Tuesday 22 September 2015

வாழ்வின் நிலையாமை


வாழ்வின் நிலையாமை
செல்வம், இளமை, யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு

(நெருநல் = நேற்று)
என்று நிலையாமையைச் சொல்லும் குறட் கருத்தின் விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது. நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ?”   என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்?  யாரும் வரமாட்டார்கள்.
“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”  என்றும்,

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்ல ஒரு பாடலிலே சொல்கிறார்.
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?
எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்.  சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.
“இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாம் இருப்ப – நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாம் இருக்கும் தான்”
இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம்.  அது பொய்.  நாம் போவது – நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆனால் ஆத்மஞானம் வந்த பிறகு “இருப்பது மெய் போவது பொய்” என்பது நமக்குத் தெரிந்து விடும்.  இந்த உலகத்தில் அழியாமல் இருப்பவையே மெய்யானவை. அழியப்போகின்றவை அத்தனையும் பொய்.  இந்த உடல் அழியும்.  நம் செல்வம் அழியும். உற்றார் அழிவர்.  உறவினர் அழிவர்.  நண்பர் அழிவர்.  நாம் பெற்ற  பட்டங்கள் அழியும்.  எனவே இவை எல்லாம் பொய்.  என்றும் இருப்பது நம் ஆத்மா.  ஆத்மா என்பது இறைவனின் ஒரு துளி. அந்த துளி தான் ஒவ்வொரு உயிரிலும் பரவி உள்ளது.  மரமானாலும் – விலங்கானாலும் –மனிதன் ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு.  அது தான் அழியாதது. கஷ்டநஷ்டங்களை இந்த உடல், மரம், விலங்குகள்  தாங்குகின்றன.  காரணம் அவைகளின் விருப்பங்கள்.  இரட்டைகளான இரவு-பகல், கஷ்டம்-நஷ்டம்,  இன்பம்-துன்பம்,  போன்றவற்றைக் கடந்தவன் இறைவன்.  ஆன்மா என்பதையும் இரட்டைகளைக் கடந்ததே.  எனவே பொய்யான இந்த உடல் மாள்வது திண்ணம்.
“இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்த கட்டை மீதில் இணைக்கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு”
என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார்.
எல்லர்ம் கிட்டும்.  இறைவனின் திருவடியை உளமாற நினைந்து அல்லும் பகலும் அனவரதமும் அவனைத் துதித்து வந்தால் மீண்டும் கருவில் வந்து பிறவாத நிலை வரும்.  பிறவிப் பெருங்கடலை நாம் நீந்தி இறைவன் திருவடியை அடைந்து விடலாம்.  பிறப்பு-இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்காது கரையேறலாம்.
எனவே ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் காரணம் என்பதை அறிந்து பற்றற்ற வாழ்வை நாம் மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment

நன்றி