Monday 1 May 2017

சமய தீட்சையும் அதன் பயனும்



"தீக்ஷா" என்னும் சொல் 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

நமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்தமாய் வளர்த்தலுமாம். நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். இந்த உண்மைகளை அறிந்தே நம் சமயத்தில் ஏழு வயதில் தீட்சை பெற வேண்டும் என்ற விதி சொல்லப்பட்டுள்ளது. ஏனெனலில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவம், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும், அப்பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே. அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும்.


படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப் பெற்று அந்தந்த தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும் அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகுவாகும்.



தீட்சை பெற தகுதியுடையவர்கள்
சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். அதுமட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மலமாசு நீங்கித் தூய்மை உண்டாகும்.


தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

தீட்சை அளிக்கும் சிவாசாரியாரின் தகமைகள்
சைவ மக்கள் சைவ சமய ஆசாரங்களை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய தகுதியை அளிப்பது தீட்சை ஆகும். இத் தீட்சையை அளிக்கின்ற சிவாசாரியார் சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசார்யாபிஷேகம் எனும் நான்கையும் பெற்றவாராக இருக்க வேண்டும் என சிவாகமங்கள் கூறுகின்றன.
சமய தீட்சை
சைவசமயி ஆகும் உரிமையைத் தருவது சமய தீட்சை எனப்படுகின்றது. சமய தீட்சை பெற்றவன் "சமயி" எனப் பெயர் பெறுகிறான். சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூலமந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாய நம: எனும் பஞ்சாட்சரத்தை) ஸ்தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும். இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.
விஷேட தீட்சை

சிவலிங்க பூசை செய்வதற்கான தகுதியளிப்பது விஷேட தீட்சை ஆகும். சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் வலுவிலக்க, சிவனைச் சிவலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியை நெறியில் விருப்பு உண்டாக, முன்னர் சமய தீட்சை பெற்றுக்கொண்ட ஆசாரியரிடமோ அல்லது வேறொருவரிடமோ விஷேட தீட்சை பெறலாம். இதன் மூலம் சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை, புறப்பூசை செய்யும் முறைகளோடு யோக முறைகளைச்
நிர்வாண தீட்சை

சமய தீட்சையும், விஷேட தீட்சையும் பெற்றவர்கள் இறுதியாகப் பெறும் தீட்சை நிர்வாண தீட்சை எனப்படும். இதன் மூலம் அத்துவாக்களை அடக்கும் கலையும், முப்பொருள் உண்மையை உணரும் தன்மையும், உயிரை ஞான நிலைக்கு உய்யச் செய்யும் நிலையும் ஞானாசிரியனிடமிருந்து கிடைக்கும். நிர்வாண தீட்சையானது சத்தியோ நிர்வாண தீட்சை, அசத்தியோ நிர்வாண தீட்சை என இரு வகைப்படும்.

முற்றாக பற்றற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனே முத்திப்பேறு கிடைக்கும் வகையில் செய்யப்படுவது சத்தியோ நிர்வாண தீட்சை ஆகும்.

ஆன்மாக்கள் பிரார்த்த வினைப்பயனை அனுபவித்து முடிந்த பின் அவை முத்திப்பேறு அடையும் வகையில் செய்யப்படுவது அசத்தியோ நிர்வாண தீட்சை ஆகும்.

ஆசாரிய அபிடேகம்

நிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவம் அழைக்கப்படுவார்.
சிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல்.உடல் (அங்கவீனம் - நொண்டி, செவிடு, குறுடு) குறையற்றவராக இருத்தல்.
உளம் பாதிப்பற்றவராக (பைத்தியம், பேராசை, கோபம், அகங்காரம்) அற்றவராக இருத்தல் வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றோ பலவோ இருப்பின் தகுதியற்றவராகின்றார்.
கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல். சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல். சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல்.
பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல்.

தீட்சையின் வகைகள்
தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும். இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.
நயன தீட்சை
குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.
பரிச தீட்சை
குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.

வாசக தீட்சை

குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.
மானச தீட்சை

குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
சாத்திர தீட்சை

குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.
யோக தீட்சை

குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.
ஒளத்திரி தீட்சை

பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.


மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம் 800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர். இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.

தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..

திரமான தீட்சை செப்புவேன் கேளு
கரமான நெல்லிக்கனி யதுபோல
சரமான வாசி சங்கர கெவுரி
வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.

இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.

முதலாவது தீட்சை

கேளு அம்மென்று கெடியாக மண்டலம்
நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்
சேலுடன் தேகந் திரமது வாகும்
மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

இரண்டாம் தீட்சை

தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு
ஆனது உம்மென் றள்புட னீயும்
வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்
கோனவ னருள்தான் குடியிருப்பாமே.

இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.

மூன்றாம் தீட்சை
குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு
முடியினில் சென்று முழுமனதாக
அடியினில் சிம்மென் றன்புட னீயும்
வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.

இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.

நான்காம் தீட்சை

முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு
அத்த னருளை யன்புட நோக்கி
உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்
சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.

மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.

ஐந்தாம் தீட்சை

தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு
ஆனது தம்மென் நன்புட னீயும்
வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்
ஊனுடன் தேகம் உறுதியு மாமே.

நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர், ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.

ஆறாம் தீட்சை
உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு
நெறி தவறாமல் நேர்மையில் நின்று
சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்
பருதி போல் தேகம் பக்குவமாமே.

ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.

ஏழாம் தீட்சை
பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு
திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று
சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்
திக்கு விசையஞ் செய்யலு மாமே.

ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.


எட்டாம் தீட்சை
செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு
பையவே பிரம பதியிட மாகிக்
கையது நெல்லிக்கனி யதுபோல
வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்
தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்
தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்
நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ஒன்பதாம் தீட்சை

நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு
உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்
சின்மயமான தெரிசனங் காணும்
தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

பத்தாம் தீட்சை

சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு
கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து
ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்
தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார். இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.


சுபம்


No comments:

Post a Comment

நன்றி