Wednesday 8 October 2014

யாகப் பட்டியல்


சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன். சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.
இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.
2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.
3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.
கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.
puranapanda_srinivas._1_
100 இரவு யாகங்கள்
100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.
அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.
புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.
ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.
வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.
புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.
புறநானூற்றில் யாகம்
பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.
ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.
சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.
அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.
ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.
காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்.
பாபா செய்த மகத்தான யக்ஞம்
ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–
ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.
தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்
நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–
யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.
(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்

No comments:

Post a Comment

நன்றி