Tuesday 22 September 2015

சிலாதரும் நந்தியும்

சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார்.  அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார்

No comments:

Post a Comment

நன்றி