Tuesday 17 December 2013

ஆருத்ரா தரிசனம்


ஆருத்ரா தினத்தன்று. சிவன் கோயில்களில் விசேஷ ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் நடராஜனை தரிசித்தால், காரியத்தடைகள்  அனைத்தும் நீங்கி வளம் பெருகும் என்பார்கள். ஆருத்ரா தரிசனம் எப்படி வந்தது தெரியுமா... அஸ்வினி, பரணி என தொடங்கி ரேவதி வரை 17 நட்சத்திரங்கள்  இருந்தாலும், ‘திரு’ என்ற அடைமொழியுடன் குறிக்கப்படுவது ஆதிரை, ஓணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே. இதில் திருவோணம் பெருமாளுக்கு  உரியதாகும். திருவாதிரை என்பது சிவனின் நட்சத்திரம். மார்கழியில் வரும் திருவாதிரை மிகவும் விசேஷம். இந்த நாளை ‘ஆருத்ரா தரிசனம்’ என்று  சொல்வார்கள். ஆடல் அரசன் நடராஜனுக்கு சிறப்பான விரத நாளாகும்.

சிவனுக்கு போக நிலை, வேக நிலை, யோக நிலை என்ற மூன்று வித கோலங்களை சித்தர்களும், முனிவர்களும், யோகீஸ்வரர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.  மனைவி, மக்கள், வீடு, வாசல் என்று குடும்பஸ்தராக கல்யாண சுந்தரராக உமாமகேஸ்வரராக, சோமசுந்தரராக அருள் செய்வது போக நிலை. அடுத்து,  தீமைகளை போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேக வடிவம் எடுக்கிறார். கஜ சம்ஹாரர், காம தகன மூர்த்தி, ருத்ர மூர்த்தி என்ற வடிவங்களில்  தீமைகளை போக்குகிறார். மிக உயர்ந்த நிலை ஞான நிலை எனப்படும் யோக நிலை. ஞான மூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முக  கடவுளான தட்சிணாமூர்த்தியாகும். போகம், வேகம், யோகம் என்ற மூன்று கோலங்களையும் ஒரு சேர அருள்வதே நடராஜர் வடிவம்.

சிவத்தொண்டும், திருவாதிரை களியும்:


சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த சிவபக்தர் சேந்தனார். சிவனடியார்களுக்கு அமுது படைப்பதை தொண்டாக செய்து வந்தார். தினமும் அடியார் ஒருவருக்கு  உணவளித்த பிறகுதான் சாப்பிடுவார். ஒருமுறை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சமைக்க வைத்திருந்த விறகுகள் நனைந்து விட்டன. எப்படி சமைப்பது  என்று சேந்தனாரும், அவரது மனைவியும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மிகப்பெரிய ஜடா முடியுடன் சிவனடியார் ஒருவர் வந்து விட்டார்.  பதறியபடியே சேந்தனாரும், அவரது மனைவியும் அவரை வரவேற்று உபசரித்தனர். ஈர விறகை பயன்படுத்தி எப்படியோ ஊதி சூடேற்றிப் பற்ற வைத்து களி  தயாரித்தனர். சரியாக வராவிட்டாலும் அதை பயபக்தியுடன் சிவனடியார்க்கு படைத்தார்கள்.

அன்றைய தினம் மார்கழியும், பவுர்ணமியும் இணைந்த திருவாதிரை நாள். வந்த அடியார் களியை ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு,  ‘இத்தனை சுவையான  களியை வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. தினமும் தயிர் சாதம், புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு நீங்கள் அன்புடன் படைத்த  இந்த களி அமிர்தம்போல இருந்தது’ என்றார். அதைக்கேட்டு தம்பதியர் மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்தனர். மறுநாள் காலை, நடராஜர் பெருமானை தரிசிக்க  சேந்தனாரும், அவரது மனைவியும் சிதம்பரம் கோயிலுக்கு சென்றனர். அங்கே கோயில் நடையெல்லாம் களி சிதறி கிடந்தது. அது முதல் நாள் இரவு  சிவனடியாருக்காக அவர்கள் தயாரித்த களி. வீட்டில் செய்தது கோயிலுக்கு எப்படி வந்தது என்ற சந்தேகத்துடன் நடராஜன் சன்னதிக்கு சென்றார்கள்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி தந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்களது குடிசை வீட்டை தேடி வந்து களி சாப்பிட்டு  சென்றது சாட்சாத் சிவபெருமானே என்று உணர்ந்து மெய்சிலிர்த்தார்கள். கண்களில் நீர் பனிக்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்கள். ஆருத்ரா  தரிசனத்தன்று ஆதிரைக்களி படைக்கும் வழக்கம் அப்போதுதான் முதன்முதலாக உண்டானது. உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும்  ஆண்டவன் ஏற்றுக் கொள்வான் என்பதே இதன் தாத்பர்யம். சிவபெருமான் அபிஷேக பிரியன்.

தினமும் பலமுறை அவருக்கு அபிஷேகம் நடக்கும். நடராஜ பெருமானுக்கு அப்படியல்ல. நடராஜருக்கு ஒரு ஆண்டில் 6 முறைதான் அபிஷேகம் செய்ய  வேண்டும் என்பது சாஸ்திர விதி. அதன்படி, மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களிலும், மாசி மாதத்தின்  வளர்பிறை சதுர்த்தி திதியிலும் அபிஷேகம் நடக்கும். இந்த மார்கழி மாத ஆருத்ரா நாளில் ஆடல் அரசனை தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள்,  தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறுவோமாக.

திருவாலங்காட்டில் அற்புதக் கோலம்:

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள, திருவாலங்காடு திருத்தலம் மிகவும் சிறப்பானது. ‘வடாரண்யம்’ எனப் பெயர் பெற்றது. நடராஜப் பெருமானின் ‘ஊர்த்துவ  தாண்டவத்தை’ இங்கே கண்டு தரிசிக்கலாம். கல்வெட்டில் இத்திருமேனியை, ‘அருகில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்’ என்று குறிக்கப்படுவது சிறப்பானது.  இறைவன் காளியுடன் நடனமாடிய திருத்தலம். சிவபெருமானால், ‘அம்மையே’ என அழைத்துப் போற்றப்பட்ட, காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து,  நடராஜப் பெருமானின் திருவடி கீழ் இருந்து, சிவானந்த இன்பத்தை அனுபவித்த திருத்தலம். காரைக்காலம்மையார் கையில் தாளத்துடன் திருவடிக் கீழ்  அமர்ந்திருக்கும் அற்புதக் கோலத்தை இக்கோயிலில் கண்டு வழிபடலாம். ஆனந்தம் ஆடரங்க, ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம், ஆனந்த கூத்து என  திருமூலர், ஆனந்த தாண்டவத்தைப் போற்றுகின்றார். சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில், ஆடவல்லானை வழிபட்டு வாழ்வில் ஆனந்தம்  அடைவோம்!

No comments:

Post a Comment

நன்றி