கருணையால் இத்துன்பத்திலிருந்து தாம் காப்பாற்றப் படுவது நிச்சயம் என்று எண்ணி உறுதியுடன் வழிபட்டார்கள்.

“வானம் இடிந்து தலையில் விழும்படி
வம்பு வந்தாலும் என்னை- & அந்தக்
கான மயில் முருகையன் திருவருள்
கைவிட மாட்டாதே”

என்பது சுவாமிகளின் துணிபு.

சுவாமிகளின் சீடர்கள் சுவாமிகளால் அருளப் பெற்ற சண்முக கவசத்தை மனமுருகிப் பாராயணம் செய்தார்கள். மருத்துவமனையில் சேர்த்த 11-ஆம் நாள் இரவு (27.12.1923) சுவாமிகள் இரண்டு மயில்கள் மிகுந்த ஒளியோடு நடனம் ஆடுவதைக் கண்டு களித்து பிறகு அம்மயில்கள் மறைந்தபோது அழுது புலம்பினார்.

“விண் மகிழ்ந்திட வேல்விடு வேள்மயில்
கண் மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்
மண் மகிழ்ந்திட மாகம் மகிழ்ந்திட
எண் மகிழ்ந்த பதினொன்றின் இராவிலே”

பிறகு சுவாமிகள் படுத்திருந்த படுக்கையில் ஓர் சிவந்த நிறக் குழந்தை படுத்திருப்பதைச் சுவாமிகள் கண்ணுற்று, குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அக்குழந்தை மறைந்து விட்டது. அரசு மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்து எலும்பு கூடி வருவதைக் கண்டு ஆச்சர்யத்தோடு மகிழ்ந்தார்கள்.

“முன்காலை உதைத்தவன் கால்முளையாய் நின்றாய்
பின்காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என்காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின்காலை எனக்கு அளி என்றான்”

சுவாமிகள் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கிப் பூரண குணம் பெற்று பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடர்கள் இல்லத்தை அடைந்தார். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சுவாமிகள் ‘அசோகசாலவாசம்’ என்ற நூலில் 1924-ஆம் ஆண்டு விளக்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சி முருகப் பெருமான் தன் அடியவர் மீது கொண்டுள்ள கருணையையும், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தின் மகிமையையும் வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல், கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் என்ற உண்மையை வலியுறுத்துகிறது.

பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும், அதன் கீழ் எழுதப்பட்டுள்ள மேற்கண்ட அற்புத நிகழ்ச்சிக் குறிப்பையும் சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் 11-ஆவது வார்டில் (பழைய மன்றோ வார்டு) இன்றும் காணலாம்.

இந்த மயில் காட்சியையும், தெய்வீகச் செயல்களையும் நன்றியுணர்வுடன் போற்றி மயூரவாகன சேவன விழாவாக வருடந்தோறும் பாம்பன் சுவாமிகள் தாம் முக்தியடையும் வரை (1929) சிறப்பாகக் கொண்டாடினார்கள். சுவாமிகளால் நிறுவப்பட்ட மகாதேஜோ மண்டல சபையினர் இவ்விழாவை சுவாமிகளின் வில் சாசனத்தில் (1926) விளக்கியவாறு வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள்.

பாம்பன் சுவாமிகள் செவ்வேட்பரமன் சேவடியை 30.05.1929 தேதியில் அடைந்தார்கள். அவருடைய சமாதி நிலையம் சென்னை திருவான்மியூரில் நிறுவப்பட்டுள்ளது.

(நன்றி - செ.வே. சதாநந்தன் - ஓம்சக்தி ஆன்லைன் .காம் )

No comments:

Post a Comment

நன்றி