Friday, 16 October 2015

சிவபெருமானுக்கு பிரதி மாத பெளர்ணமி அபிஷேகப் பொருள்களும் பலனும்

ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம் 
பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி

மஹா அன்னாபிஷேகம்

மஹா அன்னாபிஷேகம்




உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.
தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக - தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.
ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் எனும் ஹவிர் பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன.சிவனுக்குரிய ஹவிர் பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக் கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.
இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே.உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம்.
ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான்.
அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைஅனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம் பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி

அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும்.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!

Tuesday, 22 September 2015

சிலாதரும் நந்தியும்

சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார்.  அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார்

திருமாலை வென்ற மகரிஷி ததீசி


ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர்.  எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார்.

வாழ்வின் நிலையாமை


வாழ்வின் நிலையாமை
செல்வம், இளமை, யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு

(நெருநல் = நேற்று)
என்று நிலையாமையைச் சொல்லும் குறட் கருத்தின் விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது. நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ?”   என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்?  யாரும் வரமாட்டார்கள்.
“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”  என்றும்,

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்ல ஒரு பாடலிலே சொல்கிறார்.
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?
எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்.  சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.
“இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாம் இருப்ப – நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாம் இருக்கும் தான்”
இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம்.  அது பொய்.  நாம் போவது – நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆனால் ஆத்மஞானம் வந்த பிறகு “இருப்பது மெய் போவது பொய்” என்பது நமக்குத் தெரிந்து விடும்.  இந்த உலகத்தில் அழியாமல் இருப்பவையே மெய்யானவை. அழியப்போகின்றவை அத்தனையும் பொய்.  இந்த உடல் அழியும்.  நம் செல்வம் அழியும். உற்றார் அழிவர்.  உறவினர் அழிவர்.  நண்பர் அழிவர்.  நாம் பெற்ற  பட்டங்கள் அழியும்.  எனவே இவை எல்லாம் பொய்.  என்றும் இருப்பது நம் ஆத்மா.  ஆத்மா என்பது இறைவனின் ஒரு துளி. அந்த துளி தான் ஒவ்வொரு உயிரிலும் பரவி உள்ளது.  மரமானாலும் – விலங்கானாலும் –மனிதன் ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு.  அது தான் அழியாதது. கஷ்டநஷ்டங்களை இந்த உடல், மரம், விலங்குகள்  தாங்குகின்றன.  காரணம் அவைகளின் விருப்பங்கள்.  இரட்டைகளான இரவு-பகல், கஷ்டம்-நஷ்டம்,  இன்பம்-துன்பம்,  போன்றவற்றைக் கடந்தவன் இறைவன்.  ஆன்மா என்பதையும் இரட்டைகளைக் கடந்ததே.  எனவே பொய்யான இந்த உடல் மாள்வது திண்ணம்.
“இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்த கட்டை மீதில் இணைக்கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு”
என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார்.
எல்லர்ம் கிட்டும்.  இறைவனின் திருவடியை உளமாற நினைந்து அல்லும் பகலும் அனவரதமும் அவனைத் துதித்து வந்தால் மீண்டும் கருவில் வந்து பிறவாத நிலை வரும்.  பிறவிப் பெருங்கடலை நாம் நீந்தி இறைவன் திருவடியை அடைந்து விடலாம்.  பிறப்பு-இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்காது கரையேறலாம்.
எனவே ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் காரணம் என்பதை அறிந்து பற்றற்ற வாழ்வை நாம் மேற்கொள்வோம்.

Tuesday, 11 August 2015

அருகம்புல்லும் சிவபதமும்!



எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது. அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது.

இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது.

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி - தகவின்
அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்
கண்டீர் திருச்சிற் சபையானைத் தேர்ந்து

பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்.

சிற்சபையானை எதைக்கொண்டு அருச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து. பகுதி, தகுதி, விகுதி என்பதில்,

இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து "கு' (பகுதி, தகுதி, விகுதி). இதைக் கூட்டினால் மூன்று "கு' வரும். இதை இரட்டித்தால் ஆறு "கு' - அறுகு வரும். (அறுகு-அறுகம்புல்).

அருச்சித்தால் முன் ஆம்: அறுகம்புல் கொண்டு அருச்சித்தால் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) - பதவி என்பது வரும். (பதவி - சிவபதம்).

அது கடை ஆம்: பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால், கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று "தி' வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும். இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டுள்ளார்.

(நன்றி - தினமணி)

கடவுள் கண்ட முதல் நூல்!



தென்றமிழ் நாட்டில் மிகப்பழைய காலத்தில் கடவுளுண்மை யுணர்ந்த நான்கு அறிவர்கள் பிறப்பிறப்பு அற்று வீட்டையடைவதற்கு ஏதுவாகிய ஒளி நெறியைக் காண முயன்றனர். (அறிவர்களுள் சித்தர் என்பார் உலகப்பயன் தரத்தக்க மருந்து மந்திரம் முதலிய பல கலைகளையும் வளர்த்தனர். மேற்சொன்ன நான்கு அறிவர்கள் கடவுளை நினைந்து ஓர் ஆலமரத்தடியில் தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி ஒளிநெறியை அறிவுறுத்தினர். அஃது
“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
என்று திருஞானசம்பந்தர் திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த் தவத்தோன்”
என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும்.
நோக்கத்தை வைத்தே நம்முடைய சமயத்துக்குப் பேர் ஏற்பட்டுள்ளது. திரு என்பது வீட்டின்பத்தைக் குறிக்கும். “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்ற சுந்தரர் திருவாக்கில் திரு என்ற சொல் அப்பொருளில் வந்தது காண்க. திருநெறி என்பது தமிழர் சமயத்தின் பெயர். அதனைச் செந்நெறி யென்றுங்கூறுப. “திருநெறிய தமிழ்,” “செந்நெறிக்கே ஏற்றுந்தகையன்” என வருதல் காண்க.

அறம், பொருள் இன்பங்களைப் பற்றிய ஒளிநெறியைத் திருவருளால் அறிந்த நான்கு அறிவர்களும் தத்தம் மாணவர்களுக்கு வெவ்வேறாக அதனை அறிவுறுத்தினர். அவர்கள் வாய்மொழியாற் கூறிய அருள் நூல்கள் நான்மறை எனப் பெயர்பெற்றன. கடவுளருளால் அவை உணர்த்தப் பட்டமையின் அவை கடவுள் கண்ட முதல் நூல் எனப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைப்பற்றிப் பேசின.

அறத்தாற் பொருளீட்டி உலக இன்பத்தைத் துய்த்து அதன் நிலையாமையைக் கண்டு அதனை வெறுத்து வீட்டின்பம் நாடுதலே மனித வாழ்க்கையுள் முக்கிய நோக்கமாகும். அகப்பொருள் நூலுக்கு இன்பங்கூறுதல் முக்கியமாதலின், ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என இன்பத்தை முதலில் எடுத்தோதினர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

-    (தமிழர் சமயம் – கா.சு.பிள்ளை எழுதிய நூலிலிருந்து)