Monday 24 March 2014

வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்?


விதி பெரியதா?  மதி பெரியதா?
இந்து மதத்தை நன்றாக புரிந்து கொண்டோம் என்று நினைப்பவர்கள் கூட இதற்கு சரியாக பதில் கூற இயலாமல் சிரமப்படுகிறார்கள்.
வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்?
இந்த கேள்விக்கு சரியாக விடை தெரியாமல் குழம்புவர்களுக்கு ......  இதோ விடை.
ஒவ்வொரு ஜீவனின் உள்ளத்தில் கர்ம, வாஸனை, என்று இரண்டு ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன.
இதற்கு முன்னெடுத்த மனுஷ்ய ஜன்மத்தில் எவ்வளவோ நல்வினை தீவினைகளைச் செய்திருக்கக்கூடுமன்றோ? அவை செய்யும்போதே பதிவு ரூபமாய் உள்ளத்தினில் பதிந்து அடங்கியிருக்கின்றன. அங்ஙனம் அடங்கியிருந்து மறுஜன்மங்களில் தத்தம் பயனாகிய இன்ப துன்பங்களைத் தருகின்றன. அங்ஙனம் இன்ப துன்பங்களை மாத்திரம் தருவனவே கர்மங்கள் எனப்படுகின்றன.
அவ்வின்ப துன்பங்கள் எக்காலத்தில் எவை எவை வருவனவோ அவையவை அக்காலத்தில் தன் செயல் மூலமாகவோ அல்லது பிறன் செயல் மூலமாகவோ அல்லது தைவீகமாகவோ ஜீவர்களால் அனுபவிக்கும் படியாகும்.  ஆனால், ஜீவர்களின் செய்கைக்குக் காரணம் கர்மாவாகாது.  அது, வாஸனை. வாஸனையாவது, யாதானும் ஓர் காரியத்தைப் பலமுறை செய்தால் மீண்டும் அப்படிப்பட்ட காரியத்தையே செய்துகொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றச்செய்வதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரமேயாம்.  இந்த வாஸனையே ஜீவர்களை எதனையானும் ஸங்கற்பித்துக்கொண்டே இருக்கச் செய்கின்றது.
ஸங்கற்பத்தால் காமமும் (விருப்பமும்) காமத்தால் செய்கையும் நிகழுகின்றது. வாஸனையானது  இங்ஙனம் நேரில் ஸங்கர்பத்திற்கும் பரம்பரையாய் செய்கைக்கும் ஹேதுவாகின்றது. வாஸனாவசமாக  நல்வினை தீவினைகளில் செல்லும்போது காகதளீய * நியாயமாகவே பூர்வகர்மா பயன்பட்டு ப்ராரப்தமாக வந்து இன்ப துன்பத்தைத் தருகின்றது. இப்போது செய்யும் கர்மாவினால் அவ்வின்ப துன்பம் வருகின்றதென்பதில்லை.  கர்மா வேறு வாஸனை வேறு. வாஸனையால் ஏற்படுவது ஸங்கற்பம் காமம் முதலியவை. கர்மாவினால் வருவது இன்பதுன்பம். இவ்விதம் விவேகித்து அறிந்து கொண்டால் சாஸ்திர வாக்கியங்களில் விரோதம் சிறிதுமில்லை என்பது நன்றாய் விளங்கும
சங்கை
கர்மாவுக்கு அந்நியமாய் வாஸனை எனும் ஒன்றை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்? கர்மாவே இன்ப துன்பங்களைத் தருவது போல அவ்வின்ப துன்பத்திற்கு ஏதுவாய்க் காணப்படும் செய்கைகளிலும் ஏவி விடுகின்றது என்பது கூடாதோ?
இது உசிதமல்ல. நல்வினை தீவினைகளில் ஏவிக்கொண்டே கர்மாவே இன்ப துன்பங்களையும் தருகின்றதெனின், புண்ய கர்மாவினாலேயே இன்பமும் பாவத்தினாலேயே துன்பமும் வருகின்றது என்பது போல புண்ய கர்மாவினால் புண்ணிய கார்யங்களிலேயே ஸங்கற்ப காமாதிகள் உண்டாக வேண்டும் என்றும் அவ்வாறே பாப கர்மத்தினால் கெட்ட கார்யங்களிலேயே ப்ரவ்ருத்தி ஏற்பட வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகிறது. அப்படியானால், சுகம் அனுபவிக்கின்றவர்கள் எல்லோரும் நல்ல கார்யத்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும், துன்பம் அனுபவிக்கின்றவர்கள் கெட்ட கார்யத்திலேயே  சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகின்றது.  ஆனால் உலகில் இந்த நியமம் காணப்படவில்லை. நல்ல கார்யங்களையே செய்து கொண்டு துன்பத்தையே அனுபவிக்கின்றதையும், கெட்ட கார்யங்களையே செய்து கொண்டு இன்பத்தையே அனுபவிக்கின்றதையும் காண்கின்றோம் அன்றோ? ஆதலால், ஸங்கற்பம் முதலிய செய்கைகளைச் செய்விப்பது ஒன்றும் இன்ப துன்பங்களைத் தருவது மற்றொன்றுமாக இருக்க வேண்டும் என்ற நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனது பற்றியே, கர்மாவிலும் வாஸனை வேறு என்று கொள்ள வேண்டியது ஆகின்றது.
சங்கை
கர்மா, வாஸனை என வேற்றுமைப் படுத்திப் பிரித்துச் சொல்லப் பட்ட இவ்விரண்டும் எதனால் வந்தது என்பதைக் கவனித்தால், இதற்கு முன் எடுத்த ஜன்மங்களில் செய்த செய்கையினாலேயே என்பது விளங்குகிறது. இங்ஙனம், இரண்டிற்கும் காரணம் ஒன்றாகவே இருக்கின்றமையால் இவ்விரண்டு கார்யங்களையும் (கர்ம வாஸனைகள் இரண்டையும்) ஒன்றே எனக்கொள்ளலாமே? உசிதம் இவ்வாறு இருக்க, கர்மா வேறு,  வாஸனை  வேறு என இரண்டையும், தனித்தனிப் பொருளாய்ச் சொல்லுவது ஏன்?
இச்சங்கை அவிவேகத்தாலேயே நிகழுவதாம். அதெப்படி என்றால்,  பூர்வ ஜன்மத்திய செய்கைகளே கர்ம, வாஸனை இரண்டிற்கும் ஹேதுவாயிருக்கினும் அச்செய்கைகளால் வருவது இரண்டு விதமாய்ப் பிரிவடைகின்றமையால், அவைகளை நாம் இரண்டாகவே விவேகித்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, சுருட்டு குடித்தல் புகையிலை போடுதல் முதலிய செய்கைகளால் கபால வறட்சி (cancer) முதலிய வியாதியொன்றும், மீண்டும் அவைகளை உபயோகிக்க வேண்டும் எனும் அப்யாஸப் பற்று மற்றொன்றுமாக இரண்டு விதமான விசேஷம் ஏற்படுவதுபோல, நல்வினை தீவினைகளைச் செய்தலால் ஏற்படும் விசேஷமும் இரண்டு விதமாய் பிறிகின்றது. அதாவது, ஜன்மாந்தரத்தில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களுக்கு மாத்திரம் ஹேதுவாகும் கர்மா ஒன்றும், மீண்டும் அதே கார்யங்களில் தூண்டிவிடுவதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரம் மற்றொன்றுமாம்.
ஒரு கார்யத்தை ஓர் தடவை செய்தாலும் அது ஓர் கர்மாவாய்விடும்.  ஓரே காரியத்தை பல முறை செய்தால் ஒழிய வாஸனை ஏற்படாது. கர்மாவினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். வாஸனையால் வரும் ஸங்கற்பத்தை விவேகத்தால் வென்று விடலாம்.  கர்மா மிகவும் பலமுடையது. வாஸனை அற்பமே. இங்ஙனம், இவ்விரண்டிற்கும் மிகவும் வித்தியாஸமிருக்கின்றது. ஆதலால் இவ்விரண்டையும் ஒன்றாகக் கொள்ள இயலவில்லை.  எனவே, கர்மா வேறு வாஸனை வேறு என்று சொல்லப்பட்டது.
சங்கை
வாஸனையே, ஸங்கற்பம் முதலியவைகளின் மூலமாக,  செய்கைக்கு ஏதுவாகின்றது என்று சொல்லப்பட்டதே.  அதெப்படி?
உதாரணமாக அழகிய மங்கை, ஆபரணம், விலை உயர்ந்த வஸ்திரம், ருசியாகிய கனி முதலிய பொருள்கள் தற்செயலாய் எதிர்ப்படும் போது, எதிரில் உள்ளதை எல்லாம் பார்க்கும் இயல்பினால், நேத்திரம் அவைகளை நோக்கவே, அசுப வாஸனையே விசேஷமாய் உள்ளவன் ஆனால், இவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன என அவைகளின் சிறப்பை ஸங்கற்பிப்பான். அந்த ஸங்கற்பத்திற்குச் சற்று நேரம் இடம் கொடுத்து விட்டானாயின், அவைகளை தான் அனுபவிக்க வேண்டும் என விருப்பம் உதிக்கும். அவ்விருப்பம் மேற்படின் பிறகு அவைகளை அனுபவித்தே தீருவது என்னும் நிச்சயம் உடையோனாய் அக்கார்யத்தில் பிரவர்த்திப்பான்.  இவ்வுண்மையானது,
विशयेश्वाविशेच्चेत स्सम्कल्पयति तद्गुणानु।
सम्यक्सम्कल्पनात्कामः कामात्पुम्शःप्रवर्ततम्॥
விஷயங்களில் சித்தஞ்சென்றால், அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்கின்றது. நன்றாய் ஸங்கற்பித்தால் விருப்பம் உதிக்கும்.  காமம் ஏற்படின் மனிதன் பிரவர்த்திக்கின்றான்.
என சங்கர பகவத்பாதர் முதலிய பெரியோர்களால் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.
விவேகிக்கு அசுப வாஸனை சற்று குன்றியிருக்கும் ஆகையால் அவ்விஷயங்கள் எதிர்படும் போதே கண் பார்த்தாலும் பிறகு அவன் அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்க விடாமல் மனஸை நிக்ரஹித்து மற்றோர் நல்ல விஷயத்தில் செலுத்துவான். அங்ஙனமாயின், அவ்வசுப வாஸனை யாதும் செய்வதற்கு இன்றி அடங்கிப் போகின்றது. வாஸனையால் செய்கை நிகழுவதும் அதனை நிக்ரஹித்தலும் இவ்வாறே.
வாஸனையானது சுபம் அசுபம் என்று இரு வகையாகும். பூர்வம் பாவங்களையே அடுத்தடுத்து செய்திருந்தால் அசுப வாஸனையும், புண்ணியங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும், பூர்வம் பாவங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும் ஏற்பட்டு சித்தத்தில் பதிந்து கிடக்கும். பூர்வம் சுபவாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கினும் இப்போது அஸத் ஸஹவாஸம் முதலியவைகளைச் செய்தால் அது குன்றி அசுப வாஸனையே பலத்து விடும். அல்லது பூர்வம் அசுப வாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கின், இப்போது செய்யும் ஸத்ஸஹவாஸம் முதலியவைகளால் அது குன்றி, சுபவாஸனை பலத்து விடும்.   ஆதலால், அசுப வாஸனையை தடுத்து சுபவாஸனையின் வழியே நடக்க வேண்டும். 
இங்ஙனம்....
वासनाच्चिधाप्रोक्ताशुद्धाचमलिनाचसा।
वासनौघेनशुद्धेन तत्र चेद्नुनीयसे तत्क्रमेनाशुतेनैवपद्मप्राप्यसि शाश्वतम्।
अथचेद्शुभौ भाव स्त्वाम्योजयति संकटे।
प्राक्तन्स्तद्सौयत्राज्जेतव्यौ भवतास्वयं॥
வாஸனை சுத்தம் மலினம் என்று இருவகையாம். சுத்த வாஸனைத் தொகுதிகள் நல் வழியில் ஏவும். அங்ஙனம் ஏவும் போது அவ்வழி நடப்பாயாயின், கிரமமாக அழிவில்லாத பதத்தை அடையலாம். அசுப வாஸனையானது கெட்ட காரியத்தில் ஏவும். அப்படி ஏவும் போது அந்த பூர்வ வாஸனையை பலமான முயற்சி கொண்டு உன்னால் வென்று போடத் தக்கது.
என்பது முதலிய சுலோகங்களால் யோக வாஸிஷ்டம் முதலிய நூல்களில் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.
சுப வாஸனையின்படி நடந்தாலும், அல்லது அசுப வாஸனையின்படி நடந்தாலும் இப்போது வரும் இன்ப துன்பம் வந்தே தீரும். அது மாறுவதில்லை. ஏனெனின் இந்த சரீரம் கர்ப்பத்தில் உற்பத்தியாகும் போதே  $இச்சரீரத்தினால் இந்த இந்த ஸமயத்தில் இந்த இந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும்$ என இவனது பூர்வ கர்மங்களுக்கு தக்கபடி ஈசனால் ஆஜ்ஞை செய்யப்பட்டு விட்டது.  அதை மீறி நடக்க எவராலும் இயலாது.  ஈசாக்ஞை மிக்க பலமுடையது. ஆதலால், அற்ப யோக்கியதை உடைய பசுக்களாகிய இச்சீவர்களால் அதன்படி எப்போது எவ்விதமான இன்ப துன்பம் வருமோ அப்போது அதற்குட்பட்டே நடக்க வேண்டும்.  இவ்வாறு, நல்லதை செய்தாலும் கெடுதியைச் செய்யினும் இப்போது வரும் பயன் ஒன்றே எனின் எதைச் செய்வது நலம் என்று யோசிக்க வேண்டும்.  ஒன்றும் செய்யாமல் ஒருவனும் ஓர் க்ஷணமும் இருக்க இயலாது. குரங்குக்குப் போல எப்போதும் யாதானும் ஓர் சேஷ்டை இருந்து கொண்டேயிருக்கும்.
 नहि कश्चित् क्षणमपि जातु तिश्मत्यकर्मकृत्।
कर्यतेह्यवशः कर्म सर्वः प्रकृति जैर्गुणैः॥
ஒருவனும் ஓர் க்ஷணமும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க மாட்டான். எல்லோரும் பிரகிருதியால் வரும் குணங்களால் அவசமாக எதனையேனும் செய்து கொண்டேயிருக்கின்றனர்.
என பகவானால்  அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.
இங்ஙனம் இருத்தலால், மனிதர் எதனை செய்வது நலம் என யோஜிப்போமானால், சுப வாஸனையின் வழி நடக்க வேண்டும் என்று அறியப்படுகின்றது. அசுப வாஸனையின் வழி நடந்து தீமையைச் செய்தால் இச்செய்கையே பாவமாய் முடிந்து மறுமையில் துன்பத்திற்கே ஏதுவாகும். சுபவாஸனையின்படி நடப்பதோ என்றால், அதுவே புண்ணியமாய் வந்து மருமையில் இன்பத்தையே தரும்.  ஆதலால், மனிதர் அசுபவாஸனையின்படி நடக்கக் கூடாது என்பதே விவேகம்.
சுபவாஸனையின்படியே நடக்கும் போது ஓரோர் சமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுப வாஸனைகள் பல ஓருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்கப் பலமாக ஏவுவதும் உண்டு.  தீரர்  அதற்கு சிறிதும் சலியாமல், திட விவேகத்தால் அவைகளைத்  தகைந்து வென்று போடுவார்.  சொற்ப காலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸம் எனக்கண்டு அவைகளை நிறுத்தி யிருக்கினும் ஓரோர் சமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது.  அது, பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் ஏற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?  அற்ப கால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனை ஏற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும் ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் ஏற்பட்டிருக்கம் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸினில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்கக் கூடும்? 
नहि कश्चित् क्षणमपि जातु तिश्मत्यकर्मकृत्।
कर्यतेह्यवशः कर्म सर्वः प्रकृति जैर्गुणैः॥
ஒருவனும் ஓர்க்ஷணமும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கமாட்டான். இங்ஙனமிருந்தால் மனிதர் எதனைச்செய்வது நலம் என யோஜிப்போமாயின் சுபவாஸனையின் படியே நடக்க வேண்டுமென்பது அறியப்படுகின்றது. அசுபவாஸனையின் வழி நடந்து தீமையைச் செய்தால் இச்செய்கையே பாவமாய் முடிந்து மறுமையில் துன்பத்திற்கே ஏதுவாகும்.  சுபவாஸனையின்படி நடப்பதோ எனின் அதுவே புண்ணியமாய்வந்து மருமையில் இன்பத்தையே தரும்.  ஆதலால் மனிதர் அசுபவாஸனையின்படி நடக்க்க்கூடாது என்பதே விவேகம்.


புஸ்தகம்:  விதி பெரியதா?  மதி பெரியதா?
பாகம் 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்? ஐ இங்கே முதலில் பார்த்தோம்.
இப்போது:
பாகம்: 2  கர்மா, வாஸனையின் காரியங்கள் (ஸத்காரியத்திலும் துக்கம் ஏன்? கெட்ட நடத்தையிலும் சுகமடைவது ஏன்)
சுபவாஸனையின்படியே நடக்கும் போது, ஓரோர்ஸமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுபவாஸனைகள் பல ஒருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்க பலமாக ஏவுவதும் உண்டு. தீரர் அதற்கு சிறிதும் சலியாமல் திட விவேகத்தால் அவைகளை தகைத்து வென்று போடுவார்.  சொற்பகாலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸமெனக் கண்டு இனி இவ்வப்பியாஸம் கூடாதென்று உறுதிகொண்டு அவைகளை நிறுத்தியிருக்கினும் ஓரோர் ஸமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது.  அது பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் எற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?
அற்பகால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனையேற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும், ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் எற்பட்டிருக்கும் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸனில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்க்க் கூடும்?
அப்படிப்பட்ட வாஸனைகள் அசுப காரியங்களில் ஏவும்போது மனிதருக்கு அவைகளை நிக்ரஹிப்பது அஸாத்தியம் என்றே தோன்றும்.  ஆனால், அது தவறேயாம். அதற்குத் தக்கபடி மிகவும் திடமாகிய முயற்சியால் அவைகளை வென்று போடலாம் என்பது நிச்சயம். இது வரையிலும் வாஸனையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.
கர்மாவாவது: இதற்கு முன் எடுத்திருந்த அளவற்ற ஜன்மங்களில் மனுஷ்ய ஜன்மங்களும் எவ்வளவோ ஏற்பட்டிருக்க கூடுமன்றோ? மனுஷ்ய ஜன்மங்களில் செய்யப்பட்ட நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் அப்போதைக்கப்போது மனஸினில் மிக்க நுட்பமாய் பதிந்து போகின்றன. அவை ஸ்வர்க்கத்திலாவது நரகத்திலாவது, மனுஷ்யப் பிறவியிலாவது, காலாந்தரத்தில் தத்தம் பயனான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன. அவ்விதம் இன்பதுன்பங்களைத் தரும் மனஸினிலுள்ள பதிவே கர்மா என்பதாம்.
சங்கை: மனுஷ்ய ஜன்மத்தில் செய்யப்படும் செய்கைகளும் கர்மாக்களாகின்றன என்பது கூடாதோ?
கூடாதென்க.  ஏனெனின், செய்கை மாத்திரத்தினாலேயே கர்மா ஏற்படும் என்பதல்ல.  மற்று யாதெனின் இது புண்ணியம், இது பாபம் எனப் புண்ணிய பாபங்களில் பகுத்தறிவுள்ளவர் செய்யும் செய்கைகளே கர்மாக்களாகும் என்பதே சாஸ்திரங்களின் மர்மம்.
இவ்விதம் புண்ணிய பாபங்களின் பகுத்தறிவோடு கர்த்திருத்துவாதி பாவனைகளுடன் செய்யப்பட்டுள்ள நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் செய்யப்படும்போதே அறிவினில் பதிவு ரூபமாகுந் தன்மையைப் பெற்றுக் காலாந்தரத்தில் கர்மாக்களாய் வந்து இன்ப துன்பங்களுக்கு ஏதுவாகின்றன. 
இக்கருமங்கள் பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமி என முவ்வகைப்படும். அதெப்படி எனின், இதற்கு முன் எடுத்திருந்த மனுஷ்ய ஜன்மத்தில் லக்ஷம் கர்மா செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம்.  அவைகளில் ஓர் கொடும் பாபகர்மம் பக்குவப்பட்டுப் பலகோடி நரகயாதனையை அளித்தது.  அதன் பிறகு மற்றோர் கர்மா பரிபக்குவப்பட்டு கிருமி கீடாதி பலஜன்மங்களைத் தந்தது. அதன் பிறகு மற்றோர் கர்மா பக்குவப்பட்டு பசுவாதி ஜன்மாவைத் தந்தது.   இங்ஙனம் மூன்று கர்மங்களின் பயனை அனுபவிக்கவே நான்காவது ஓர் பெரிய புண்ணிய கர்மா பக்குவப்பட்டு வந்து அரியதாகிய இம்மனிதப் பிறவியைத் தந்தது. இங்ஙனம் மனிதப்பிறவியை மாத்திரம் தந்து அதனோடு அக்கருமம் முடிந்து போகவில்லை. 
இந்த தேஹம் எவ்வளவு சுவாஸம் விடவேண்டியது என ஈசாக்ஞையின் படி நியதாமாய் உள்ள சுவாஸத்தையும் தந்து, இத்தேஹம் தோன்றியது முதல் மரிக்கும் வரையிலுள்ள காலத்தில் எந்தெந்தஸமயத்தில் எந்தெந்த இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென நியதமாகிய இன்ப துன்ப போகத்திற்கும் ஏதுவாகின்றது.
இங்ஙனம் இதற்குப் பூர்வம் மனுஷ்ய ஜன்மத்தில் ஸம்பாதிக்கப் பட்ட லக்ஷங்கர்மாக்களில் ஏற்கனவே அனுபவத்தினால் மூன்று கர்மங்கள் ஒழியவே நான்காவதாகிய கர்மாவினால் இம்மனுஷ்ய ஜன்மாவைப் பெற்று இன்ப துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம் அன்றோ.   இந்த கர்மமே ப்ராரப்தம் என்பதாம்.  ப்ர, ஆரப்தம் எனின் பயன் தரத்தலைப்பட்டுள்ளது எனப் பொருள். இந்நான்கு கர்மங்களுக்கு அந்நியமாய் இனி மறுபிறவிகளில் பயன் தருவனவாயுள்ள 99,996 கர்மங்களும் ஸஞ்சிதங்கள் எனப்படும்.  இம்மனித ஜன்மத்தைப் பெற்று இப்போது புதிதாய்ச் செய்கிறோம் அன்றோ.  அங்ஙனம் செய்யப்படும் கர்மங்களே  ஆகாமி கர்மங்கள் என்பனவாம்.
ஸஞ்சிதங்களையும், ஆகாமிகளையும் ஞானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் ஒழித்துப் போடலாம். ஆயினும், இந்த மனுஷ்ய தேகத்தைத் தந்து இதனால் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தரத் தலைப்பட்டுள்ளதாகிய ப்ராரப்த கர்மம் மாத்திரம் ஞானத்திலாவது மற்றெதனாலாவது துலையாது. இதனை அனுபவித்தே ஒழிக்க வேண்டும்.
இவன் இப்போதிய செய்கைகளை நல்லவைகளாகவே செய்தாலும் அல்லது தீயவைகளாகவே செய்தாலும் அல்லது ஹடங் கொண்டு வீம்பு பிடித்துச் சும்மா இருந்தாலும் ப்ராரப்தகர்மத்தின்படி எவ்வின்ப துன்பம் வர வேண்டுமோ அது வந்தே தீரும். அப்படி வரும் இன்ப துன்பங்கள் இப்போதிய செயல்களின் பயனென மூடர்களுக்குத்  தோன்றும்.  இப்போதிய செய்கைகளுக்குப் பயன் மறு பிறவிகளில்தான் வரும்.  இப்போதிய இன்ப துன்பங்களெல்லாம் பூர்வ கர்மப் பயனே என்பது நிர்ணயம். 
இவ்வுண்மையே
एवं हठाच्च दैवाच्च स्वभावात्कर्मणस्तथा।
यानि प्राप्नोति पुरुषस्तत्फलम् पूर्वकर्मणा॥
இங்ஙனம் ஹடத்தினாலும் தைவத்தினாலும் ஸ்வபாவத்தினாலும்  செய்கையினாலும் எந்த இன்ப துன்பங்களை அடைகின்றானோ அவை பூர்வ கர்மங்களின் பயனே
என மஹாபாரதம் ஆரண்ய பர்வாவில் சொல்லப்பட்டுள்ளது.  ப்ராரப்த கர்மத்தின்படி  ஸுகமாவது துக்கமாவது வரத்தயாராய் இருக்கும்போது மனிதன் வாஸனா வசமாய் யாதானும் ஓர் காரியத்தைச் செய்யக்கூடும்.  அப்படிச் செய்யவே ப்ராரப்த கர்மா ஆயத்தமாய் வந்து விடுகின்றது. உண்மை இவ்விதம் ஆதலால் இப்போது வரும் இன்ப துன்பத்திற்கு ப்ராரப்த கர்மமே முக்கிய ஹேதுவாய் இருக்கின்றது.
இங்ஙனம் அறிய வேண்டியதாய் இருக்க, மனிதர் அவிவேகத்தால் இவ்வாறு அறியாமல் இப்போது நிகழும் சுக துக்கங்கள் எல்லாம் இப்போது செய்யும் காரியங்களின் பயன் என்றே எண்ணுகின்றனர்.
இப்போது செய்யும் செய்கைகளே ஏது எனக் கொண்டோமானால், உலகில் நல்ல காரியங்களைச் செய்வோர் எல்லாம் ஸுகமும், கெட்ட காரியங்களைச் செய்வோர்கள் எல்லோருக்கும் துக்கமுமே வரவேண்டும் என்றே ஏற்படுகின்றது. ஆனால், உலகில் அப்படிப்பட்ட நியமத்தைக் காணோமே? நல்ல காரியங்களைச் செய்துகொண்டு துக்கத்தை அனுபவித்தலையும், கெட்ட காரியங்களைச் செய்துகொண்டு சுகத்தை அனுபவித்தலையும் காண்கின்றோமன்றோ?  இதற்குக் கதி சொல்லவழியில்லாமல் போகின்றது.  ஆதலால் இப்போது வரும் இன்பதுன்பம் பூர்வகர்ம்ப் பயனே என்றும், இப்போது செய்யும் புண்ணிய பாபங்களுக்கு ஜன்மாந்திரத்தில் பயன் என்றும் அறிந்து கொள்ள வேண்டியது.
சங்கை:  ப்ராப்த கர்மாயத்தமாகவே இன்ப துன்பம் வருமென்று சொல்லப்பட்டதே. இன்ப துன்பமாவது மானஸிகமாகிய விருத்தியே அன்றோ? ப்ராரப்த ஆயத்தமாக வருவது இப்படிப் பட்ட மானஸிகமாகவேயுள்ள விருத்தி மாத்திரமா? அவ்விருத்திக்கு ஸாதனங்களாகிய செல்வம் வியாதி, தாரித்திரியம் முதலியவைகளும் கூட ப்ராரப்தாயத்தமாகவே வருவனவா? செல்வம், வியாதி, தாரித்திரியம் முதலியவைகளுக்கு ஏதுவாய் காணப்படும் வியாபாரம், உத்தியோகம், கெட்ட நடத்தை, வ்ரத-உபஸ்தான-தர்மங்கள் முதலியவைகளும் கூட பராரப்தாயத்தமாகவே வருவனவா?
இன்ப துன்பத்திற்கு நேரில் ஸாதனமான செல்வம், வியாதி, தாரித்திரியம், முதலியவைகள் மாத்திரமே ப்ராரப்தாயத்தமாக வருவன.  அவைகளுக்கும் ஸாதனங்களான வியாபாரம், துர்மார்க்கம், வ்ரத-உபஸ்தான தர்மங்கள் முதலியனவும் ப்ராரப்த கர்மாயத்தமாய் வருவன என்பது தவறேயாகும்.  அவைகளையும் ப்ராரப்தாயத்தமாக வருவன என்போமானால்,  இத்தகைய  வியாபாரம் கூடாது.  துர்மார்க்கம் செய்யாதே. வ்ருத-உபஸ்தான-தர்மங்களைச் செய் என்பது முதலிய விதிவிலக்குகள் வீண் என்றே முடியும். ஏனெனின் ப்ராரப்தாயத்தமாக வருவதைத் தடுக்க எவராலும் இயலாதென சாஸ்திரங்கள் கூறுகின்றமையால் அதே சாஸ்திரங்களில் துர்மார்க்கம் முதலியவை கூடாது, வ்ருத-உபஸ்தான-தர்மாதிகளைச் செய் என்று சொல்லியிருக்கின்றமையால், துர்மார்க்க, வ்ருதோபஸ்தான தர்மாதிகளை மனிதர் தம் இச்சையால் செய்யவும், தவிர்க்கவும் கூடும் என்று அறியப்படுகின்றது.  தம்மிச்சையால் செய்யப்படுவதும் தவிர்க்கப் படுவதுமாகிய செய்கைகள் எல்லாம் வாஸனையாலேயே வருவனவன்றி ப்ராரப்த்தால் அல்ல என்பதே சாஸ்திரங்களின் நிர்ணயம்.
பூர்வம் தேஹத்தால் செய்யப்பட்ட பாப புண்ணியங்கள் பின்வரும் ஜன்மத்தில் தேக மூலமாகவே பயன் பட்டு துக்க சுகங்களைத் தரும்.  இந்திரியங்களால் செய்யப்பட்ட கர்மங்கள் இந்திரிய மூலமாகவும், மனோ மாத்திரத்தினால் செய்யப்பட்ட கருமங்கள் மனோ விருத்தி மாத்திரத்தினாலும், ஸ்வப்னாதிகளில் இன்ப துன்பங்களைத் தரும்.
உதாரணமாக ஒருவன் இன்றிரவில் சரீரத்தில் வ்ரணம் (காயம்) ஏற்பட்டு அதன் மூலமாய்த் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் ப்ராரப்த கர்மாயத்தமே தவிர, துன்மார்க்கம் செய்ததனாலேயே அந்த வ்ரணம் ஏற்பட வேண்டும் என்றாவது, அல்லது ஸந்மார்க்கத்தில் சென்றே அங்ஙனமாக வேண்டும் என்றாவது அவனது கர்மாவினால் விதிக்கப் பட்டிருக்கும் என்பதல்ல.  ரக்த காயம் ஏற்பட்டு துன்புற வேண்டும் என்பது மட்டுமே கர்ம நியதம்.  ஆனால், அது ஆலயாதிகளுக்கு ஸ்வாமி தரிசனம் செய்யப் போவதில் நிகழ்ந்தாலும் நிகழலாம்.  அல்லது, துர்மார்க்கம் செய்யப்போன இடத்தில் அடி, சிகைச்சேதம் முதலிய சிக்ஷைகளால் நிகழ்ந்தாலும்  நிகழலாம்.   துர்மார்க்கம் செய்யப்போவதோ, ஸத்காரியம் செய்யப்போவதோ இவை முதலியன அவரவர் வாஸனையாலேயேயாம் என்று அறிக.  வாக்கு மனக்காயங்களால் செய்த கர்மாவின் பயனை முறையே வாக்கு மனக் காயங்களாலேயே அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் பூர்வ கர்ம நியதம் என்பதையே நிர்ணயமாகக் கொள்ள வேண்டும்.  இவ்வுண்மையானது மஹாபாரதம் சாந்திபர்வம் மனு ப்ருஹஸ்பதி ஸமாகம ப்ரகரணம் முதலிய  இடங்களில்...
यद्यच्छरीरेण करोति कर्म शरीरयुक्तस्सुपश्नुते तत्।
शरीरमेवायतनं सुखस्य दुःखस्य चाप्यायतनं शरीरं॥
वाचातुयत्कर्म करोतिकिम्चिद्वाचैव सर्वम्समुपाश्नुतेतत्।
मनस्तुयत् कर्म करोति किंचित् मनस्थ् एवायमुपास्नुतेतत्॥
சரீரத்தால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனைச் சரீரத்தாலேயே அனுபவிக்க வேண்டும்.  சரீரமே சுகத்திற்கும் துக்கத்திற்கும் ஆயதனமாம்.  வாக்கினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை வாக்கினாலேயே அனுபவிக்க வேண்டும்.  மனஸினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை மானஸிக விஷயத்தாலேயே அனுபவிக்க வேண்டும்
என்பது முதலிய வாக்கியங்களால் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.
ஒருவன் சுரோத்திரம் (காது) எனும் இந்திரியத்தினால் பூர்வ ஜன்மத்தினில் ஏதோ ஓர் புண்ணியம் செய்திருந்தான் என வைத்துக் கொள்வோம்.  அதன் பயன் இப்போது அவ்விந்திரிய மூலமாகவே அனுபவிக்கப் படும் சுகமாயிருக்க வேண்டும்.  அம்மட்டும் ப்ராரப்த கர்மமேயன்றி அது துர்மார்க்கப் பாட்டைக் கேட்டே ஏற்பட வேண்டும் என்றாவது, ஸத்வாக்கியங்களை சிரவணம் செய்தே வரவேண்டும் என்றாவது நிர்ணயிக்கப் பட்டதல்ல.   துர்மார்க்க பாட்டையோ ஸத் வாக்கியங்களையோ சிரவணம் செய்தல் அவரவரது வாஸனையாலேயேயாம்.   இங்ஙனமே மற்ற இந்திரியங்களால் நிகழும் அனுபவத்திலும் ஊஹித்துக் கொள்க.
சங்கை:  ப்ராரப்த கர்மா இந்த தேஹத்தையும் இதனால் ஜீவிக்க வேண்டிய காலத்தையும்  அப்படியே வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தருகின்றது என்று சொல்லப் பட்டதே?  தேஹமே ப்ராரப்தம் என்று பெரியோர் சொல்லுகின்றனரே?  அம்மட்டோடே விடாமல்,  அது தேஹம், ஆயுள், போகம் என முவ்வகையாய் பயன் படுகின்றது என்று ஏன் சொல்ல வேண்டும்?  
அன்றியும்,  இம்மனித தேஹமானது  ஓர் பெரும் புண்ணியத்தினால் வந்தது என்று சொல்லப் பட்டதே.  அவ்வாறு புண்ணியத்தின் பயனாக வந்த இந்த தேஹத்தினால் வாழ் நாட்களின் இடையில் துக்கங்களையும் அனுபவிக்கும்படியாதல் ஏன்?  புண்ணிய மயமாகிய தேஹம் தோன்றியது முதல் அழியும் வரையில் இன்பத்தையே அனுபவித்தல் அல்லவோ உசிதம்?  அப்படியிருக்க பாபப் பயனாகச் சொல்லப்பட்ட துன்பத்தையும் அனுபவிக்கக் காண்கின்றோமே.  இதனை எப்படி  ஒவ்வுவது?
விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்....விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்....
கர்மாவானது  தேஹம், அது ஜீவிக்கும் ஆயுள், இன்ப துன்ப போகம் என முவ்வகையாய் பிறிக்கப் படுகின்றது.  இத்தேஹம் ஒரு பெரும் புண்ணியத்தினால் வந்தது என்பதும் உண்மையே. ஆனால்,  ஓர் பெரும் புண்ணியம் செய்யும் காலத்தின் இடையிலேயே பல ஆவாந்தரமான  (இடையிலான) பாப புண்ணியங்களையும் செய்யக் காண்கிறோம்.
உதாரணமாக, ஓர் பிரபு சிவாலய ஜீர்ணோத்தாரம், தடாகம்,  நந்தவனாதிகளை  ஸ்தாபித்தல்  முதலிய பெரும் புண்ணியத்தைச் செய்து கொண்டிருக்கும் காலத்திலேயே பிறன் பொருளைக்கவர்தல், பிறன் பெண்டீரோடு கூடுதல், கூலியாள்களின் கூலியைப் பிடித்துக் கொள்ளுதல் முதலிய அவாந்தரமான பாபங்களையும் செய்யக் கூடுமன்றோ?  அவ்வாந்தர பாபங்கள் ஜன்மாந்தரத்தில் ஓர் முக்கிய கர்மத்தின் பயனை அனுபவிக்கும் காலத்தின் இடையிலேயே தத்தம் பயனான துன்பத்தைத் தந்துவிடும்.  ஓரே ஓர் கர்மாவினாலேயே இம்மனித  ஜன்மம் வருகின்றது என்று எண்ணக்கூடாது.  ஏதோ  முக்கிய கர்ம அவாந்தர கர்மங்களின் தொகுதியாலேயே வந்தது என்பதே உண்மை.  இவ்விழயத்தை  பதஞ்சலி தர்சனம்  (யோக ஸூத்ரத்தினில்(
காரணமுள்ளவரை கர்மத்தின் விபாகமானது ஜன்ம ஆயுள்,  போகம் எனும் முவ்வகையாம்
எனும் ஸூத்திரத்தின்பாஷ்ய வியாக்யாநங்களில் வியாஸர், வாசஸ்பதிமிரர்  எனும் இவ்விரு பெரியோர்களால் மிக்க விஸ்தாரமாக விசாரித்து நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது.  முக்கிய கர்மத்தின் இடையில் அவாந்தர கர்மங்கள் பயன்படுகின்றமை பற்றியே மனிதர் வாழ்நாள்களில் இன்ப துன்பங்களை மாறி மாறி அனுபவிக்கக் காண்கிறோம்.
சுப-ப்ராரப்தம்  பயன்படும்போது  சுபவாஸனையே முனையவேண்டுவது அல்லது அசுப-ப்ராரப்தம் வரும்போது  அசுபவாஸனையே முனைய வேண்டும் என்பது நியமம் அல்ல.  ப்ராரப்த கர்மா அசுபமாய் நேரும்போது அசுபவாஸனை நேருவதுண்டு.  ப்ராரப்தம், வாஸனை இவ்விரண்டும் ஓர்வகையாய் சுபங்களாகவேயாவது அசுபங்களாகவேயாவது நேருவதும் உண்டு. 
கர்மகதி, வாஸனாகதி  இவ்விரண்டின் விசித்திரத் தன்மையை உள்ளபடி தெரிந்து கொண்டவன் ஈசனே.
ஸத்குருவின் மொழியாலும்  சாஸ்திர  ஆராய்ச்சியினாலும் ஏதோ யான் தெரிந்து கொண்டதைச் சுருக்கமாகத் திருஷ்டாந்த வாயிலாக தெரிவிக்கலானேன்.
அதாவது, பிராரப்த  கர்மா அசுபமாகவும், வாஸனை  சுபமாகவும் நேரும்போது  அவ்வாஸனையின்படி நடப்பானாயின் வ்ருத-உபவாஸ-தான தர்மாதிகளைச் செய்து வியாதி, தாரித்திரியம் முதலியவைகளின் நிமித்தமாய்த் துன்புறலாகும்.     ப்ராரப்தம் சுபமும் வாஸனை அசுபமுமாக நேருபாயின்  பிறன் பெண்டீரோடு கூடுதல்,  பிறன் பொருளைக் கவர்தல் முதலிய காரியங்களில் சென்று  அந்த நிமித்தமாய் இன்பம் அனுபவிக்கலாகும்.
ப்ராரப்தம் வாஸனை இவ்விரண்டும் அசுபமாய் நேருமாயின் திருட்டு, பிறன் பெண்டீரோடு கூடுதல் முதலிய கெட்ட காரியங்களில் சென்று மானஹானி (அவமானம்), தண்டனைப் படுதல், பொருள் விரயப் படுதல்  முதலியவைகளின் நிமித்தமாகத் துன்புறலாகும்.  ப்ராரப்தம்-வாஸனை இவ்விரண்டும் சுபமாக  ஒத்துக்கொண்டால்  தீர்த்த யாத்திரை,  திவ்ய ஸ்தல தரிசனம் முதலிய நல்ல காரியங்களைச் செய்யப்போய் அப்படிச் சென்றவிடத்தில் ராஜ ஸ்நேஹம், உத்தியோகம்  முதலியவைகளின் நிமித்தமாய் இன்பம் அனுபவிக்கலாகும்.
இங்ஙனம்  உலகநடையைக் கொண்டு திருஷ்டாந்தங்களை ஊஹித்துக் கொள்ள வேண்டும்.
இவ்விதம் கர்மாவேறு,  வாஸனை வேறு என்பது வியக்தமாயிருக்க  இதனை அறியாகவர்களாய்  நான் யாது செய்வேன்?  எனது கர்மா  என்னைக் கெட்ட காரியத்தில் ஏவும்போது அதனை மீறி நடக்க என்னால் இயலுமா? என்று சொல்லிக்கொண்டே  கெட்ட காரியத்தைச் செய்து போடும் பலரைத் தற்காலம் விசேஷமாய்க் காணலாம்.  லௌகிகர் மட்டும் இங்ஙனம் என்பதல்ல.  தற்காலம் வேதாந்த  சாஸ்திரம் படித்தவரெனக் கருதப் படும் சாஸ்திரிகளும் இத்திரிபுணர்ச்சியைக் கொண்டே  கெட்ட காரியஞ் செய்வதைக் காணலாம்.  ஸங்கற்ப காமாதிகள்,  ஸூக துக்கம் ஆகிய இவையெல்லாம் ப்ராரப்த கர்மத்தாலேயே வருவன  எனும் இப்பெரும் மோஹம் தற்காலம்  மிகுதியாய் இருத்தலுக்குக் காரணம்  ஸரியான குருவினிடம்  செல்லாமையும் கிரமப்படி வேதாந்தம் ஓதாமையுமேயாம்.
வாஸனையை அங்கீகரியாமல்  ஸகலமும்  ப்ராப்த கர்மத்தாலேயே வருகின்றது எனக் கொள்வோமாயின் நியாயஸ்தலம்  (கோர்ட்) சிறைச்சாலை முதலியனவும்  வேத சாஸ்திரங்களும் வீண் என்றே ஏற்படும்.   ஏனெனின் மீற முடியாததாகிய ப்ராரப்த கர்மாவே  கெட்ட காரியத்தில் ஏவுகின்றபடியால்  அதன்படியே நடப்பவனாகிய இவன் பேரில் குற்றம் யாதும் இல்லையென்றே  ஏற்படுமாதலால்  குற்றம் செய்தவரைத் தண்டித்தல் நியாயமாகாது.  ஆதலால்  நியாயஸ்தலம்,  சிறைச்சாலை  முதலியது வேண்டியதில்லையன்றோ?   அன்றியும்,  மீறமுடியாததாகிய ப்ராரப்த கர்மாவானது  மோக்ஷத்தை  அளிப்பதாய் ஏற்பட்டிருக்குமாயின் மனிதன் எப்படியிருந்தாலும்  அது வந்தே தீருமன்றோ?   அப்படியாயின்  வேத சாஸ்திரங்களால் யாதும் பயனில்லை என்றே ஏற்படும்.  ஆதலால்  இப்படிப்பட்ட  அநௌசித்தியங்களை  யோஜித்தாலும் கெட்ட காரியங்களில் ஸங்கற்பம் உதிப்பது ப்ராரப்த கர்மத்தால் என்பது சுத்த பிசகு என்று நன்கு விளங்கும்.

No comments:

Post a Comment

நன்றி