Wednesday 22 April 2015

ஞான கணேசா சரணம் சரணம்.



இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற கேள்வி அநேகமாக பெரும்பாலோருக்கு மனதில் எழும்பியிருக்கும். அடிப்படையில், 'ஒன்றே பரம்பொருள்' என்பதே இந்து தர்மத்தின் கொள்கையும். உலகெங்கிலும் உள்ள எல்லா மதங்களின் அடிப்படைக் கோட்பாடான, 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்', ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே இந்து தர்மத்தின் அடிநாதமும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இதற்கு மாறுபட்ட, முரண்பாடுடைய  கொள்கைகள் உள்ளதாகத் தோன்றினாலும்,  ஆழமாகச் செல்லும்போது இந்த உண்மையை யாவரும் உணரலாம். 
மனிதர்கள் எல்லோரும் ஒரே விதமான மனப்போக்குக் கொண்டவர்களல்லர். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து எண்ணங்கள்,  கொள்கைக‌ள் முதலியவை மாறுபடும். இத்தகைய ஒரு நிலையில், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற்போன்ற தெய்வத்தை (உருவ) வழிபாடு செய்து, ஆன்மீகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டிய பிறகு நிர்க்குண நிராகார பரம்பொருளை வழிபடும் விதமாகவே இந்த 'பல தெய்வக் கட்டமைப்பு'  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த உருவ வழிபாட்டு முறையிலும், வழிபடுபவர் மனோ தர்மத்துக்கு ஏற்ற வகையில், அம்பிகை, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், முருகன், என்று எந்த  திருவுருவின் மீது மனம் லயிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வழிபடலாம். ஏதேனும் ஒரு தெய்வத்தை உபாசனா மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை  அன்னையாக, தந்தையாக, குருவாக, குழந்தையாக, தோழனாக, எஜமானனாக எந்த பாவனையில் மனம் லயிக்கிறதோ அந்த பாவனையில் வழிபடலாம். 
உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணரை, குழந்தையாகக் கருதி அலங்கரித்து, சின்னத் தொட்டிலிலிட்டு வழிபடலாம். கீதை உரைத்த ஞான குருவாகக் கருதி வழிபடலாம். 'சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்' என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளியது போல், எஜமான பாவத்திலும் வழிபடலாம். ஒவ்வொரு தெய்வத்தைக் குறித்த புராணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே அருளப்பட்டிருக்கின்றன. 
ஸ்ரீமத் பாகவதத்தில், யசோதைக்குக் குழந்தையாகவும், அர்ஜூனனுக்குத் தோழனாகவும், இடையர்களுக்குத் தலைவனாகவும் ஸ்ரீகிருஷ்ணர் புரிந்த லீலைகளைச் சொல்வது, எந்த பாவனையில், நம் மனம் லயிக்கிறதோ, அந்த பாவனையில் வழிபடும் மார்க்கத்தை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.
வழிபடும் முறைகளிலும், எளிய முறையில் வழிபடுவதிலிருந்து, விஸ்தாரமான பூஜா முறைகளில் வழிபடுவது வரை பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன.  மானசீக பூஜைக்கும் மிக உன்னத இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த முறையில் வழிபட்டாலும், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆத்மார்த்தமான பக்தி உணர்வு  மட்டுமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நிவேதனப் பொருள்களிலும் ஆழமான உள்ளர்த்தங்கள். பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு நிவேதனப் பொருள். பெரும்பாலும், அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய், பழங்களே நிவேதனத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. முக்குணங்களான, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையிலும் நிவேதனப்பொருள்கள் அமைகின்றன.  உதாரணமாக,  குழந்தை ரூபத்தில் வழிபடு தெய்வம் இருக்குமானால், பசும்பால், நெய், வெண்ணை முதலிய சத்வ குணம் நிரம்பிய நிவேதனம் குறிக்கப்படுகிறது.
ஒருவருக்கு துன்பம் நேரிடும்போது, அந்தத் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரை 'கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டார்' என்றே சொல்வது வழக்கம்.  பக்தர்களுக்கு ஏற்படும் சகலவிதமான துன்பங்களிலிருந்தும் கை கொடுத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வ உருவங்களுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு எனக் கரங்கள் அமைத்து வழிபடும் முறை வந்தது. சூட்சுமமாகப் பார்க்கும் போது இதற்கு வேறு விதப் பொருளும் உண்டு. அது போல், பரம்பொருளின், படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், பிரளய காலத்தில் ஒடுக்குதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் விதமாகவும், அந்த செயல்களின் சுருக்கம் மற்றும் விரிவாக்கமாகவே மூன்று, ஐந்து, ஆறு, என்று முகங்களுடையவர்களாக தெய்வ உருவங்கள் இருக்கின்றன. 
ஆனால் எத்தனை முகங்கள் அல்லது எத்தனை கரங்கள் கொண்டதாக தெய்வ உருவம் இருப்பினும், திருவடிகள் மட்டும் இரண்டு. பக்தர்கள் தம் இரு கைகளால் பற்றிக் கொண்டு வணங்க எளிதாக இருக்கும் பொருட்டே அனைத்து தெய்வ உருவங்களிலும் திருவடிகள் மட்டும் இரண்டு என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள்   அருமையாக விளக்குவார்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வாகனம். அதிலும் ஆழ்ந்த உட்பொருள். பசுபதியாகிய சிவனாருக்கு காளை வாகனம். பசு என்பது உயிர்கள் எனவும் பதி என்பது இறைவன் எனவும் பொருள்படும். அதைக் குறிக்கும் விதமாக காளை வாகனம். காக்கும் கடவுள் ஸ்ரீ விஷ்ணு, பக்தனுக்குப் பறந்து வந்து உதவுவார் என்பதற்காக கருட வாகனம். பணம் மனிதனை ஆட்சி  செய்ய வல்லது என்பதை உணர்த்துவதற்காக,  நவநிதிகளின் அதிபதியாகிய‌ குபேரனுக்கு நர (மனிதன்) வாகனம்.
மந்திரங்கள் அல்லது வழிபாட்டுத் துதிகள் எனப் பார்த்தால் அவை பெரும்பாலும் மறைமுகமாக, auto suggestion  என்பதாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இறைவனின் எல்லையற்ற‌ பலத்தை, சக்தியைப் போற்றும் அதே நேரத்தில், அவை நமது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக, எல்லையற்ற சக்தியை வழங்குவதாகவும் இருக்கிறது. நம் உள்ளிருப்பதும் இறைவன் அல்லவா?

மேற்சொன்னவற்றின் ஒரு உதாரணமாக,  ஸ்ரீ கணேசரைப் ப‌ற்றி    பார்க்கலாம். எப்போது பார்க்க நேரிட்டாலும் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்துகிற விஷயங்களில் ஒன்று யானை. அந்த யானையின்  முகத்தைக் கொண்டுள்ள கடவுள் அவர். பெரிய தலை, வயிறு, நான்கு கரங்கள், நீண்ட துதிக்கை, இவற்றுடன் கூடிய ஞானச்செல்வம் கணபதி.

பூர்ண ஞானத்தின் வடிவமாகக் குறிக்கப்படுவதால், எல்லா தெய்வங்களின் பூஜைகளிலும் முதல் பூஜை இவருக்குத்தான். தெளிந்த அறிவுச்சுடரின் முன் எந்த இருளும் நில்லாது. அது போல், எடுத்த காரியத்தில் எவ்விதத் தடங்கலும் வராமல் காப்பார் கணபதி. பெரிய தலை, இவர் ஞானத்தின் திருவுரு என்பதைக் குறிக்கிறது. அறிவு எப்போதும் நிறைவாக, ஆழமாக இருக்க வேண்டுமென்பதைக் குறிப்பதே இவரது நீண்ட துதிக்கையுடன் கூடிய யானை முகம்.

புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக கணேசரின் அவதாரம் குறிக்கப்பட்டிருந்தாலும், பார்வதி தேவி, தான் நீராடப் போகும் போது, யாரும் வராமல் காவல் காப்பதற்காக, தன் ஸ்நானப் பொடியைப் பிசைந்து உயிரூட்டிய வடிவமே விநாயகர் என்பதே பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை.
நினைவாற்றல் அதிகமுள்ளதாக சொல்லப்படுவது யானை. ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுக்கு அபரிமிதமான நினைவாற்றலும் அவசியம். அதன் காரணமாகவும் யானை முகம். தந்தங்களில்  ஒன்று ஒடிந்து காணப்படுவது, ஆணவமற்ற தன்மையைக் குறிக்க.  பெரிய வயிறு இவ்வுலகனைத்தும் அவருள் அடக்கம் என்பதைக் குறிப்பதாகும்.  மிகச்சிறிய ஊசியிலிருந்து, மிகப்பெரிய மரம் வரை தூக்கக் கூடிய சக்தி படைத்தது யானையின் துதிக்கை. அது போல், விநாயகரும், ப்ரச்னை என்ன அளவானாலும் அதிலிருந்து மீட்டுக் காக்கக் கூடிய சக்தி படைத்தவர்.
பரம்பொருளின் அருளிச் செயல்நிலைகளைக் குறிக்கும் விதமாக, கணபதியின் வடிவங்களை, 16 வித கணபதி (ஷோடச கணபதி), 32 வித கணபதி என்று வேறுபடுத்தி வழிபடுகிறோம்.
மேலும், பஞ்சமுக விநாயகர், மூன்று முகத்தோடு கூடிய விநாயகர் (த்ரிமுக கணபதி) இரண்டு முக கணபதி (த்விமுக கணபதி)  என  ஒன்றிற்கு மேற்பட்ட திருமுகங்கள் உடையவராகவும் விநாயகர் வழிபடப்படுகிறார். ஷோடச கணபதிகளில், வரத கணபதி, 10 கரங்கள் கொண்டவராகவும்,  நிருத்ய கணபதி, க்ஷிப்ர ப்ரஸாத(உள்முக வழிபாட்டை விரும்புபவர்) கணபதி முதலான திருவுருவங்களில், விநாயகர் 6 கரங்கள் கொண்டவராகவும், விக்ந கணபதி எட்டுக்கரங்கள் கொண்டவராகவும் வழிபடப்படுகிறார்.
வழிபடு முறை என்று பார்த்தால், மஞ்சள் கூம்பு முதற்கொண்டு, ஐம்பொன் விக்ரகம் வரை கணநாதரை எதில் வேண்டுமானாலும் வழிபடலாம். மிகச் சுலபமான, எளிமையான வழிபாட்டு முறைகளே அவருக்கு போதுமானது. ஆனால் விஸ்தாரமான பூஜை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், மிக விரிந்த பூஜாகல்பம் அவருக்கு. அருகம்புல், பலவித மலர்கள், இலைகள் என்று பூஜை செய்யும் பொருட்களும், முறைகளும் விரியும். கணபதியின் புகழ்பாடும் துதிகளும் அநேகம்.
நிவேதனங்களில், பிரதானமாக மோதகம் விளங்குகிறது. பூரணத்துடன் கூடிய வேக வைக்கப்பட்ட கொழுக்கட்டையே மோதகம். பரந்த உலகினுள் பூரணமாக விநாயகர் இருக்கிறார் என்பதை விளக்குவதாக இந்த நிவேதனம்.  லௌகீகமாகப் பார்த்தால், பூரணத்தின் இனிப்புச் சுவை மனச்சோர்வை விலக்கும். மேலும் வேக வைக்கப்பட்டதால் சாத்வீக குணம் நிரம்பியதாகவும் கொள்ளலாம். அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் மனதிலேயே ஞானம் குடிகொள்ளும் என்பதால், சாத்வீக குணம் தரும் நிவேதனம் பிரதானப்படுத்தப்படுகிறது.
மிக மெல்லிய மூச்சுக் காற்று, வினைப் பயனான இவ்வுடலைச் சுமந்து செல்வதைக் காட்டும் முகமாக அத்தனை பெரிய விநாயகருக்கு சிறிய மூஷிக வாகனம்.
இது போல், ஒவ்வொரு தெய்வ உருவத்திலும், ஆயிரமாயிரம் உட்பொருள்கள் உள்ளன. ஆழ்ந்த பக்தியின் மூலம், சாதகன் இவற்றை அறிந்து, பின்,  படிப்படியாக, ஆன்மீக சாதனையில் உயரும் போது,  நிர்க்குண நிராகார‌ பரம்பொருளை அறிந்து பேரின்பமெய்துகிறான். மனிதப் பிறவியின் பயனான மோக்ஷ நிலைக்கு ஒவ்வொரு ஆன்மாவையும் உயர்த்துவத‌ற்கே,  ஆன்மீக நிலையில் இப்படிப்பட்ட கட்டமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

நன்றி