Friday 20 December 2013

சிவனின் இலிங்கத் திருவுருவம்.



                                      சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. சிவம் என்றால் இறைவன். லிங்கம் என்பது அடையாளம். எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். லி – லயம், கம் -- தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும்,ஒடுங்குவதற்குமான இடம்

சிவ ஆகமப்படி பீடமானது சக்தியையும் (நாதம்), லிங்கமானது (விந்து) சிவனையும் குறிக்கும் ஒரு சிவசக்தி சொருபமே சிவலிங்கமாகும். பஞ்சாட்சர தத்துவத்தில் சிவவிங்கம்
கீழ்ப்பாகம்   -- ந
நடுப்பாகம்   -- ம
மேல்ப்பாகம் -- சி
நாதக்குழி    -- வ
லிங்கம்      -- ய ஆகும்.

இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது. இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.


உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார். அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதனையே சான்றோர்கள் “தெள்ளத் தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர். இதுவே இந்து மதத்தினரின் இறுதி நிலையாகும். இதனையே “தத்துவ மசி” என்று கூறியுள்ளனர். அதாவது நான் அது ஆதல்.

No comments:

Post a Comment

நன்றி