Tuesday 22 September 2015

திருமாலை வென்ற மகரிஷி ததீசி


ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர்.  எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

நன்றி